இறைவனுக்கு முடி காணிக்கை... ஏன், எதற்கு?

றைவனிடம் நாம் எத்தனையோ காணிக்கைகளை செலுத்துகிறோம். காணிக்கைகளில் மிகச் சிறந்த காணிக்கையாகக் கருதப்படுவது முடி காணிக்கை செலுத்துவதுதான். முடி காணிக்கை செலுத்துவதால், நம்முடைய அகந்தை அகன்று, அடக்கம் பிறக்கிறது. தங்களுடைய இஷ்ட தெய்வத்துக்கு இப்படி காணிக்கை செலுத்துவதால், தங்கள் மனதில் உள்ள பாரமெல்லாம் இறங்கிவிடுவதாக பக்தர்கள் மனப்பூர்வமாக நம்புகின்றனர். முதன்முதலில் முடி காணிக்கை செலுத்தியது யார் என்பதையும், அதன் பின்னணியில் இருக்கும் அறிவியல் உண்மைகளைப் பற்றியும் பார்ப்போமா?

முடி காணிக்கை

அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஏயர்கோன் கலிக்காமர் என்பவர் சோழ தேசத்தின் தளபதியாகப் பணிபுரிந்து வந்தார். அதே பகுதியில் மானக்கஞ்சாறர் என்னும் சிவ பக்தரும் வாழ்ந்து வந்தார். அவருடைய மகளைத் திருமணம் செய்ய விரும்பினார் ஏயர்கோன் கலிக்காமர். திருமணம் நிச்சயிக்கப்பட்டு மணநாளும் வந்தது.

அன்று மானக்கஞ்சாறர் வீட்டுக்கு ஒரு சிவனடியார் வந்தார். மானக்கஞ்சாறரின் மகளுக்கு திருமணம் நடக்க இருப்பதை அறிந்து கொண்டார். மானக்கஞ்சாறர், மணப்பெண்ணாகிய தன் மகளை சிவனடியாரின் காலில் விழுந்து ஆசிபெறுமாறு கேட்டுக்கொண்டார்.

மணப்பெண்ணும் சிவனடியார் காலில் விழுந்து ஆசி பெற்றார். அப்போது அப்பெண்ணின் நீண்ட கூந்தலை நோட்டமிட்ட சிவனடியார் "பஞ்சவடி செய்ய எனக்கு இந்த கூந்தல் தேவைப்படுகிறது கிடைக்குமா?" என்று கேட்டார். அதீத சிவ பக்தரான மானக்கஞ்சாறரும் மணநாள் என்றும் பாராமல் மகளின் சம்மதத்துடன் அறுத்துக் கொடுத்துவிட்டார். அந்த நேரம் சரியாக , மணமகனும் அங்கு வந்தார். கூந்தல் இல்லாமல் குனிந்து நிற்கும் பெண்ணைக் கண்டார். சிவனடியாருக்காகவும் பெற்றோரின் வார்த்தைக்காகவும் பெண்கள் தங்கள் அழகின் அடையாளமாக நினைக்கும் கூந்தலையே தியாகம் செய்தவள். இவளைவிட சிறந்த பெண் எனக்கு எங்கு சென்றாலும் கிடைக்க வாய்ப்பில்லை' என்று மகிச்சியுடன் கூறினார் . திருமணம் சிறப்பாக முடிந்தது. இதில் இருந்துதான் முடியைக் காணிக்கையாக செலுத்தும் பழக்கம் உருவானதாகச் சொல்லப்படுகிறது.

 இறைவனை வழிபடுதல்

குழந்தைகள் முடி காணிக்கை செலுத்துவது எதற்காக?

இந்தப் பிறப்பில் புதிய வாழ்க்கையைத் தொடங்கும் குழந்தை, முன் ஜென்மத்தில் இருந்த பந்தங்களின் தொடர்பைத் துண்டிக்கவே முடி காணிக்கை செலுத்தப்படுகிறது. குழந்தைக்கு முதன்முறையாக மொட்டை போடுவது `சூடாகர்ம சமஸ்காரம்’ என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.

குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆன பின்பு இந்தச் சடங்கை செய்ய வேண்டும். பிறகு மூன்று வயதிலோ ஐந்து வயதிலோ செலுத்தலாம். இரட்டைப் படை வயதில் செய்யக்கூடாது. மொட்டை போட்டவுடன் குழந்தையின் தலையில் குழந்தையின் தந்தை சந்தனம் பூச வேண்டும்.

இதற்குப் பின்னால் சொல்லப்படும் அறிவியல் காரணங்கள்:

பத்து மாதம் தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தையானது கழிவுகளில் உழன்றிருக்கும். இதன் விளைவாக குழந்தைகளுக்கு நோய்கள் வர வாய்ப்புள்ளது. இதில் இருந்து பிள்ளைகளைக் காக்கவே குழந்தைகளுக்கு முடி காணிக்கை செலுத்துகிறோம். இதனால் முடியின் வேர்க்கால்களின் வழியாகக் கழிவுகள் வெளியேறிவிடும். இதனால்தான் குழந்தை பிறந்த சில மாதங்களில் குலதெய்வ கோயில்களில் முடி காணிக்கை செலுத்துமாறு நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். குழந்தைகளுக்கு மொட்டை போடுவது குழந்தைகளின் ஆரோக்கியத்தை காப்பதற்காகவே.

பழனி முருகன்

தலைமுடி என்பது பெருமை மற்றும் ஆணவத்தைக் குறிக்கும் ஒன்றாகும். மொட்டை அடிப்பதன் மூலம், தான் என்னும் கர்வத்தை இழந்து கடவுளுக்கு அருகில் செல்கிறோம். இது கடவுளிடம் நமக்கு இருக்கும் பணிவை வெளிப்படுத்துவதாகும். மேலும் ஆணவமும், எதிர்மறையான எண்ணங்களும் இல்லாமல், கடவுளை அடையக் கூடிய முயற்சியாகும். கடவுளுக்கு முன் எதுவுமே பெரிதல்ல. இது நமக்கு ஒரு ஞான அறிவைத் தருகிறது. இதனால்தான் முடி காணிக்கை செலுத்துவதை ஒரு முக்கிய சடங்காக நாம் பின்பற்றுகிறோம்.

- இரா.செந்தில் குமார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!