இதயங்களை வென்ற மகான் மகாவீரர்..! பிறந்த நாள் இன்று

வீரம் என்றால்,போர்க்களங்களில் வீரர்களைக் கொன்று குவிப்பதில் இல்லை. உண்மையான வீரம் என்பது மனதின் ஆசைகளை வென்று வாழ்வதில்தான்  அடங்கி இருக்கிறது. ஆனால், வீரம் என்பது மற்றவர்களைக் கொன்று அவர்களுடைய நாடு மற்றும் உடைமைகளை அபகரிப்பதுதான் என்று மன்னர்கள் மண்ணாசையும் பொன்னாசையும் கொண்டு, பாரத புண்ணிய பூமியை யுத்தக் களமாக மாற்றிக்கொண்டிருந்த காலகட்டத்தில் அவதரித்தவர் பகவான் மகாவீரர்.

 மகாவீரர்

சுய விருப்பு வெறுப்புகளால் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளுக்கான அடிப்படைக் காரணங்களை ஆராய்ந்து அறிந்து, அறிந்த உண்மைகளை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லி, சமூகத்தை நல்ல நிலைக்கு உயர்த்தவேண்டும் என்பதற்காக துறவு மேற்கொண்ட கர்மவீரர் மகாவீரர். அகிம்சையை முதன்மையான கடமையாகப் போற்றும் சமண சமயத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் இவரே.

பண்டைய வைசாலி தேசத்தின் (தற்போதைய பீகார்) அரசராக இருந்தவர் சித்தார்த்தன் .அவரது மனைவியின் பெயர் த்ரிஷாலா தேவி .இவ்விருவருக்கும் கி.மு. 599 - ம் ஆண்டு சைத்ர (சித்திரை) மாதம் வளர்பிறை 13 - ம் நாளில் பிறந்த குழந்தைக்கு வர்த்தமானன் என்று பெயரிட்டு அழைத்தார்கள் .வர்த்தமானன் என்றால் வளம் சேர்ப்பவன் என்று பொருள் .சித்தார்த்தனைப் போலவே நாடாளும் அரசனாக பின்னாளில் வர்த்தமானன் உருவெடுப்பான் என்றே அனைவரும் எதிர்பார்க்க, வர்த்தமானனுக்கு சிறுவயதில் இருந்தே தீர்த்தங்கரர்கள் வகுத்து வைத்திருந்த மதக் கொள்கைகளிலேயே அதிகமான நாட்டம் இருந்தது. தியானத்திலும்,தன்னை அறிவதிலுமே அதிக ஈடுபாடு கொண்டவராகவும் விளங்கினார். அவருடைய போக்கை மாற்ற எண்ணிய பெற்றோர் அவருக்குத் திருமணம் செய்து வைத்தனர். அவர்களுக்கு பிரியதர்ஷனா என்ற பெண்குழந்தையும் பிறந்தது.

 சமணர்படுகை

தீர்த்தங்கரர்களின் சமணக் கொள்கைகளின் மீதிருந்த அதீத பற்றால் தனது முப்பதாவது வயதில் அரசவாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கையைத் துறந்து துறவறம் பூண்டார்.தமது இடைவிடாத ஆன்மிகத் தேடலில் 12 ஆண்டுகள் கழித்தார், தீர்த்தங்கர்கள் தொகுத்து வைத்திருந்த மதக் கொள்கைகளை சீர் செய்து சமண மதத்தை தோற்றுவித்தார்.ரிஜுபாலிகா நதிக்கரையில் தியானம் செய்து ஞானம் அடைந்தார். மனதை அடக்கி எல்லாவற்றையும் வென்றவர் என்று பொருள்படும் வகையில் மகாவீரர் என்று அழைக்கப்பட்டார்.பிறகு நாடு முழுவதும் சென்று சமண மதக் கருத்துக்களை பரப்பினார்.

சிறு உயிர்களுக்கும் ஆன்மா உண்டு; மனிதனின் ஆன்மாவும் சிறு உயிர்களின் ஆன்மாவும் சமமானதே என்றும் பொதித்தார். ஒவ்வொரு ஆன்மாவும் தான் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப கர்மா என்னும் வினைப்பயனை அடைகிறது என்றும், 'நன்னம்பிக்கை', 'நல்லறிவு', 'நற்செயல்' என்னும் மூன்று ரத்தினங்களைக் கடைப்பிடித்தால், முக்தி நிலையை அடைய முடியும் என்றும் போதித்தார்.

மகாவீரர் போதித்த ஐந்து உபதேசங்கள்:

பிற உயிர்களுக்கு தீங்கு இழைக்கக்கூடாது.

திருடுவது கூடாது.

எந்தச் சூழ்நிலையிலும் உண்மையே பேச வேண்டும்.

புலனின்பங்களில் நாட்டம் இருக்கக்கூடாது.

பொன் பொருளில் ஆசை இருக்கக்கூடாது.

என்னும் இந்த ஐந்து உபதேசங்களை பஞ்ச ரத்னங்களாக நினைத்துப் போற்றி கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறினார்.

சமணர் சிற்பங்கள்

'கவனமுடன் செயலாற்றுங்கள்; நல்ல விஷயங்களில் மட்டும் மனதைத் திருப்புங்கள்' என்று அறிவுறுத்தினார். மகாவீரர் சமண மதத்தின் வழிகாட்டியாக மட்டுமே இல்லாமல், அகிம்சையை உலகுக்கு போதித்த சீர்திருத்தவாதியாகவும் போற்றப்படுகிறார்.

மனித இதயங்களை வென்றெடுத்த மகான் மகாவீரர் கி.மு 527- ல் தற்போதைய பீகாரின் பாவா என்னும் இடத்தில் முக்தி அடைந்தார்.

சமணக் கொள்கைகள் என்ன நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அதில் இருந்து சிறிதும் வழுவிச் செல்லாமல், இன்றளவும் அதே நோக்கத்தோடு சமண சமயம் பின்பற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- இரா.செந்தில் குமார்.


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!