திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் பின்பற்ற வேண்டிய ஜோதிட ஆன்மிக நடைமுறைகள், பரிகாரங்கள்!

அசுவினி, பரணி, கார்த்திகை நட்சத்திரங்களைத் தொடர்ந்து, திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றி 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.

திருவாதிரை

நட்சத்திர தேவதை : சிவபெருமானால் சிருஷ்டிக்கப்பட்ட 11 பேரில்  சிவ அம்சம் கொண்ட ருத்ரன்.
வடிவம் : ரத்தினம் போலவும் தாமரை மொட்டு போலவும் வடிவமுடைய ஒரே நட்சத்திரம்.
எழுத்துகள் : கு, க, ங, ச.

திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் பொதுவான பலன்கள் :

ஜோதிட சாஸ்திரத்தில் ஆறாவது நட்சத்திரமாக ஒளிர்வது திருவாதிரை. 27 நட்சத்திரங்களில் ‘திரு’ என்ற அடைமொழியைப் பெற்றுள்ள முதல் நட்சத்திரம். சர்ப்ப கிரகங்களில், கருநாகம் என்று சொல்லக்கூடிய ராகுவின் சாரம் பெற்றுள்ள நட்சத்திரம்.
சர்ப்பத்துக்கு பிளவுபட்ட நாக்கு இருப்பது போல, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இரண்டு விதமாகப் பேசும் ஆற்றல் உள்ளவர்கள்.
நட்சத்திர மாலை என்னும் நூல், ‘புகழ்பெற வாழ நல்லன், திறமொடு காரியங்கள், சிறப்பொடு பூசை செய்யும்...’ என்கிறது. அதாவது சிறந்த சிவபூஜை செய்யும் பக்திமான்களாக வாழ்வார்கள்  என்பது அர்த்தம். வித்யாதரன்

ஜாதக அலங்காரம், ‘கீர்த்திமான்... சுத்தவான், உயர்ந்திருக்குந் துண்ட முள்ளான்...’ என்கிறது. அதாவது இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மூக்கு உயர்ந்திருக்கும்;  சமூகத்தில் பிரபலமாக இருப்பார்கள் என்று அர்த்தம்.

‘அவிசார...’ என்று தொடங்கும் யவன ஜாதகப் பாடல், சொத்து விற்பது, வாங்குவதில் நீங்கள் வல்லவர்கள் என்று கூறுகிறது.

சந்தர்ப்ப சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் பேசுபவர்களாக, பலசாலிகளாக, எளிதில் கோப வசப்படக் கூடியவர்களாக இருப்பார்கள். ஆதலால், மற்றவர் பார்வைக்கு முரட்டு சுபாவம் உள்ளவர்போல் தெரிவார்கள். சிறந்த அறிவாற்றலும் பகைவர்களை வெற்றிகொள்ளும் சூரத்தனமும், எடுத்த காரியத்தை சிறப்பாக முடிக்கும் பிடிவாதமும்  இவர்களிடம் நிரம்பியிருக்கும். அதனால் தங்களின்  திறமை மீது வித்யா கர்வம் கொண்டிருப்பார்கள். ‘தன் குடும்பம், தன் பிள்ளை’ என்று கொஞ்சம் சுயநலமாகவும் இருப்பார்கள். தெரியாததைத் தெரிந்ததைப் போலப் பேசி எதிராளியை நம்ப வைப்பார்கள். நல்லவர்களுக்காகவும் நன்மைக்காகவும் பொய் சொல்லவும் தயங்க மாட்டார்கள். வாக்குவாதத்தால் நல்ல நண்பர்களை இழப்பார்கள்.

கல்வியில் எப்போதாவது ஆர்வம் காட்டுவார்கள். உட்கார்ந்து கஷ்டப்பட்டு படிக்கமாட்டார்கள். இவர்களுக்கு ஞாபக சக்தி அதிகம் இருப்பதால், வகுப்பில் ஆசிரியர் நடத்தும்போதே உன்னிப்பாகப் பாடத்தை கவனித்து, தேர்வு சமயத்தில் மட்டும் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்றுவிடுவார்கள். உறவினர்களைக் காட்டிலும் நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள். ஆகவே, இவர்களுக்கு நண்பர்கள் அதிகமாக இருப்பார்கள்.

கிரகங்கள்

காண்பதையெல்லாம் கவிதையாக்கும் அளவுக்கு கற்பனை வளம் இருக்கும். காதலித்துத் திருமணம் செய்துகொள்பவர்களாகவும் மனைவியை அதிகம் நேசிப்பவர்களாகவும் வாழ்க்கையை ருசித்து ரசிப்பவர்களாகவும் இருப்பார்கள். காரம் அதிகமுள்ள உணவுகளை ருசித்து உண்பார்கள். சமயோஜித புத்தி இருக்குமாதலால், இவர்களில் பலர், புகழ்பெற்ற நிறுவனங்களின் பொருட்களை சாதுர்யமாக விற்பவர்களாகவும், நிலம், வீடு, விற்க வாங்க உதவும் தரகர்களாகவும் இருப்பார்கள். 

மக்கள் தொடர்பு, காவல், சுற்றுலா, தொலைபேசி, கனரக மின் ஆற்றல், நிலக்கரிச் சுரங்கம் ஆகிய துறைகளில் பெரிய பதவிகளை வகிப்பார்கள். வாகனம், வாகன உதிரி பாகம், ஹார்ட்வேர் பொருள் ஆகியவற்றை விற்பவர்களாக இருப்பார்கள்.

நட்சத்திர ஓட்டல், கேளிக்கை விடுதி ஆகியவற்றைப் பெரிய அளவில் இவர்களில் பலர் நடத்துவார்கள். அரசுப் பணி, தனியார் துறை எதுவாக இருந்தாலும், மிக உன்னிப்பாக கவனித்து வேலை செய்யக்கூடியவர்கள் நீங்கள். மேலதிகாரியின் மனதைப் புரிந்துகொண்டு அவர்கள் விருப்பம் போல் நடந்து குறுகிய காலத்திலேயே அவர்கள் மனதில் இடம் பிடிப்பார்கள்.

21 வயது வரை அதிகம் சிரமப்படுவார்கள். சிறு வயதிலேயே குடும்ப பாரத்தைச் சுமக்க வேண்டி வரும். அதனால் கல்வி தடைபடும். மனதில் எதையும் வைத்துக்கொள்ள மாட்டார்கள். பலர், மடாதிபதிகளாக, பள்ளி, கல்லூரி தாளாளர்களாக விளங்குவார்கள். 39 வயதிலிருந்து சகல சௌபாக்கியங்களையும் பெற்று தீர்க்காயுளுடன் வாழ்வார்கள்.

திருவண்ணாமலை

திருவாதிரை நட்சத்திரம் நான்கு பாதத்துக்குரிய பரிகாரங்கள்:
 

திருவாதிரை நட்சத்திரம் முதல் பாத பரிகாரம்:

திருவண்ணாமலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ அருணாசலேஸ்வரரை இந்த நட்சத்திர நாளில் வணங்குதல் நலம்.

திருவாதிரை நட்சத்திரம் இரண்டாம் பாத பரிகாரம்:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வீற்றிருக்கும் ஸ்ரீ யோக பைரவரை அஷ்டமி திதியில் வணங்கினால், நல்ல பலன் கிடைக்கும்.

திருவாதிரை நட்சத்திரம் மூன்றாம் பாத பரிகாரம்:
சென்னை, திருவொற்றியூரில் ஆதிசேஷன் பூஜித்த ஸ்ரீ வடிவுடையம்மன் உடனுறை ஸ்ரீ படம்பக்கநாதர் மற்றும் மாணிக்கத் தியாகேஸ்வரரை வணங்குதல் நலம்.

திருவாதிரை நட்சத்திரம் நான்காம் பாதம் பரிகாரம்:
ராஜமன்னார் கோயிலுக்கு அருகிலுள்ள பாமணி (திருப்பாதாளேச்சுரம்) என்ற திருத்தலத்தில், ஆதிசேஷனும் நாகலோகத்தாரும் பூஜித்த ஸ்ரீ அமிர்தநாயகியம்மை உடனுறை ஸ்ரீ சர்ப்ப புரேஸ்வரரை வணங்குவது நல்லது.

மற்ற நட்சத்திரங்களின் குணநலன்கள் 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!