வெளியிடப்பட்ட நேரம்: 19:11 (11/04/2017)

கடைசி தொடர்பு:19:12 (11/04/2017)

பாசுபத அஸ்திரம்..! விஞ்ஞானிகள் வியந்த இந்திய ஏவுகணைகள்

விமானங்களைத் தவிர, பறக்கும் கருவிகள், ஏவுகணைகள் பலவற்றையும் நமது புராணங்கள் விவரிக்கின்றன. இவற்றை அந்த காலத்துப் புராணகர்த்தாக்கள் மானசீகமாகக் கற்பனை செய்து எழுதிவிட்டதாகக் கூறிவிடக் கூடாது. புராணங்களில் வரும் சில வர்ணனைகள், அந்தக் கருவிகள் இயங்கிய விதத்தையும் நுட்பங்களையும்கூட நேரில் பார்ப்பதைப் போல வர்ணிக்கின்றன.

மேகங்களுக்கு மேல் சென்று பறக்கும் புஷ்பக விமானத்தைப் பற்றிய குறிப்பு ராமாயணத்தில் வருகிறது.

ஏவுகணைகள்

சூரிய ஒளிக்கு நிகராகவும், இடியின் சக்திக்கு இணையாகவும் உள்ள கருவி ஒன்றில் பீமன் ஏறிச் செல்வதை மகாபாரதம் வர்ணிக்கிறது.

'வாயுதூத் - விண்வெளி வீரர்' என்ற இந்தக்கால நூலின் ஆசிரியர், "இவற்றை வெறும் கற்பனைகளாக நாம் எடுத்துக்கொள்ளக் கூடாது. அன்றே புழக்கத்தில் இருந்த கருவிகளையே அவர்கள் நுட்பங்களுடன் குறிப்பிட்டிருக்கிறார்கள்" என்று விளக்கிக் கூறி இருக்கிறார்.

மகாபாரத்தில் அஸ்திரங்களைப் பிரயோகித்தது பற்றிய வர்ணனை இது; "சூரியனைப் போல ஆயிரம் மடங்கு பிரகாசம் கொண்ட, வெண்ணிறமான புகை ஒன்று அப்போது குடைபோல எழுந்தது. அதன் ஒளியினால் சுற்றுப்புறத்தில் உள்ளவர்கள் பார்வை இழந்தார்கள். அதன் வெப்பத்தால் சுற்றிலும் உள்ள தாவர இனங்களும், ரதம், யானை போன்றவைகளும் அவற்றின் மீது இருந்த மனிதர்களும் கருகிப் போனார்கள். அருகில் இருந்த நீர்நிலைகள் ஆவியாகி மிகுந்த வெப்பம் கொண்ட நீராவியைக் கக்கின.

மகாபாரதம்

சுற்றிலும் உள்ள எல்லாப் பொருட்களும் அழிந்து நாசமான பிறகு எங்கும் ஒரு மரண அமைதி நிலவிற்று. அந்த இடத்திலிருந்து உதிர்ந்த துகள்கள் பட்ட இடமெல்லாம் அழிவு நேர்ந்தது. மனிதர்கள் கை, கால்கள் அற்றவர்களாகவும், உருக்குலைந்தவர்களாகவும் துடித்துக் கீழே விழுந்து மாண்டனர்.

இது இன்றைய அணுகுண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தின் வர்ணனைக்கு நிகரானதாக இருக்கிறது.

அணுகுண்டு வெடித்ததும் விஞ்ஞானி ஓப்பன்ஹீமர், 'அனந்தகோடி சூரியப் பிரகாசம் போன்ற ஒளி எழுந்து விரிந்தது... விரிந்தது' என்று அல்லவா கூறினார்!

வெகுதூரத்தில் உள்ள பொருட்களைத் தாக்கும் ஏவுகணைகளைப் பற்றி இன்று கேள்விப்படுகிறோம். இவ்வாறு சென்று தாக்குவது மட்டுமன்றி மீண்டும் அனுப்பிய இடத்துக்கே வந்து சேரும் கணைகளைப் பற்றி மகாபாரதம் ஆதிப்பருவம் குறிப்பிடுகிறது.

அக்னிபகவான் வாசுதேவனிடம் ஓர் அஸ்திரத்தை ஒப்படைக்கிறார். அந்த அஸ்திரம் அனுப்பிய இடத்திலிருந்து புறப்பட்டு, எதிரியின் இடத்தை அடைந்து, அங்கே குறிப்பிட்ட பொருளைத் தாக்கிவிட்டு மீண்டும் எய்தவரிடமே திரும்பி வந்துவிடக் கூடிய சக்தி படைத்தது.

மகாபாரதத்தில் துரோண பருவத்தில் குறிப்பிடப்படும் ஓர் ஏவுகணை, ஒன்றிலிருந்து மற்றொன்றாகப் பிரிந்து, அதிலிருந்து பல்வேறு அம்புகளை உதிர்க்கக் கூடியது. இதன் வருணனை இன்றையப் போர்க்கருவியான பலநிலை ராக்கெட்டுகளை போலவே உள்ளது.

கிருஷ்ணன்

"இந்தக் கணையினால் தாக்கப்பட்ட இடம் எரிந்து சாம்பலாகிவிடும். அந்த நிலத்தில் 12 ஆண்டுகளுக்குப் பஞ்சம் நிலவும். நீர் நிலைகள் நஞ்சினால் பாதிக்கப்பட்டுவிடும். அந்த மண்ணில் பிறக்கும் குழந்தைகள் உடற்குறைவுடன், புத்திபாதிப்புடன் பிறப்பார்கள்.

உயிர் வாழ்பவர்கள் தீராத வியாதிகளால் அவஸ்தைபடுவார்கள்." இன்று அணுகுண்டின் பாதிப்பினால் ஜப்பானில் உள்ள மக்கள் அடைந்துள்ள நிலை இதேபோல இருக்கிறது அல்லவா?

மகாபாரதத்தில் அர்ஜுனனுக்குச் சிவபெருமான் கொடுக்கும் பாசுபதாஸ்திரம், மிகவும் கனமான உலோகத் தகடுகளையும் துளைத்து அறுக்கக்கூடியது. அதன் சக்தியும் வேகமும் சூரிய ஒளிக்கு நிகரானவை என்று வர்ணிக்கப்படுகிறது. 'லேசர் ஊடுருவிகள்' என்று இன்றைய விஞ்ஞானக் கண்டுபிடிப்பாக விளங்கும் கணையின் பண்பு அதை போன்றே இருக்கிறது அல்லவா?

ராமாயணத்தில் வரும் பல்வேறு அஸ்திரங்களும், இன்றைய விஞ்ஞானம் தரும் அதிசய ஆயுதங்களைப் போலவே விளங்குகின்றன. இன்றைய விண்வெளி ஆயுதங்களுக்கு, இயக்குபவர் தேவை இல்லை என்பதைப் போல, அன்றைய ஆயுதங்களும்தானே இயங்கின.

இந்தக் குறிப்புகளை எடுத்துச்சொல்லி மேல்நாட்டு ஆராய்ச்சியாளரான எரிக்வான் டெனகின், நமது இதிகாசங்களில் வரும் நுட்பமான கருத்துக்களைப் பாராட்டி எழுதி இருக்கிறார்.

- கண்ணன்கோபாலன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்