ஶ்ரீராமநாமம் நாளும் சொல்வோம்... நல்ல பலன்களை நாளும் பெறுவோம்! #SriRamaNavami

ஶ்ரீராமநாமம் நாளும் சொல்வோம்...  நல்ல பலன்களை நாளும் பெறுவோம்.

இன்று அவதாரப் புருஷன் ஶ்ரீராமனின் பிறந்தநாள். இதை ஶ்ரீராம நவமி என நாடுமுழுவதும் பக்தர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
ராமாயணமும் மகாபாரதமும் நம் பரத கண்டத்தின் இரண்டு கண்களாகப் பார்க்கப்படுகின்றன. இந்தியாவின் நதிகள் எங்கெல்லாம் சென்று நம் மண்ணையும் நம்மையும் குளிர்விக்கின்றனவோ அதேபோல்  இந்த இரண்டு இதிகாசங்களும் நம் எல்லோராலும் அறியப்பட்ட ஒன்றாகவும் இருக்கின்றது. நம் அனைவரையும் இணைக்கின்ற ஒன்றாகவும் இருக்கின்றது. 

ஶ்ரீராமநாமம்

இரண்டுமே திருமாலின் அவதாரங்கள்தான் என்றாலும் ராமாயணத்துக்கும் மகாபாரதத்துக்கும் அடிப்படையில்  ஒரு சிறு வேறுபாடு உண்டு. ராமருக்கு வாழ்க்கையில்  அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது தெரியாது. ஆனால், கிருஷ்ணருக்கு அடுத்து என்ன நடக்கப்போகிறதென்பது தெரியும். இருவருமே அசுரர்களை - தீய சக்திகளை அழிக்கப் பிறந்ததால், ராமர் நவமியிலும் கிருஷ்ணர் அஷ்டமியிலும் பிறவி எடுத்தனர்.

சீதா ராமர்

தசரதச் சக்ரவர்த்திக்கும் கோசலைக்கும் புத்திரபாக்கியம் இல்லாததால், தவமாய் தவமிருந்து, புத்திரகாமேஷ்டி யாகம் செய்து பிறந்த தவப்புதல்வன், ஶ்ரீராமபிரான். பூமியில், ஒரு மனிதன், தன் வாழ்க்கையில் எத்தகைய அறவாழ்வு வாழவேண்டும் என்பதற்கு உதாரணபுருஷன்.

பட்டாபிஷேகம்

தாய்தந்தைக்கு நல்ல மகனாகவும் தம்பிகளுக்கு நல்ல அண்ணனாகவும், மனைவிக்கு அன்பான கணவனாகவும், அடைக்கலம் என வந்தவருக்கு காத்து ரட்சிப்பவராகவும், நாட்டு மக்களுக்கு நல்ல அரசனாகவும், தன்னுடைய எதிரிக்கும் சமமரியாதை செய்து போரிடும் தலைவனாகவும் திகழ்ந்து எல்லோரிடமும் தன்னுடைய  பாத்திரத்தையும் பங்களிப்பையும் தர்ம நெறி சிறிதும் பிறழாமல் வாழ்ந்து காட்டியவர்.

முதல் நாள் பட்டாபிஷேக ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க மறுநாள் சிற்றன்னை கைகேயியின் வரத்தால் வனவாசம்  செல்லும் நிலை. இரண்டையும் புன்முறுவலுடன்  ஏற்றவர் ராமர். வனவாசம்  புறப்பட்டுப் போய் பட்ட துன்பங்களும், சீதாப் பிராட்டியை பிரிந்து தவித்ததும், அவரை ராவணனிடம் இருந்து மீட்டதும்   சொல்லி முடியாதவை. ஆனாலும் எதற்கும் கலங்காமல், வெற்றிகொண்ட    பகவான் ஶ்ரீராமன், மனிதராகப் பிறந்தவர்கள் எப்படி வாழவேண்டும் என்பதை மனிதகுலத்துக்கு தன் வாழ்க்கைமுறையால் வாழ்ந்து காட்டிய  முன்மாதிரி.

பட்டாபிஷேகம்

ஶ்ரீராமனின் பிறந்த நாளான இன்று ஶ்ரீராமனை எண்ணி விரதமிருந்து பூஜை செய்து அவரது நாமத்தை உச்சரித்தால், வாழ்வில் இருந்த துன்பம் விலகும். வீட்டுக்கு லட்சுமி கடாட்சம் ஏற்படும்.

மாலையில் அருகிலிருக்கும் பெருமாள் கோயிலில் நடைபெறும் ராம நாம சங்கீர்த்தன பஜனைகளில் பங்கேற்கலாம். ஶ்ரீராம நாமத்தை எங்கு உச்சரிக்கின்றோமோ அங்கெல்லாம் மறைவாக நின்று ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.


எஸ்.கதிரேசன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!