சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்... இறைவன் நமக்களித்த செல்வம்!

வில்வம், 'சிவ மூலிகைகளின் சிகரம்' என்றும் 'மும்மூர்த்திகளின் உறைவிடம்' என்றும் சிறப்பாகப் போற்றப்படுகிறது.  ஒருமுறை பூஜைக்குப் பயன்படுத்தினாலும், மீண்டும் தூய்மைப்படுத்தி பயன்படுத்த முடியும். இப்படி பல்வேறு சிறப்புகளைப் பெற்றது வில்வம். இதற்கு, கூவிளம், கூவிளை, சிவத்துருமம், நின்மலி, மாலுரம் எனப் பல பெயர்கள் உள்ளன. வில்வ மரத்தின்  இலை, பூ, காய், பழம், வேர், பிசின், பட்டை... என இதன் அனைத்துப் பகுதிகளும் மருந்தாகப் பலன் தரக்கூடியவை.

வில்வம்

வில்வ தளம் என்பது, மூன்று இலைகள் சேர்ந்தது. வில்வத்தின் இடதுபக்க இலை 'பிரம்மா' என்றும், வலதுபக்க இலை 'விஷ்ணு' என்றும் நடுவில் இருப்பது 'சிவன்' என்றும் சொல்லப்படுகிறது. வில்வ இலை திரிசூலத்தின் குறியீடாகக்  கருதப்படுகிறது. இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என மூன்று சக்திகளின் அம்சமாகப் போற்றப்படுகிறது.

வில்வமரம் ஒரு புனிதமான மரமாகும். இது தீராத ஜென்ம பாவங்களைப் போக்கக்கூடியது . இப்படிப்பட்ட வில்வமரத்தின் சிறப்புகளை பற்றி நாம் விரிவாக பார்ப்போம்.

வில்வமரம் அதிகமாக சிவாலயங்களில்தான் வளர்க்கப்படுகின்றது.சிவனுக்கு வில்வ இலை அர்ச்சனை மிகவும் விசேஷமானது.ஞாயிறன்று வில்வ இலை அர்ச்சனை மிகச் சிறப்பான ஒன்று . வில்வத்தால் சிவனை அர்ச்சனை செய்யும்போது சிவனோடு நாம் இன்னும் நெருங்க முடியும்.சிவனின் அருளைப் பெறமுடியும் என்று நம் புராணங்கள் சொல்கின்றன.

வில்வ இலை அர்ச்சனைக்குப் பயன்படும். வில்வப் பழம் அபிஷேகத்துக்கு உகந்ததாகும். வில்வ மரத்தின் கட்டையானது யாகம்,ஹோமம் போன்றவற்றுக்குப் பயன்படுகிறது. வில்வ மரத்தின் வேர் மருந்தாகப் பயன்படுகிறது. வில்வப்பழத்தின் ஓட்டைச் சுத்தப்படுத்தி, அதில் ஸ்ரீசூர்ணத்தையும், திருநீற்றையும் வைத்துக்கொள்ளலாம். அப்படி வைத்துக்கொள்வதால், மருத்துவப் பலன்கள் நமக்கு கிடைக்கும்.

வில்வ மரத்தின் சிறப்புகள்:

வீட்டில் வில்வமரம் வளர்ப்பது, 'அஸ்வமேத யாகம்' செய்த பலனைக் கொடுக்கும். ஆனால், அதை பக்தி சிரத்தையோடு வளர்ப்பதுடன், அவ்வப்போது பூஜைகள் செய்வது நல்லது.

108 சிவாலயங்களை தரிசித்த பலன் கிடைக்கும். ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும். வில்வ மரத்தின் கிளைகளே வேதங்கள். இலைகள் அனைத்தும் சிவரூபம். வேர்கள், கோடி ருத்திரர்கள். வில்வ மரம் மகாலட்சுமி வாசம் செய்யும் இடமாகக்  கருதப்படுகிறது .

ஏழரைச் சனி பிடித்திருப்பவர்களுக்குப் பரிகாரமே வில்வம்தான்.

ஒரு வில்வ இலையைக்கொண்டு இறைவனுக்கு அர்ச்சனை செய்வது லட்சம் தங்க மலர்களைக்கொண்டு அர்ச்சனை செய்வதற்கு ஒப்பானது .

வில்வஇலை பூஜை

வில்வ மரத்தின் மருத்துவ பயன்கள்:

இது எளிதில் குணமடையாத நோய்களுக்கு சிறந்த மூலிகை மருந்தாகச் செயல்படுகிறது. வில்வ இலைகளை உண்டால் ஆஸ்துமா நோய் குணமாகும்.

காரத்தன்மையுள்ள வில்வ மரத்தின் இலைகளைப் பிழிந்து அதன் சாற்றுடன் பசும்பால் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் காய்ச்சல் குணமாகும்.

வில்வ மரத்தின் காயை உலர்த்தி பொடி செய்து குழந்தைகளுக்கு சிறிதளவு கொடுத்துவர கழிச்சல், மூலநோய் நீங்கும். வில்வமரத்தின் பிசின் உடலுக்கு உரமேற்றும் தன்மைகொண்டது. வில்வ இலையின் சாற்றுடன் அதே அளவு கல்யாணமுருங்கைச் சாற்றையும் சேர்த்துப் பருகினால், சர்க்கரை நோய் குணமாகும்.

வில்வப்பழத்தை பிழிந்து சர்பத் போன்ற பானங்கள் செய்து குடித்துவர உடலின் வெப்பம் தணியும்,

வில்வப்பழத்தில் புரதச் சத்துக்கள், தாது உப்புக்கள் , மாவுச்சத்துக்கள், சுண்ணாம்புச் சத்துக்கள், வைட்டமின் இ, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மற்றும் நியாசின் ஆகியவை உள்ளன.

பழத்தின் ஓட்டிலிருந்து தைலம் தயாரிக்கலாம். இது `வில்வ தைலம்’ எனப்படும்.

வில்வ இலைகளைப் பறிக்கும்போது கவனிக்கவேண்டியவை:

வில்வ இலைகளை சோமவாரம், சதுர்த்தி, அஷ்டமி, அமாவாசை, பௌர்ணமி தினங்களில் மரத்திலிருந்து பறிக்கக் கூடாது.

வில்வ தளத்தில் இருக்கும் மூன்று இலைகளைத் தனித்தனியாக பறிக்கக் கூடாது. பல்வேறு ஆலயங்களில் வில்வமரம் தலவிருட்சமாக உள்ளது.

சிவபெருமான்

சிவபெருமானுக்கு மட்டும் அல்லாமல் திருமகளுக்கும் வில்வ இலையால் பூஜை செய்யப்படுகிறது.கும்பகோணம் சக்கரபாணிக் கோயிலில் ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது.

வில்வம் இறைவன் நமக்களித்த செல்வம்.சிவனுக்குப் பிரியமாகவும் .ஆரோக்கியத்துக்கு அரணாகவும் திகழ்கிறது.

- இரா.செந்தில் குமார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!