Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

`நான் உடலல்ல, ஆன்மா’ என உணர்ந்த மகான்! - ரமண மகரிஷி ஆராதனை தினப் பகிர்வு

"ல்லவர்களின் நட்பை தேடிச் செல்லுங்கள். இதனால் மனதில் உள்ள அறியாமை நீங்கி விடும்'' என்று நல்ல நட்பின் வழியாக அறியாமை இருளை போக்கச் சொன்ன அற்புத மகான் ரமண மகரிஷி அவர்கள்.அவரின் ஆராதனை தினம் இன்று.

ரமண மகரிஷி

மனிதன் தன் வாழ்வின் அத்தனை தருணங்களிலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும்,இக்கட்டான நிலைகளை எப்படி கடக்க வேண்டும் என்று தனக்கே உரித்தான எளிமையான வார்த்தைகளால் போதித்தவர். தற்போதைய விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் 1879-ம் ஆண்டு டிசம்பர் 30 -ம் நாள் சுந்தரம் ஐயர், அழகம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.அவரின் இயற்பெயர் வெங்கட்ராமன்.எந்த நிகழ்வு வெங்கட்ராமனை ரமண மகரிஷியாக உலகிற்குத் தந்தது என்பதைப் பற்றி பார்ப்போம்.

ரமண மகரிஷி சிறுவயதாக இருக்கும்போது திருவண்ணாமலையில் உள்ள உறவினர் ஒருவர் ரமணரின் இல்லத்துக்கு அடிக்கடி வருவார். அவர் திருவண்ணாமலையின் மேன்மையைப் பற்றி ரமணரிடம் அடிக்கடி கூறுவார். அதனால், ரமணருக்கும் அங்கே செல்ல வேண்டும் என்று தீராத ஆவல் ஏற்பட்டது. பெரிய புராணம் போன்ற நூல்களைப் படித்தத்தன் விளைவாக இறைவனைப் பற்றிய அறிதலில் அவருக்கு நாட்டம் அதிகமாக இருந்தது .உறவினர் ஒருவரின் மரணத்தில் தான் அவருக்குள் பல கேள்விகள் பிறந்தது.மரணிப்பது வெறும் உடல் மட்டுமே ஆன்மாவிற்கு மரணம் இல்லை என்னும் உண்மையை உணர்ந்தார்.

தான் யார் என்று அறிய முயன்று, இறுதியில் தான் உடல் அல்ல ஆன்மா என்பதை உணர்ந்தார்.

நானே பெரியவன்; நானே சிறந்தவன் என்பது போன்ற அகந்தையான சிந்தனைகள் நம் மனதில் எங்கே தோன்றுகிறது என்பதைக் கண்டறிந்து களைவதன் மூலமாகவே நம் மனதில் உள்ள தேவையற்ற சிந்தனைகளைக் களையலாம் என்றார்.

ரமணருக்கு ஆன்மிகத் தெளிவு பிறந்ததும் அனைத்தையும் துறந்து திருவண்ணாமலை வந்தடைந்தார்.முதலில் அருணாசலேசுவரர் ஆலயத்தில் தியானம் செய்தார்.

பின்னர் விருபாக்ஷி குகை, கந்தாச்ரமம்,பாலாக்கொத்து எனப் பல இடங்களில் வாசம் செய்து இறுதியில் திருவண்ணாமலை அடிவாரத்தில் தனது தியானத்தை மேற்கொண்டார்.அந்த இடமே தற்போது ரமணர் ஆசிரமமாக உள்ளது .

  ரமணர்  ஆசிரமம்

எந்த வேலை ஆனாலும் சரியான நேரத்தில் முடித்தல்.

எந்த வேலையிலும் முழுமையான ஈடுபாட்டுடன் செய்தல் .

எப்போதும் உண்மையே பேசுதல்,அதே நேரம் உண்மை பேசுவதால் ஒருவருக்கு துன்பம் வருமாயின் பேசாமல் மௌனமாய் இருத்தல், .

கடினமான உழைப்பிற்கு பின்னே ஓய்வு,.

வெற்றி தோல்விகளைச் சமமாக பாவித்தல்.

பிறரை தாழ்வாக எண்ணாதிருப்பது,

எந்த உணவையும் வீணாக்காமல் முழுமையாக உண்பது.

பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது.

எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல் இருப்பது.

இவையே ரமண மகரிஷி பின்பற்றிய பழக்க வழக்கங்களாகும்.இதையே தனது சீடர்களுக்கும் போதித்தார்.

ரமண மகரிஷியின் புகழை உணர்ந்தவர்கள் பலர்.ஆனாலும் வெளிநாட்டு பத்திரிகையாளர் ஒருவருடன் நிகழ்ந்த சந்திப்பு நம்மை நெகிழச் செய்யும்,

லண்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற பத்திரிகையாளர் பால் பிரான்டன் இந்து மதம் சார்பாக நிறைய கேள்விகளுக்குத் தெளிவான பதில்களைப் பெற நினைத்தார்.அதன்பொருட்டு மனதில் எண்ணிலடங்கா கேள்விகளுடன் ரமணரைப் பார்க்க திருவண்ணாமலை வந்தார்..சீடர்களிடம் தான் வந்த நோக்கத்தை கூறிவிட்டு ரமண மகரிஷியின் முன் அமர்கிறார் .கண் திறந்து அவரை ரமணர் பார்க்கிறார்.

நேரம் செல்லச் செல்ல, பால் பிரான்டனின் கண்களில் இருந்து தாரை தாரையாக நீர் கொட்டுகிறது.ஏகப்பட்ட கேள்விகள் கேட்க நினைத்த பால் பிரான்டன் எந்தக் கேள்வியும் கேட்காமல் அங்கிருந்து செல்கிறார்.பின்னாளில் இந்தச் சந்திப்பைப் பற்றி தான் எழுதிய புத்தகத்தில், 'தான் எண்ணற்ற கேள்விகளுடன் ரமணரை தரிசிக்கச் சென்றிருந்தபோது, தான் எந்தக் கேள்வியும் கேட்காமலேயே எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிட்டது. அனைத்தையும் கடந்த ஒப்பற்ற ஞானி' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

ரமணர் பொன்மொழிகள்

ரமணர் முக்தி அடையப் போகிறார் என்பதை உணர்ந்த அவருடைய சீடர்கள், தங்களை வழிநடத்த அவர் தங்களுடனே இருக்கவேண்டும் என்று கூறியபோது,

''நான் எங்கே செல்லப்போகிறேன்? இங்கேயேதான் எப்போதும் இருப்பேன்!'' என்றார். உண்மைதான், அவர் இப்போதும் தம்முடைய அற்புதமான போதனைகளால் நம்மை வழிநடத்தவே செய்கிறார்.

அவருடைய போதனைகளைக் கடைப்பிடித்து வாழ்வதுதான் அவருக்கான நம்முடைய காணிக்கை ஆகும்.

- இரா.செந்தில் குமார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement