வெளியிடப்பட்ட நேரம்: 12:46 (09/04/2017)

கடைசி தொடர்பு:12:45 (09/04/2017)

திருமணம் கைகூட... நோய்கள் குணமாக... புது வீடு, மனை வாங்க... பங்குனி உத்திரத் திருநாள்! #PanguniUthiram

வ்வொரு மாதமும் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, விழாக்கள் நடத்துவதும், விரதம் இருப்பதும் தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம். அந்த வகையில் 12- வது மாதமான பங்குனியும் 12- வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் நாள் "பங்குனி உத்திரம்". இந்த தினத்துக்கு பல சிறப்புகள் இருந்தாலும்,  தெய்வத் திருமணங்கள் அதிகம் நிகழ்ந்த புனிதமான நாளாகும். 

பல சிறப்புகளைக் கொண்ட பங்குனி உத்திரம்...

*முருகப் பெருமான் சுவாமிமலையில் பிரணவ மந்திரத்தை உபதேசித்த நாள் இன்று. இந்தத தினத்தில் அடியார்கள் காவடி எடுத்து முருகனை வழிபடுகின்றார்கள்.

பங்குனி உத்திரம்


* கேரளாவில் பந்தளராஜன் மகனாக ஐயப்பன் அவதரித்த தினம் இன்று தான். சபரிமலையில் இந்நாளில்  ஐயப்பனுக்கு ருத்ரம் சொல்லி அபிஷேகம் செய்கிறார்கள். 


* பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன் இத்தினத்தில் பிறந்ததால் "பல்குநன்" என்று பெயர் பெற்றார்.


*ஒரு முறை சுந்தரமூர்த்தி நாயனார், பங்குனி உத்திரத் திருவிழாவுக்கு நிதி வேண்டி, திருப்புகலூர் வந்தார். திருப்புகலூரில் உள்ள அக்னீஸ்வர சுவாமி கோயிலின் வளாகத்தில் இருந்த செங்கற்கள் சிலவற்றைத் தலைக்கு வைத்துத் தூங்கினார். மறுநாள் கண்விழித்துப் பார்த்தபோது, செங்கற்கள் தங்கக் கட்டிகளாக மாறிய அதிசயத்தைக் கண்டார். அதனால் புது வீடு, புது மனை வாங்க விரும்புபவர்கள், இந்தத் தலத்துக்கு குறிப்பாக பங்குனி உத்திரம் அன்று வந்து ஐயனைத் தரிசித்து செல்வர். 


* ஶ்ரீ வள்ளி அவதரித்ததும் இந்நாளே. முருகன் குடிகொண்டுள்ள திருத்தலங்களில் இந்நாளைப் பிரம்மோற்ஸவமாகவும், கல்யாண உற்சவமாகவும் கொண்டாடப்படுகிறது.அசுரர்களை வென்ற முருகனுக்கு, இந்திரன் தன் மகள் தேவயானையைத் திருமணம் செய்து கொடுத்த நாள் பங்குனி உத்திரம்.


* தனது தவத்தைக் கலைத்ததால் மன்மதனை எரித்து சாம்பலாக்கினார் ஈசன். மனம் வருந்திய ரதி தேவி மன்மதனை உயிர்ப்பித்துத் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொண்டாள். ஈசன் மனமிரங்கி அவள் கண்ணுக்கு மட்டும் மன்மதன் தெரியும்படி அருள் புரிந்தார். இந்தச் சம்பவம் நடந்ததும் இத்தினத்தில் தான்.


*  பங்குனி உத்திர விழாவில், திருமயிலையில், பிரபலமான "அறுபத்துமூவர்" புறப்பாடு நடைபெறுகின்றது. அன்று நடைபெறும் கற்பகாம்பாள்- கபாலீஸ்வரர் திருமணத்தையும் மக்கள் கண்டுகளிக்கின்றனர்.


* சில இடங்களில், இந்த தினத்தில்  ஐயனார் அவதரித்த தினமாக கொண்டாடப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காடய்யன்னார் கோயிலில் உள்ள ஐயனாருக்கு அபிஷேகம் ஆராதனை செய்து கோலாகலமாகப் பக்தர்கள் கொண்டாடுகின்றனர்.


* திருமகள் பங்குனி உத்திர விரதத்தை மேற்கொண்டு திருமாலின் மார்பில் நிரந்தர இடம் பிடித்த புனிதமான நாள்.


*திருவாரூரில் இருக்கும் அகஸ்தீஸ்வரர் கோயிலில், அகஸ்தியரால் பிரதீஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் உண்டு. பங்குனி உத்திரம் அன்று, அந்தச் சிவலிங்கத்திற்கு நெல்லிக் கனி பொடி மற்றும் அரிசி மாவால் அபிஷேகம் செய்கிறார்கள். இதனால் சகல நோய்களும் போகும் என்பது ஐதீகம்.


* பிரம்மன் தன் நாவில் சரஸ்வதியை வைத்த தினம். 


* காரைக்கால் அம்மையார், முக்தி பெற்ற தினம்.


* சந்திரனுக்கு உரியத் தலம் திங்களூர். ஆண்டுதோறும் இங்கு பங்குனி உத்திரம் அன்று காலை 6.00 மணிக்கு, சூரியனின் ஒளியும், மறுநாள் மாலை 6:00 மணிக்குச்  சந்திரனின் ஒளியும் சிவலிங்கத்தின் மீது விழுகின்றன. அப்போது அங்குச் சூரிய சந்திர பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றது.இந்தப் பூஜையை தரிசித்தால் எல்லா வளமும் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

* மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்த ஶ்ரீராமன் சீதையைக் கரம் பிடித்த தினமும் பங்குனி உத்திரமே.இதேநாளில்தான் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதரின் திருமணமும் நிகழ்ந்தது.

பங்குனி உத்திரம்


* பங்குனி உத்திர விரத மகிமையால், சந்திரன் 27 அழகிய கன்னியரை மனைவியாகப் பெற்றார். தேவேந்திரன் இந்திராணியை துணைவியாகப் பெற்றார். எனவே கன்னிப்பெண்கள் , இத்தினத்தில் கல்யாண விரதம் இருந்து, ஆலயங்களில் நடைபெறும் இறைவனின் திருமணக் கோலத்தை தரிசித்தால், விரைவில் திருமணம் கைகூடும் என்பர்.


வரப்போகும் வசந்தகாலத்துக்கு முன்னோட்டமாக அமைந்திருக்கும் பங்குனி மாதம் உத்திர நாளில் நாம் இறைவனை வழிபட்டால், வாழ்க்கையில் என்றென்றும் மகிழ்ச்சி நிலைத்திருக்கும் என்பது உறுதி.


-கி.சிந்தூரி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்