அசுவினி நட்சத்திரக்காரர்கள், பின்பற்ற வேண்டிய ஜோதிட- ஆன்மிக ரீதியான நடைமுறைகள், பரிகாரங்கள்! | Aries: What they need to do follow for Success in their Life?

வெளியிடப்பட்ட நேரம்: 07:40 (12/04/2017)

கடைசி தொடர்பு:07:40 (12/04/2017)

அசுவினி நட்சத்திரக்காரர்கள், பின்பற்ற வேண்டிய ஜோதிட- ஆன்மிக ரீதியான நடைமுறைகள், பரிகாரங்கள்!

27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு உரிய குணநலன்கள், அவர்கள் வணங்க வேண்டிய பரிகார தெய்வங்கள் பற்றி ஜோதிட முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.

அசுவினி  

அசுவினி நட்சத்திரத்துக்கு அதிபதி ஞானகாரகனான கேது.
நட்சத்திரதேவதை: அசுவினி தேவர்கள்... அமிர்த கலசத்தைக் கையில் வைத்திருக்கும் தேவ வைத்தியர்கள்.வித்யாதரன்
வடிவம்: குதிரையின் முகத்தைப் போன்று மூன்று           நட்சத்திரங்களைக் கொண்ட கூட்டம்.
எழுத்துகள்  : சு, சே, சோ, ல ( முதல் எழுத்தாகக் கொண்டு பெயர் வைக்கலாம்) .

பொதுவான குணங்கள் மற்றும் பலன்கள்:

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களைப் பற்றி ஜோதிட நூல்கள் உயர்வாகப் பேசுகின்றன. அவற்றுள் பழம்பெரும் ஓலைச் சுவடியான ‘நட்சத்திர மாலை’, 
'பொய்யுரை ஒன்றுஞ் சொல்லான்; புகழ் பெற வாழ வல்லன்...'
என்று கூறுகிறது. 

நெருக்கடியான நேரத்திலும் உண்மையைச் சொல்லும் உத்தமர்களாக இருப்பீர்கள்; புகழுடன் வாழ்வீர்கள். மனதாலும், உடலாலும் பலசாலியாக விளங்கும் நீங்கள், வம்புச் சண்டைக்குச் செல்லமாட்டீர்கள்; வந்த சண்டையை விடமாட்டீர்கள் என்று பொருள்.

அசுவினி தேவர்கள்

ஜாதக அலங்காரம் என்னும் நூல், நீங்கள் எந்தச் செயலையும் விதிமுறை மீறாமல் செய்து முடிப்பதில் வல்லவர்; எந்த வேலையைத் தொடங்கினாலும், அதை முடிக்கும் வரை ஓயமாட்டீர்கள்; அதே சிந்தனையாக இருப்பீர்கள்; புத்திக்கூர்மை உடையவர்களாக விளங்குவதால், மற்றவர்களைப் பார்த்தவுடன் அவர்களுடைய உள் மனதைப் புரிந்துகொள்வீர்கள்; ஆடை, ஆபரணங்களை அணிவதில் அதிக ஆர்வம் இருக்கும்; தாம்பூலம், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றை விரும்புவீர்கள்; இளமையில் வறுமையை அனுபவித்தாலும், முதுமையில் வளமை பெற்று வாழ்வீர்கள் என்று கூறுகிறது.

வீர தீர கிரகமான செவ்வாயின் ராசியான மேஷத்தில் இந்த நட்சத்திரம் வருவதால், இதில் பிறந்த நீங்கள் தன்மானம் அதிகம் உள்ளவர்களாகவே இருப்பீர்கள். 27 நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரமாகத் திகழ்வதால், எங்கும் எதிலும் முதலிடத்தைப் பிடிக்க வேண்டுமென்ற சிந்தனை உங்களிடம் காணப்படும். 

பிரகாசமான கண்களைப் பெற்றிருப்பதால், கம்பீரமான தோற்றத்துடன் அழகாகக் காணப்படுவீர்கள். பலருக்கு நெற்றி உயர்ந்திருக்கும்; காது மடல்கள் விரிந்திருக்கும்; பல் வரிசையும் சீராக இருக்கும்.

சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைபோல் அல்லாமல், சுய அறிவுடன் யோசித்து பதில் கூறுவீர்கள். பிடிவாதம் இருக்கும். பள்ளிப் பருவத்தில் எதிர்க் கேள்வி கேட்கும் குணம் உங்களிடம் அதிகம் உண்டு. பள்ளிப் படிப்பில் மதிப்பெண் குறைவாகப் பெற்றாலும், கல்லூரிப் படிப்பில் அதிக கவனம் செலுத்தி, பரிசு, பதக்கம் பெறுவீர்கள்.
உங்களைச் சுற்றி நண்பர்கள் கூட்டம் அதிகம் இருந்தாலும் ஒரு சிலருடன்தான் நெருங்கிப் பழகுவீர்கள். அறிவியல் பாடத்தில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இசை, ஓவியத்தையும் விட்டு வைக்கமாட்டீர்கள். தாய்மொழிக்கு ஈடான புலமை அந்நிய மொழிகளிலும் உண்டு. விவாதம் என்று வந்துவிட்டால் வெற்றி உங்களுக்குத்தான். மேடைப் பேச்சுக்கு அஞ்சமாட்டீர்கள். துணிச்சலுடன் தன்னம்பிக்கையும் கொண்டிருப்பீர்கள்.

ராசிகள்


உத்தியோகத்தில் நேர்மையாக இருப்பீர்கள். அதனால், மூத்த அதிகாரியுடன் சில நேரங்களில் மோதல் வரும். கடின உழைப்பாலும் நிர்வாகத் திறமையாலும் சாதாரண நிலையிலிருந்து விரைவில் பெரிய பதவியில் அமர்வீர்கள். பத்திரப் பதிவு, வானியல், வங்கி, மருத்துவம் ஆகிய துறைகளில் பலர் திறம்பட நாட்டுக்குச் சேவை செய்வீர்கள்.

நாற்பத்தைந்து வயதிலிருந்து சிலர் சொந்தத் தொழிலில் ஈடுபடுவீர்கள். ரசாயனம், மருந்து, மின்சாரம் சம்பந்தப்பட்ட வியாபாரம் சாதகமாக இருக்கும். ஜாதகத்தில் செவ்வாயும் கேதுவும் வலுவாக அமைந்திருந்தால், ரியல் எஸ்டேட், கட்டடம் ஆகிய துறைகளில் செல்வந்தர்களாகத் திகழ்வீர்கள்.

 

ராசிகட்டம்

 

காதலித்தாலும், பலருக்கு, பெற்றோரால் பார்த்து  நிச்சயிக்கப்பட்ட திருமணமே முடியும். சுக்கிரன் வலுவாக இருப்பவர்களுக்கு மட்டுமே காதல் வெற்றிபெற்று, கல்யாணத்தில் முடியும். மனைவியை அதிகம் நேசிப்பீர்கள். பிள்ளைகளின் மீது தீராத பாசம் வைத்திருப்பீர்கள். கோழி அடைகாப்பதைப் போல, பிள்ளைகளைப் பாதுகாப்பீர்கள். சிறுவயதிலேயே குழந்தைகள் நெஞ்சில் நீதி, நேர்மை போன்ற தர்ம சிந்தனைகளை விதைப்பீர்கள்.

இருபத்துநான்கிலிருந்து முப்பது வயதுக்குள்ளேயே வீடு, வாகனம் ஆகியவை அமைந்துவிடும். சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வீர்கள். நாற்பதிலிருந்து நாற்பத்தேழு வயதுக்குள் அரசியலிலோ ஆன்மிகத்திலோ ஈடுபட்டு புகழ் அடைவீர்கள்.
பைல்ஸ், முதுகுத் தண்டுப் பிரச்னை, கணுக்கால் வலி போன்றவற்றால் அவ்வப்போது சிரமப்படுவதும் உண்டு. ஆனால், உரிய சிகிச்சைகளால் உடனுக்குடன் நிவாரணம் பெற்றுவிடுவீர்கள். ஐம்பத்தைந்து வயதிலிருந்து நீங்கள் சார்ந்திருக்கும் மதம், இயக்கம் ஆகியவற்றின் வளர்ச்சிக்காக உழைப்பீர்கள். உங்களுக்கு நீண்ட ஆயுள் உண்டு.

அசுவினி நட்சத்திரத்தின் காரகத்துவங்கள்
மனித உடலில் ஆளும் உறுப்புகள்: தலை, மூளை.
பார்வை    : சமநோக்கு.
பாகை    : 0.00 - 13.20.
நிறம்    : மஞ்சள்.
இருப்பிடம்    : நகரம்.
கணம்    : தேவ கணம்.
குணம்    : எளிமை.
பறவை    : ராஜாளி.
மிருகம்    : ஆண் குதிரை.
மரம்    : பாலில்லாத எட்டி மரம் (விஷமூட்டி மரம்)
மலர்    : நீலோத்பலம்.
நாடி    : தட்சிண பார்சுவ நாடி.
ஆகுதி    : அரசு, ஆல்.
பஞ்சபூதம்    : நிலம்
நைவேத்தியம்: பாலேடு
தெய்வம்: ஸ்ரீ சரஸ்வதி

அதிர்ஷ்டம் தருபவை:

அதிர்ஷ்ட எண்கள்:                6, 7, 9.
அதிர்ஷ்ட நிறங்கள் :            ஆரஞ்சு, பழுப்பு.
அதிர்ஷ்ட திசை    :                வடகிழக்கு.
அதிர்ஷ்டக் கிழமைகள்   :  திங்கள், வியாழன்.
அதிர்ஷ்ட ரத்தினம்        :     பவழம்
அதிர்ஷ்ட உலோகம்    :      தாமிரம், பஞ்சலோகம்.


அசுவினி நட்சத்திரம் நான்கு பாதங்களில் பிறந்தவர்கள் செய்யவேண்டிய பரிகாரங்கள்:

திருச்செந்தூர் முருகன்


அசுவினி முதல் பாதத்தில் பிறந்தவர்கள்:
அனைத்து இடர்களும் தீர, எல்லாவற்றிலும் வெற்றியடைய திருச்செந்தூர் முருகப் பெருமானை சஷ்டி திதிகளில் சென்று வணங்குவது நல்லது.
அசுவினி 2 -ம் பாதம்:
கும்பகோணம் அருகிலுள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ ஒப்பில்லாப் பெருமாளை ஏகாதசி திதியில் சென்று வணங்குதல் நலம்.
அசுவினி  3 - ம் பாதம்:
திண்டிவனம் அருகிலுள்ள திருவக்கரை ஸ்ரீ வக்ரகாளியம்மன் கோயிலில் அருள்பாலிக்கும் பிரயோகச் சக்கரம் ஏந்திய ஸ்ரீவரதராஜப் பெருமாளை இவர்கள் வணங்கலாம்.
அசுவினி 4- ம் பாதம்: 
தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் அருள் பாலிக்கும்  ஸ்ரீ வராஹி அம்மனை வணங்குதல் நலம்.

எஸ்.கதிரேசன்
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்