குழந்தை வரம் அருளும் எலுமிச்சம் பழ பிரசாதம்! - நள்ளிரவில் ஏலம்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூருக்கு அருகில் உள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் இரட்டைக் குன்று. தொலைவில் இருந்து பார்த்தால் மயில் போல காட்சி அளிக்கும் இந்தக் குன்றின் மேல் அமைந்திருக்கின்றது பழைமை வாய்ந்த ரத்தினவேல் முருகன் ஆலயம். இவ்வாலயத்தின் கருவறையில் செப்பினாலான வேல் மட்டுமே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றது. ஒவ்வோர் ஆண்டும் பங்குனி மாதம் அறுபடை வீடுகளுக்குச் சொந்தக்காரரான முருகக் கடவுள் வீற்றிருக்கும் அனைத்து ஆலயங்களிலும் மஹோற்சவம் நடக்கும். இந்த ஆலயத்தில் கடந்த 31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி உத்திரத் திருவிழா. அன்றிலிருந்து தினந்தோறும் சுவாமியின் அன்றாட வீதியுலா, திருக்கல்யாணம், தேரோட்டம், காவடி பூஜை என 10 நாட்கள் இந்தத் திருவிழா நடைபெற்றது.

எலுமிச்சைப் பிரசாதம்


இந்தப் 10 நாள் திருவிழாவில், ஒவ்வொருநாளும்  கருவறையில் இருக்கும் வேலில் குத்தப்படும் எலுமிச்சைப் பழங்கள் பாதுகாத்து வைக்கப்படும். பத்தாவது நாளில் காவடி பூஜை முடிந்ததும் மறுநாள் அந்த எலுமிச்சைப் பழங்கள் ஏலம் விடப்படும். அதன்படி இந்த ஆண்டு திருவிழா முடிந்த நிலையில் நேற்று(10.04.2017) நள்ளிரவு ஆலயத்தில் இடும்பன் பூஜை நடத்தப்பட்டது. அதில் அந்த 10 எலுமிச்சைப் பழங்களும் பொதுமக்கள் முன்னிலையில் வரிசையாக ஏலம் விடப்பட்டது. ஊர் நாட்டாமையான பாலகிருஷ்ணன் என்பவர் ஆணி செருப்பின் மீது ஏறி நின்று முதல் எலுமிச்சைப் பழத்திற்கான ஏலத்தை 1 ரூபாயில் தொடக்கி வைத்தார். சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்ட அந்த ஏலத்தில் அடுத்த மூன்றாவது நிமிடத்திலேயே 27 ஆயிரத்தை அடைந்தது. அந்தத் தொகைக்கு ஏலம் எடுத்த மஹாலிங்கம்-ஜெயந்தி தம்பதியினருக்கு அந்த முதல் எலுமிச்சைப் பழமும் பிரசாதமாக ஒரு உருண்டை கருவாடு சாதமும் வழங்கப்பட்டது. திருமணம் ஆகி நீண்ட நாட்களாகியும் குழந்தை இல்லாத தம்பதிகள் இந்தப் பிரசாதத்தையும் பழத்தையும் சாப்பிட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுவதால் ஏலம் எடுக்க ஏகப்பட்ட கிராக்கி.

எலுமிச்சைப் பிரசாதம்


தொடர்ந்து இரண்டாவது, மூன்றாவது என 10 பழங்களும் 6 ஆயிரம், 5 ஆயிரம் என போட்டி போட்டு ஏலத்தில் எடுக்கப்பட்டது. இதில் இன்னொரு முக்கியமான விஷயம் ஏலம் கேட்பதற்கு உள்ளூர் மக்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. அதனால் வெளியூர்க்காரர்கள் சென்றால்,  உள்ளூர் மக்கள் அவர்களுக்கு உதவுகின்றனர். இதற்காக பணம் உள்ளிட்ட எதையும் அவர்கள் எதிபார்ப்பதில்லை. ஏலம் எடுக்கப்பட்டவுடன் குழந்தை இல்லாத தம்பதிகள் ஈரத்துணியுடன் மிகுந்த பக்தியுடன் அந்த எலுமிச்சைப் பழத்தை வாங்கிச் செல்கின்றனர்.


இந்தப் பழங்களை ஏலம் எடுத்தவுடன் அதனுடன் அளிக்கப்பட்ட கருவாட்டு சாதத்தை மட்டும் அங்கேயே சாப்பிட்டுவிட வேண்டுமாம். எலுமிச்சைப் பழத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்று மறுநாள் படையிலிட்டு குழந்தையில்லாத பெண் கொட்டையுடன் அதை சாப்பிட வேண்டும் என்று ஆலயத்தில் சொல்லி அனுப்புகிறார்கள். கடந்த ஆண்டு ஏலத்தில் எடுத்த பழத்தை சாப்பிட்டப் பல தம்பதியினர் நேர்த்திக்கடன் செலுத்த வந்திருந்தனர். ஏலம் முடிந்தவுடன் அனைவருக்கும் இடும்பனுக்கு படைத்த கருவாட்டு சாதம் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. ஏலம் எடுக்கக் கூடிய மக்கள் கூட்டம் ஒருபுறம் என்றால் இந்த நிகழ்வைக் காணவும் உள்ளூர் வெளியூர் மக்கள் குவிந்திருந்தனர். இறுதியில் அந்த 10 எலுமிச்சைப் பழங்களும் 68 ஆயிரத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டிருந்ததுதான் ஹைலைட்.

-ஜெ.முருகன்

படங்கள்: தே.சிலம்பரசன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!