குருத்தோலை கையில் எடுத்து நான் ஓசன்னா பாடிடுவேன்..! #PalmSunday

கிறிஸ்தவர்களின் நாற்பது நாள் தவக்காலத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுவது குருத்தோலை ஞாயிறு. கிறிஸ்தவர்களின் புனித நூலான விவிலியம் என்னும் பைபிளில் சொல்லப்பட்டபடி, இயேசுகிறிஸ்து துன்பத்துக்கு ஆளாகி இறப்பதற்கு ஏறக்குறைய ஒரு வாரத்துக்கு முன் எருசலேம் நகருக்குள் நுழைந்தாராம். அப்போது, இயேசு ஒரு கழுதைக் குட்டியின்மேல் ஏறி அமர்ந்து வந்தார் என்று சொல்லப்படுகிறது. இயேசுகிறிஸ்து மனித குலத்துக்குத் தாழ்மையைக் கற்றுத் தருவதற்காக எருசலேம் நகரில் கழுதையின்மேல் பவனியாக வந்ததைக் குறிக்கும் வகையிலேயே இந்தக் குருத்தோலை பவனி நடைபெறுகிறது. 

குருத்தோலைசங்ககாலத்தில் தமிழர்கள்தம் வெற்றியை வாகைப்பூக்களைச் சூடியபடி தாயகம் திரும்புவார்களாம். ரோமானியர்கள், வீர விளையாட்டுகளில் வெற்றிபெற்றால் ஒலிவமரத்தின் கிளைகளைக் கையில் ஏந்திக்கொண்டு தெருக்களில் ஊர்வலமாக வருவார்களாம். இந்தப் பழக்கம்தான் இஸ்ரவேல் மக்களாகிய யூதர்கள் வாழ்க்கையிலும் தொற்றிக்கொண்டது. ஆனால் அவர்களோ ஒலிவமரக்கிளைகளுடன் பேரீச்சை மரத்தின் கிளைகள், லில்லி மலர்க் கொத்துகள் போன்றவற்றை பவனியாக எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அந்த வரிசையில் அமைந்ததே 'பாஸ்கா' பண்டிகை. 

எகிப்தியர்கள், கடைபிடித்த அடிமைமுறையால் அவர்கள் மத்தியில் பல நூறு ஆண்டுகள் அடிமைகளாக இருந்திருக்கிறார்கள் யூதர்களாகிய இஸ்ரவேல் மக்கள். பின்னர் அவர்களிடமிருந்து விடுதலை பெற்று தங்களது சொந்த ஊருக்குத் திரும்பினார்களாம். விடுதலை அடைந்து நாடு திரும்பிய விடுதலைப் பயணத்தின் நினைவாக ஆண்டுதோறும் பாஸ்கா பண்டிகையை கொண்டாடுகிறார்கள். பாஸ்கா என்னும் எபிரேய மொழிச் சொல்லுக்கு ’கடந்து வருதல்’ என்ற பொருள் உண்டு. 

குருத்தோலைஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் யூத இனத்தில் பிறந்த இயேசுகிறிஸ்து தன்னுடைய 33-வது வயதில் பாஸ்கா பண்டிகையைக் கொண்டாடும்நோக்கில் தான் பிறந்து வளர்ந்த எருசலேம் நகரை நோக்கி வருகிறார். அப்போது அவர் குட்டிச்சுவர் ஒன்றின் அருகே நின்ற எளிமையான விலங்கான கழுதை மீது அமர்ந்து வந்தார். அப்போது வழியெங்கும் அவருக்குத் தரைவிரிப்புகள் விரிக்கப்பட்டு கையில் பேரீச்சைமரத்தின் குருத்துகளையும், ஒலிவவமரத்தின் கிளைகளையும், லில்லி மலர்களையும் ஏந்தியபடி அவரை முன்னால் போகச்செய்து பின்னால் அணிவகுத்து வந்தார்கள். 

வழக்கமாக அரசனோ, ஆளுநரோ தன்னுடைய ஆட்சிக்கு உட்பட்ட ஊருக்குள், நீண்ட இடைவெளிக்குப்பிறகு வரும்போது, மக்கள் இதேமுறையில்தான் ஊர்வலமாக நடந்து செல்வது வழக்கம். அவர்களின் பின்னால் அதிகாரம் படைத்தவர் யானை அல்லது குதிரையில் கம்பீரமாக வருவார். மாறாக, இயேசுகிறிஸ்துவின் சொற்களையும் அவர் செய்த செயல்களையும் பின்தொடர விரும்பியே மக்கள் இப்படிச் செய்திருக்கிறார்கள். ஒரு சாமானியருக்கு இப்படிப்பட்ட வரவேற்பு ஏன்? அதில்தான் உள்ளது இயேசுகிறிஸ்துவின் கடந்த கால வாழ்க்கை. 

இயேசுகிறிஸ்துவின் மேல் ஏற்கனவே கடும் கோபத்துடன் இருந்த பழைமைவாதிகளான பரிசேயர்கள் மத்தியில் இந்த வரவேற்பு ஊர்வலம் எரிச்சலையும் பயத்தையும் உண்டாக்கியது. இந்நிலையில் பாஸ்கா பண்டிகையைக் கொண்டாட வந்த இயேசுகிறிஸ்து அவர்களால் பிடிக்கப்படுகிறார். எனவே அவர் ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கிறார் என்று குற்றச்சாட்டு கூறி, அவரை சித்ரவதைக்கு உள்ளாக்கி சிலுவையில் அறைந்து கொல்கிறார்கள். தன்னுடைய வாழ்நாளின் கடைசி காலத்தில் மரணமடைந்த ஒருவரை உயிர்பிழைக்கச் செய்த இயேசு, சிலுவையில் அறையப்பட்டு உயிர்விட நேர்கிறது. அவர் உயிர்நீத்த நாளையே புனிதவெள்ளி என்று கொண்டாடுகிறார்கள், இயேசுவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட நாளில் இருந்து மூன்றாவது நாள் அவர் உயிர்த்தெழுந்து தன்னுடைய சீடர்களுக்குக் காட்சி அளிக்கிறார். அந்த நாளைத்தான் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ‘ஈஸ்டர்’ என்று சொல்லப்படும் உயிர்ப்புத் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். 


குருத்தோலை


இயேசுகிறிஸ்து உயிர்த்தெழும் ஈஸ்டர் பெருவிழா கொண்டாடப்படும் ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையின்போதுதான் குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்படுகிறது. அன்றைக்கு அனைத்துத் தேவாலயங்களிலும் திருப்பலி நடப்பதற்கு முன் குருவானவரால் தீர்த்தம்  எனப்படும் புனித நீரால் குருத்தோலைகள் மந்திரிக்கப்படும். பிறகு அந்த குருத்தோலைகளை கிறிஸ்தவர்கள் கையில் ஏந்தி தேவாலயம் அருகிலுள்ள வீதிகளில் ஊர்வலமாகச் சென்று பிறகு ஆலயத்தினுள் நுழைவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். தென்னை, பனை, பேரீச்சை மரங்கள் போன்றவற்றின் குருத்தோலைகள் மற்றும் ஒலிவமரத்தின் கிளைகள் கிடைக்காதபட்சத்தில் லில்லி போன்ற மலர்களையும் நீளமாக வளர்ந்த புற்களையும் கையில் ஏந்தியபடி செல்வார்கள். அப்போது, ஓசான்னா....தாவீதின் புதல்வா ஓசான்னா ஓசான்னா ஓசான்னா... என்றும் என் ராஜா முன்னே செல்கிறார் வெற்றிப் பவனி செல்கிறார், குருத்தோலை கையில் எடுத்து நான் ஓசன்னா பாடிடுவேன் என்றும் பாடல்களைப் பாடியபடி செல்வார்கள். 

நிறைவாகச் சொல்ல வேண்டுமென்றால், விவிலியத்தில் கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டிருக்கிறது. குருத்தோலைகளும், ஒலிவ மரத்தின் கிளைகளும் வெற்றிக்கு அடையாளமாகும். மனிதனாக வந்த இறைமகனின் பாடுகளின் ஞாயிறு குருத்தோலைகளால் குறிக்கப்படுவது பொருத்தமே! பாடுகளின் பலனாக அன்றோ வெற்றிக் கிடைத்தது! இயேசுவின் பாடுகள் எதிர்பாரா விபத்து அல்ல! கடவுளின் உண்மைக் கதையின் ஒரு முக்கியப் பகுதி அது! கடவுளின் அரசை நிலைநாட்ட தம் பேச்சாலும் செயலாலும் இதுவரை போராடிய இயேசு, தம் பாடுகளும் மரணமும் அடங்கிய இறுதிக்கட்ட போராட்டத்தில் இறங்கிவிட்டார். வார்த்தையானவர் மனித உடல் எடுத்ததே இதற்காகத்தானே! தன் உடலைக் கிழித்துப் பலியாக்கி, வேதனை உணர்வுகளைப் பாடுகளாக்கி மனிதனுக்கு முழு விடுதலை வாங்கித்தருகிறார். இப்பாடுகளின் ஞாயிறு; வெற்றியின் ஞாயிறு. கடவுளின் பெயரால் நமக்கு வெற்றி தரவந்தவர் வாழ்க. ஓசன்னா! 

- எம்.மரிய பெல்சின் 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!