வெளியிடப்பட்ட நேரம்: 16:16 (13/04/2017)

கடைசி தொடர்பு:11:02 (15/04/2017)

ஆணி கொண்ட உன் காயங்களை... அன்புடன் முத்தி செய்கின்றேன்! #GoodFriday

`செந்நீர் வேர்வை சொரிந்தவனே
புண்படக் கசையால் துடித்தவனே
முண்முடி சூடிய மன்னவனே
துன்பச்சிலுவை சுமந்தவனே
எமக்காய் இன்னுயிர் துறந்தவனே' 
- கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் முக்கிய தினங்களான பெரிய வியாழன், புனித வெள்ளி நாள்களில் தேவாலயங்களில் பாடப்படும் பாடல்களில் இதுவும் ஒன்று.  

புனித வெள்ளி

இயேசுகிறிஸ்து தம் வாழ்நாளில் சமுதாயத்தால் தாழ்ந்தவர்களாகக் கருதப்பட்ட மக்களோடு அமர்ந்து பலமுறை உணவு உண்டிருக்கிறார். அதேவேளையில் அவர் இறப்பதற்குமுன் தன்னுடைய சீடர்களோடு சேர்ந்து கடைசியாக இரவு உணவு உண்ட நாள் நினைவுகூரப்படுவது பெரிய வியாழன்றுதான். மேலும் இயேசு தன்னுடைய சீடர்களின் மதிப்புக்குரியவராக இருந்தாலும்கூட அடிமைகள் செய்யக்கூடிய பாதம் கழுவும் செயலையும் இந்தப் பெரிய வியாழனன்றுதான் செய்தார். அதாவது, ஒருவர் மற்றவர்க்குப் பணிவிடை செய்யக்கூடிய மனநிலையை தன்னுடைய சீடர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தச் செயலைச் செய்து காட்டியிருக்கிறார். 

அடுத்ததாக, பணி செய்வதே சீடர்களின் அடையாளமாக இருக்க வேண்டும் என்பதற்காக குருத்துவத்தையும் இதேநாளில்தான் ஏற்படுத்தினார். குருத்துவம் என்பது கடவுளுக்கும் மக்களுக்கும் பணி செய்யும் பொறுப்பைத் தரக்கூடிய அருட்சாதனம் என்று சொல்லப்படுகிறது.

புனித வெள்ளி

பெரிய வியாழனன்று இயேசுவின் பாஸ்கா விழா கொண்டாடப்படுவது வழக்கம். பாஸ்கா என்றால் கடந்து செல்லுதல் என்று பொருள்படும். `பாஸ்கா' என்ற கடத்தல் நிகழ்வின் மூலம் தீமையின் ஆதிக்கத்தில் இருந்து கடந்து சென்று நிலையான இறைவனைப் பற்றிக்கொண்டனர். முதல் ஏற்பாட்டில் பாவத்துக்குக் கழுவாயாக செம்மறியாடுகள் பலியிடப்பட்டன. புதிய ஏற்பாட்டில் பாவத்தைப்போக்கும் செம்மறியாக இயேசுவே பலியாகிறார். இயேசு தன்னை உடைத்து தனது உடலையும் ரத்தத்தையும் உணவாகக் கொடுக்கிறார். இயேசுவின் இந்த பாஸ்கா விழா நமது தன்னல நாட்டங்களில் இருந்து விடுபட்டு நம்மை மனத்துணிவுடனும் மனித மாண்புடனும் வாழ வழிவகுக்கிறது.

அடுத்து கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், குருத்துவம். இயேசு கிறிஸ்து ஏற்படுத்திய குருத்துவத்தில் நாமும் பங்கெடுக்க விரும்பினால் அவரைப்போல நாமும் பிறர் நலன்களுக்காக நம்மையே பகிர்ந்தளிக்க முன்வர வேண்டும். நாம் வாழும் காலம் குறுகியதென்றாலும் நீதியின் வழியில் பயணிக்க  வேண்டும் என்ற கருத்து இங்கே வலியுறுத்தப்படுகிறது.

மரணம் என்பது ஒரு முடிவல்ல; அதிலிருந்துதான் உலகிற்கான விடுதலையே தொடங்குகிறது. ஆம்... மரணத்தின் அர்த்தத்தையே மாற்றி எழுதியது இயேசுவின் மரணம் என்பது உலகறிந்த உண்மை. விவிலியத்தில் சொல்லப்பட்டபடி இயேசுகிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட நாளை புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கிறார்கள். புனித வெள்ளியை பெரிய வெள்ளி என்றும் ஆண்டவருடையை திருப்பாடுகளில் வெள்ளி (Good Friday) என்றும் சொல்கிறார்கள். இயேசுகிறிஸ்து தான் அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச்சாவையும் நினைவுகூரும்விதத்தில் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் விழா இது. 

புனித வெள்ளி

கல்வாரி மலையில் இயேசு அனுபவித்த துன்பங்களைப்போலவே தேவாலயங்களிலும் சுட்டெரிக்கும் வெயிலில் வெட்ட வெளியில் சிலுவையைச் சுமந்து செல்வது கிறிஸ்தவர்களின் வழிபாடுகளில் ஒன்று. மேலும், அப்போது பலர் உணவு உண்ணாமல் ஆலயங்களில் வழங்கப்படும் கஞ்சியை மட்டுமே சாப்பிடுவார்கள். நம் வீடுகளில் ஒருவர் இறந்தால் எப்படி இருப்போமோ அதேபோல் அன்றையதினம் உணவு உண்ணாமல் எந்தவிதக் கொண்டாட்டமும் இல்லாமல் அதிர்ந்து பேசாமல் மௌனமாக இருப்பதுமுண்டு.

இயேசுகிறிஸ்து உயிர்நீத்த சிலுவை மரம் கிறிஸ்தவர்களுக்குத் தனி அடையாளமாகும். எனவே, புனித வெள்ளியன்று திருச்சிலுவையை வணங்கி மரியாதை செலுத்துவது வழக்கத்தில் உள்ளது. எரியும் மெழுகுவத்திகளுக்கு நடுவே பவனியாகக் கொண்டுவரப்படும் சிலுவையை மண்டியிட்டு முத்தமிடுவார்கள். அப்போது, `ஆணி கொண்ட உன் காயங்களை அன்புடன் முத்தி செய்கின்றேன், பாவத்தால் உம்மைக் கொன்றேனே ஆயனே என்னை மன்னியும்' என்ற பாடல் பாடப்படும். அப்போது பலர் கண்ணீர் விட்டு அழுவார்கள். இந்நிகழ்வு முடிந்த அன்றைய நாளின் மறுநாள் அதாவது சனிக்கிழமை நள்ளிரவு வரை ஆலயங்களில் எந்தவித வழிபாடும் இருக்காது. துக்க வீடு போல காட்சியளிக்கும். சனிக்கிழமை இரவு இயேசு கிறிஸ்து உயிர்த்தெழும் நிகழ்வு நடைபெறும். அதை ஈஸ்டர் பண்டிகை என வெகுவிமரிசையாகக் கொண்டாடுவார்கள்.

- எம்.மரிய பெல்சின்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்