வெளியிடப்பட்ட நேரம்: 18:41 (19/04/2017)

கடைசி தொடர்பு:18:41 (19/04/2017)

சகுனங்கள், நிமித்தங்கள் வித்தியாசம் என்ன? #Astrology

எவ்வளவோ நவீனமயமான  வாழ்க்கை முறைகளுக்கு மனிதன் போயிருந்தாலும், தவிர்க்க முடியாதவைகளாக சில விஷயங்கள் இருக்கவே செய்கின்றன. அவற்றில் சகுனங்கள் மற்றும் நிமித்தங்களுக்கு நிச்சயம் இடம் உண்டு. இவை எதனால் நடைபெறுகின்றன? இவையெல்லாம்  உண்மைதானா? என்பது போன்ற கேள்விகளுடன்  ஜோதிட நிபுணர்ஶ்ரீரங்கம் கிருஷ்ணனைச் சந்தித்தோம்.

சகுனங்கள்  

மூட நம்பிக்கை என்று பலவற்றையும் ஒதுக்குபவர்கள் கூட, சகுனங்கள்,  நிமித்தங்கள் ஆகியவற்றில் தங்களை அறியாமலே நம்பிக்கை வைத்திருப்பார்கள். ஆனால், அதற்கு அவர்கள் சொல்லும் சமாதானம், 'இல்லை சார், இது ஒரு சென்டிமென்ட் அவ்வளவுதான்' என்பார்கள்.
 நிமித்தங்கள் என்பவை நாம் எதிர்பாராமல் சுற்றுப்புறத்தில் நடப்பவை, நம்மை எதிர் நோக்கி இருப்பவை, கேட்கக்கூடிய சப்தங்கள் ஆகியவை.

நாம் ஒரு விஷயம் பேசிக்கொண்டிருக்கும்போதோ, ஒரு காரியம் நடத்திக் கொண்டிருக்கும்போதோ, பக்ஷிகள், விலங்குகள், பல்லி போன்ற ஜந்துக்களால் ஏற்படுத்தப்படும் ஒலிகள், சப்தங்கள், மனிதர்கள் உதிர்க்கும் வார்த்தைகள் ஆகியவைகளால் நம் மனதில் ஏற்படக் கூடிய உணர்வுகள்  சம்பந்தப்பட்டவை. தானே ஏற்படும் இந்த நிமித்தங்களை நம்மால் மாற்ற முடியாது.  சகுனம் என்பதும் இவற்றைப் போலவே இருந்தாலும், சில சமயம் நம்மால் ஏற்படுத்திக்கொள்ள முடியும். மாற்றி அமைத்துக் கொள்ளவும் முடியும்.

உதாரணமாக நாம் ஒரு நல்ல காரியத்துக்காக வெளியே செல்கிறோம் என்றால், நம் வீட்டைச் சேர்ந்த பெண்களை எதிரில் வரச் செய்து அதன்பிறகு வெளியே கிளம்பிச் செல்கிறோம். இப்படிச் செய்வதால், மனரீதியாக நம் மனதில் நேர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தி, அந்த எண்ணங்களின் தாக்கத்தால் நாம் செல்லும் காரியம் வெற்றிகரமாக முடியும்.

பிரச்னையுள்ள மனிதன்

வெளியே கிளம்பிச் செல்கையில் எதிரில் அபசகுனமாக எதையாவது பார்த்தால், அன்று முழுவதும் செயல்படும் செயல்களில்  நமக்கு நாமே ஒரு ஸ்திரத்தன்மை இல்லாமல் இருப்போம்.  அதேபோல் நாம் ஒரு நல்ல விஷயமாக பேசிக் கொண்டிருக்கையில், ஒருவர் தும்மினால் அபசகுனமாகவும் அவரே இன்னொரு முறை தும்மினால் சுபசகுனமாகவும் எடுத்துக் கொள்கின்றோம். 
சுற்றுப்புறத்தில் ஒருவர் அமங்கல வார்த்தை பேசினாலே, அதுவும் அபசகுனமாக பார்க்கப்படுகிறது.  அதனால்தான் இன்றும் சுபகாரியங்கள் நடக்கும் இடங்களில் மங்கல வாத்தியங்கள் முழங்கப் படுகின்றன. அதாவது அந்த நல்ல காரியங்கள் நடக்கும் நேரத்தில் அபசகுன வார்த்தைகள் காதில் விழாமல் இருக்க, மந்திர உச்சாடனங்களும், மங்கல வாத்திய ஒலிகளின் அதிர்வலைகளும் அதை நல்லதாக மாற்றிவிடும்.  

நட்சத்திரம்

சங்கின் ஓலி சுபசகுனமாகும்.  பண்டைய காலங்களில் போர்க் காலங்களில் ஒலிக்கப்படும் சங்கின் ஒலி வெற்றி சப்தமாகவும் நல்ல சகுனமாகவும்  கருதப்பட்டது.  
வீட்டில் உள்ள  விருட்சம் பூத்தால் சுப சகுனமாகும்.  அதுவே முறிந்தாலோ, அதில் காய்த்த காய் வாடினாலோ அசுப சகுனமாகும். 
வீட்டில் முருங்கை மரம் வளர்க்கக் கூடாது .  ஏனென்றால், அதை பிசாச மரம் என்பார்கள்.  அது முறிந்து விழுந்தால், சுற்றுப்புறத்தில் ஓர் இறப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை. 
 பேசிக்கொண்டிருக்கும் போது கெளளி எனப்படும் பல்லி இடும் சப்தம், அது எந்த திக்கிலிருந்து வந்தது என்பதைப் பொறுத்து  சுப, அசுப பலன்கள் நிச்சயிக்கப்படுகின்றன.  பஞ்சாங்கத்தில் பல்லி சொல்லுக்கு பலன், பல்லி விழுதலின் பலன் என்று தனியாகவே கொடுக்கப்பட்டுள்ளது.   கிருஷ்ணன்

சுபசகுனங்கள்:
சுபசகுனமாக, வீணை, புல்லாங்குழல், மேளம், சங்கு, இவைகளைப் பார்ப்பதும், இவைகளின் ஒலிகளைக்கேட்பதும் ஆகும்.  அழகிய பெண்கள், நாட்டியப் பெண்கள், தயிர், மஞ்சள் கலந்த அரிசி(அட்சதை) கரும்பு, அருகம்புல், நீர் நிரம்பிய குடம், பூக்கள், மாலைகள், கன்னிப் பெண்கள், கருடன்,ஆலய மணி ஓசை, விளக்கு, தாமரைப் பூ, நாய் தன் உடலை சிலிர்ப்பது, பிணம் எதிரே வருவது, பசு மாடுகள்   இவைகளைக் காண்பது சுபசகுனமாகும்.

அசுப சகுனங்கள்:
அணையும் விளக்கு, தண்ணீர் பாத்திரம் சாய்ந்து நீர் வெளியேறுவது, உடுத்திய ஆடை கிழிவது, செருப்பு அறுந்து போதல், அமங்கல வார்த்தை,   ஒற்றைத் தும்மல், சத்தமான வார்த்தைகள், வீட்டில் மரம் முறிதல், பல்லி இடப்புறம் கத்துவது, பன்றி, பாம்பு, குதிரையைக் காண்பது, சத்தமிடல், எண்ணெய்க் குடம், விளக்குமாற்றை கையில் வைத்திருப்பது, தன் நட்சத்திரத்துக்கு உரிய பட்சி இடமிருந்து வலமாகச் செல்வது , விருட்சம் சாய்வது, மிருகம் இறந்து விட்டதாகக் கேட்பது,  எருமை மாடு ஆகியவை அசுப சகுனமாகும்.

கால புருஷனின் லக்னம்:

பொதுவாக, ஜாதகத்தின் கால புருஷனின் லக்னம் மேஷமாகும். அதன் ஏழாம் வீடு துலாம் ஆகும். அதன்அதிபதி சுக்கிரன் ஆகும். ஒன்றுக்கொன்று ஏழாம் வீடாக வருவதால் சுபத்தன்மை நிறைந்தவையாக பார்க்கப்படுகிறது.  ஆகவே, சுக்கிரனின்  காரகத்துவம் உள்ள பொருட்களெல்லாம் சுபத்தன்மை நிறைந்தவை. அதேபோல் கால புருஷனின் பாதகாதிபதி சனி.  ஆகவே, அவர் சம்பந்தப்பட்ட பொருட்களெல்லாம் அசுபத்தன்மை நிறைந்தவையாக பார்க்கப்படுகிறது. அதேபோல் சூரிய - சந்திரருக்கு  ராகு, கேது பகையாவதால் அவை அசுபமாக பார்க்கப்படுகிறது.  பறவைகள் கூட்டமாகப் பறந்தால், சுப சகுனமாகவும், அவை கத்திக் கொண்டே பறந்தால் அபசகுனமாகவும் ஆகிறது. 

சகுனங்கள் எப்படிப்பட்டதாக இருந்தாலும், சென்ற காரியம் ஜெயமாகி வெற்றி கிடைத்தால், அதை நாம் நினைப்பதில்லை. தோல்வியில் முடியும்போதுதான் இந்த ஆராய்ச்சியில் இறங்குகிறோம். சகுனங்களால் எந்தச் செயலும் கெடுவதில்லை. வெற்றியோ தோல்வியோ அவற்றின் அறிகுறிதான் சகுனம் என்பதை உணரவேண்டும். 

எந்தக் காரியத்தைத் தொடங்கும்போதும் இறைவனை வணங்கி தொடங்க வேண்டும். அது தோல்வியில் முடிந்தாலும் இறைவன் திருஉளப்படி நடக்கும்போது நடக்கட்டும் என இருந்து மனதை லேசாக்கிக் கொள்ள வேண்டும்.
 

-எஸ்.கதிரேசன்
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்