ரோகிணி நட்சத்திரக்காரர்கள் பின்பற்ற வேண்டிய ஜோதிட ஆன்மிக நடைமுறை, பரிகாரங்கள்!

சுவினி, பரணி, கார்த்திகை நட்சத்திரங்களைத் தொடர்ந்து, ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றி 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம். 

ரோகிணி

நட்சத்திர தேவதை: படைப்புத் தொழிலுக்கு உரியவரான பிரம்ம தேவன். 
வடிவம்: வண்டியைப் போன்று தோற்றமளிக்கும் ஐந்து நட்சத்திரங்களைக்கொண்ட நட்சத்திரக் கூட்டம்.
எழுத்துகள்: ஓ, வ, வி, வு

ரோகிணி
 

ரோகிணி நட்சத்திரத்தின் பொதுவான பலன்கள்:

சகல கலைகளுக்கும் உரிய சந்திரனின் நட்சத்திரமான ரோகிணி, ஆடம்பர கிரகமான சுக்கிரனின் ராசியான ரிஷப ராசியின் ஆளுகையின் கீழ் வருகிறது. சந்திரனின் சாரம் பெற்றுள்ள இந்த நட்சத்திரம், பால்வெளியில் அதிகம் ஒளிரும் தன்மையுடையது.
இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் எந்த வித்தையையும் விரிவாகக் கற்றுக்கொள்வதில் வல்லவர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களுக்கு உங்களை மிகவும் பிடிக்கும். வித்யாதரன்

ஜாதக அலங்கார நூல், ‘நீரதிக தாகமுளன்; சொன்னது கேட்பான்; புலவன்; நிருபன்...’ என்கிறது. அதாவது, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மோர், பழரசம், இளநீர், பசும்பால்,  போன்ற பானங்களை விரும்பி அருந்துபவராகவும் கார வகைகளை விரும்பாதவராகவும் இருப்பார்கள் என்கிறது. பெரியோரின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பவராகவும், மொழிப் பாடங்களில் பண்டிதராகவும் பசித்தவர்க்கு உணவு தருபவராகவும் விளங்குவார்கள் என்பது இதன் பொருள். 

நட்சத்திர மாலை என்னும் நூல், வருங்காலத்தை உணரும் ஆற்றலைப் பெற்றும், பெண்களுக்குப் பிரியமானவராகவும், தங்கத்தால் செய்த ஆபரணங்களையும் விலை உயர்ந்த ரத்தின ஆபரணங்களையும் விரும்பி அணிபவராகவும் விளங்குவார் என்கிறது. யவன ஜாதகப் பாடல், ‘ஸூருப ஸ்திர...’ என்கிறது. அதாவது, அழகானவராகவும் ஸ்திர புத்தியுடையவராகவும் இருப்பார்கள் எனக் கூறுகிறது. 

இவர்கள், அமைதியான வாழ்க்கையையே அதிகம் விரும்புவார்கள். மெல்லிய குரலில் பேசுவார்களே தவிர, அதிர்ந்து பேசமாட்டார்கள். தெளிந்த அறிவுடனும் அதி நுட்ப மதியுடனும் எந்த ஒரு செயலையும் செய்வார்கள். இவர்கள் செய்யும் செயல்களைக் கண்டு பகைவர்கள்கூட வியப்படைவர். ஆடை, அணிகலன்களில் தனி கவனம் செலுத்துவார்கள். தவறுகள் செய்யத் தயங்குவார்கள். ஆகவே, எப்போதும் நேர்மையாக இருப்பதையே விரும்புவார்கள். பேச்சில் ஒளிவு மறைவு என்பதே இருக்காது.

சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவராகவும் இருப்பார்கள். அளவற்ற செல்வம் திரண்டு இருக்கும். எப்போதும் கற்பனை உலகில் சஞ்சரித்துக்கொண்டே இருப்பார்கள். இவர்களில் சிலர் கவிதை, கட்டுரை, கதை, நாடகம் ஆகியவற்றை எழுதுவார்கள். பெரும்பாலோர் திரைத் துறையில் பெரிய கலைஞர்களாக இருப்பார்கள். 

சூர்யோதயம்

நிர்வாகத் திறமை இல்லாவிட்டாலும், சிலர் மாபெரும் தொழிலதிபராக இருப்பார்கள். முதலாளியாக இருந்தாலும் சிறிதும் கர்வம்கொள்ளாமல் தொழிலாளியைத் தனக்குச் சமமாக நடத்துவார்கள்.

கலைப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு, பாராட்டு பெறுவார்கள். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அதிகம் இருக்கும். குறிப்பாக, இந்த நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் எப்போதும் தன் மனைவிக்கு விட்டுக்கொடுத்துப் போகிறவராக இருப்பார்கள். 

பிள்ளைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுப்பார்கள். சுகபோக வாழ்க்கையை வாழும் இவர்களுக்கு, கூடவே சோம்பேறித்தனமும் அதிகமாக இருக்கும். இரக்க குணம் இவர்களிடம் வஞ்சமில்லாமல் இருக்கும். சண்டை போடும் இரு தரப்பினரையும் இனிமையான பேச்சால் சமாதானப்படுத்தி ஒற்றுமை ஏற்படச் செய்வார்கள். அடிக்கடி தண்ணீர் குடிக்கவும், அதிக நேரம் நீராடவும் விரும்புவார்கள்.

வரதராஜ பெருமாள் கோயில்

 

ரோகிணி நட்சத்திரத்தின் காரகத்துவங்கள்:

ஆளும் உறுப்புகள் : முகம், வாய், நாக்கு, கழுத்து
பார்வை: மேல்நோக்கு
நிறம்: மஞ்சள்
கணம்: மனித கணம்
குணம்: ஸ்திரம்.
பறவை: ஆந்தை
மிருகம்: ஆண் நாகம்
மரம்: பாலுள்ள நாவல் மரம்
மலர்: தாமரை
நாடி: வாம பார்சுவ நாடி
ஆகுதி : நவதானியங்கள்
பஞ்சபூதம் : பூமி
நைவேத்தியம் : பால் சாதம்
தெய்வம்: ஸ்ரீ கிருஷ்ணன்

அதிர்ஷ்டம் தருபவை:

அதிர்ஷ்ட எண்கள் : 2, 7, 8
அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட திசை: மேற்கு
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன்
அதிர்ஷ்ட ரத்தினம் : முத்து
அதிர்ஷ்ட உலோகம்: வெள்ளி

ரோகிணி நட்சத்திரக்காரர்கள் நான்கு பாதங்களில் பிறந்தவர்கள் செய்யவேண்டிய பரிகாரம்:

ரோகிணி நட்சத்திரம் முதல் பாதம், பரிகாரம்:

செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள திருமலை வையாவூர், ஸ்ரீஅலர்மேல் மங்கை சமேத ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாளை நவமி திதியில் சென்று வணங்குதல் நலம்.

ரோகிணி நட்சத்திரம் 2 - ம் பாதம், பரிகாரம்:

சின்னக் காஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ வரதராஜப் பெருமாளை சனிக்கிழமை வணங்குதல் நலம்.

ரோகிணி நட்சத்திரம் 3-ம் பாதம் , பரிகாரம்:

சென்னை நங்கநல்லூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வணங்குதல் நலம்.

ரோகிணி நட்சத்திரம்  4-ம் பாதம், பரிகாரம்:

மன்னார்குடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ வாசுதேவனையும் ஸ்ரீ ராஜகோபாலனையும் வணங்குதல் நலம்.

மற்ற நட்சத்திரங்களின் குணநலன்கள்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!