வெளியிடப்பட்ட நேரம்: 20:39 (15/04/2017)

கடைசி தொடர்பு:20:39 (15/04/2017)

நோய்கள் தீர, பகை அழிய, தோஷங்கள் தொலைய அனுதினமும் படிக்கவேண்டிய வராஹ மந்திரம்! #VarahaJayanti

'எப்பொழுதெல்லாம் பூமியில் தர்மம் அழிந்து அதர்மம் தலையெடுக்கிறதோ, அப்பொழுதெல்லாம் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட யுகங்கள்தோறும் நான் அவதரிப்பேன்' என்று பகவான் கிருஷ்ணர் கீதையில் கூறி இருப்பதுபோல், தர்மத்தை நிலைநிறுத்த எடுத்த அவதாரங்கள் 22. அவற்றுள் பிரத்தியேகமான பத்து அவதாரங்களை நாம் தசாவதாரம் என்று கொண்டாடுகிறோம். மகா விஷ்ணு எடுத்த அவதாரங்களில் மூன்றாவதாக அமைந்த அவதாரம் ஶ்ரீவராஹ அவதாரம். விஷ்ணு வராஹ அவதாரம் எடுத்த நாளை வராஹ ஜயந்தியாகக் கொண்டாடுகிறோம். வராஹ ஜயந்தியைப் பற்றி 'சொல்லின் செல்வன்' பி.என்.பரசுராமனிடம் கேட்டோம். அவர் பகிர்ந்துகொண்ட தகவல்கள் இங்கே...

ஒரு முறை  இரணியாட்சன் என்னும் அரக்கன், தனக்குச் சமமாகப் போர் புரியக் கூடிய எதிரியைத் தேடினான். தனக்குச் சமமானவன் எங்கும் இல்லை என்னும்  ஆணவத்தில்,  பூமியைப் பாய் போல் சுருட்டி, கடலுக்கு அடியில் ஒளித்து வைத்தான். தன் கதையுடன், மிகுந்த ஆணவத்தோடு கர்ஜனை செய்தவாறு சுற்றி வந்தான் இரணியாட்சன். தேவர்கள் அனைவரும் அரக்கனின் கொடுமையைத் தாங்க முடியாமல் திருமாலிடம் அடைக்கலம் புகுந்தனர்.

வராஹ ஜயந்தி
 

"தன் பக்தர்களையும், தேவர்களையும் காக்க வேண்டி பிரம்மாவின் நாசித் துவாரத்திலிருந்து, வெள்ளைப் பன்றியின் உருவில் தோன்றினார் மகா விஷ்ணு. முதலில், கட்டை விரல் அளவாக இருந்தவர், அதன் பின் ஒரு யானையின் அளவாக வளர்ந்தார். அப்படியே மேலும் மேலும் மேகமண்டலம் வரை வராஹ மூர்த்தி வளர்ந்தார். தன் இரு கொம்புகளால் கடலுக்கு அடியில் இருந்த பூமியைத் தூக்கி, உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றினார். ஆத்திரம் அடைந்து, வராஹ மூர்த்தியிடமே போர் புரியத் துணிந்த இரணியாட்சனை அழித்து தர்மத்தை நிலை நாட்டினார்" என்கிறது புராணம்.

இங்கே, அரக்கன் என்பது மனிதனின் தீய குணங்களைக் குறிக்கிறது. பூமி என்பது மனிதனின் உடலாகும். தீய குணங்களுக்கு ஆட்பட்ட இந்த உடல் மிகவும் தாழ்மையான நிலைக்குச் சென்றுவிடுகிறது.இறைவனின் கருணையின்றி நம்மால் உயர்ந்த நிலையை அடைய முடியாது. ஆகவே புனிதமான நாளான "வராஹ ஜயந்தி" அன்று  தீய பழக்கங்களில் இருந்தும் தீய மனிதர்களின் சூழ்ச்சியில் இருந்தும் இறைவா என்னைக் காப்பாற்று என்று வேண்டிக்கொள்ள, நிச்சயம் அருள் புரிவார் வராஹ மூர்த்தி. 

வராஹப் பெருமானின் பிரபலமான ஆலயங்கள் :
* தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ முஷ்ணம்.

வராஹ ஜயந்தி

* சென்னை - மஹாபலிபுரம் சாலையில் உள்ள திருவிடந்தையில் "சுவேத வராஹர்" என்ற திருநாமத்துடன் திகழ்கிறார். இது திவ்ய தேசத் தலங்களில் ஒன்றாகும்.  திருமண வரம் அருளும் தலமாகவும் திகழ்கிறது.


* திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் மிகப் பிரபலமான வராஹப் பெருமானின் ஆலயம் உள்ளது.


* கஜுராகோ எனும் இடத்தில் அமைந்துள்ள பெரிய வராஹரின் உடல் மீது 274 தேவர்களின் திருவுருவங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.


* மத்தியப்பிரதேசத்தில் உள்ள வராஹர் ஆலயங்களில், பன்றி ரூபத்தில் , நான்கு கால்களுடன் , தன் உடல் முழுவதும் எண்ணற்ற தேவதைகளைத் தாங்கி பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார்.


* தெலங்கானா மாநிலம், கரீம் நகரில் அமைந்துள்ள ஸ்ரீயக்ஞவராஹர் ஆலயம் மிகப் பிரபலமானதாகும்.

வராஹ ஸ்லோகம் :

ஸுத்தஸ்படிக ஸங்காஸம் பூர்ண சந்த்ர நிபானநம்

கடிந்யஸ்த கரத்வந்த்வம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம்

தயாநிதிம் தயாஹீநம் ஜீவாநாமார்த்திஹம் விபும்

தைத்யாந்தகம் கதாபாணிம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம்


பொருள்: சுத்த ஸ்படிகம் போல் நிர்மலமானவரே, பூர்ண சந்திரனை போல ஒளிபடைத்தவரே, வராஹ மூர்த்தியே நமஸ்காரம். திருக்கரங்களில் சக்கரம், கதையேந்தி அருள்பவரே, கருணையே வடிவானவரே, ஜீவன்களைக் காப்பவரே, ஸ்ரீமுஷ்ணத்தில் திருவருட்பாலிப்பவரே, வராஹ மூர்த்தியே நமஸ்காரம். 

கொடிய நோய்கள் தீர, பகை அழிய,  தோஷங்கள் தொலைய அனுதினமும் படிக்கலாம் இந்த வராஹ மந்திரத்தை..!

- கி.சிந்தூரி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்