காலை, மதியம், மாலை, இரவு... கோபுர தரிசனம் செய்தால் என்னென்ன பலன்கள்?

"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்" என்பது ஆன்றோர் மொழி. கோயில்களில், கோபுரங்களின் மேல் உள்ள கலசங்கள் தங்கம், செம்பு அல்லது பஞ்சலோகங்களினால் செய்யப்படுகின்றது. அதன் உள்ளே தானியங்களும் நிரப்பப்படுகின்றன. கலசங்களின் கூரிய முனைகள் ஆகாயத்தில் உள்ள பிராண சக்தியை கிரகித்து வெளிவிடும். இந்த சக்தியை நம் உடல் பெறுவதால் நம் உடல் புத்துணர்ச்சி அடைகிறது. இதற்கும் மேலாக கோபுரங்கள் நமக்கு அளிக்கும் நன்மைகள் பல. அதை விரிவாகப் பார்ப்போம்.

கோபுர தரிசனம்

யாக குண்டங்களில் இருந்து கொழுந்துவிட்டு எரிகிற தீப்பிழம்பின் உருவமே கோபுரங்கள். அக்னியைத் தாண்டி எந்தத் தீய சக்தியும் ஆலயத்துக்குள் அடியெடுத்து வைக்க முடியாது. இந்த நம்பிக்கையே கோபுரங்கள் உருவாக காரணமான கோபுரத் தத்துவம். இதன் அடிப்படைக் கூறுகள் காப்பு, உயரம், அலங்காரம் ஆகிய மூன்றும்தான். கோபுர வழிபாடு முழுமையான ஆலய வழிபாட்டுக்குச் சமமானது. சிற்ப சாஸ்திரத்தின்படி கோயில்களின் அமைப்பு மனித உடலின் வடிவத்தில் இருக்க வேண்டும். இது "க்ஷேத்திரம் சரீர பிரஸ்தாரம்" என்று அழைக்கப்படுகிறது.

கோபுரங்கள் இறைவனின் பாதங்களாக பாவிக்கப்படுகிறது. அதைவிட மேலாக ஸ்தூல லிங்கமாகவும் போற்றி வணங்கப்படுகிறது. கோபுரத்தின் தளங்கள், கோபுர நிலைகள் என்று அழைக்கப்படும். நாம் கோபுரத்தை காணும் இடத்திற்கும், கோபுரம் அமைந்திருக்கும் இடத்திற்கும் இடைப்பட்ட இடம் “பூலோகக் கைலாசம்“ என்று அழைக்கப்படுகிறது.

ஆலயத்தின் உள்ளே இருக்கும் இறைவனின் பிரதிபிம்பம்தான் கோபுரங்கள். கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள், உடல் ஊனமுற்றோர் போன்றோர் கோபுரத்தைத் தரிசித்தாலே போதும், ஆலயத்தினுள் வீற்றிருக்கும் இறைவனின் அருள் கிட்டும்.

நம் முன்னோர்கள் கோபுரங்களை உயரமாக அமைத்ததில் வேறு பல நன்மைகளும் உண்டு. முந்தைய காலங்களில் ஊரில் உள்ள மற்ற கட்டடங்களை விட கோயில் கோபுரங்கள்தான் உயரமாக அமைந்திருக்கும். இதற்கு பின் உள்ள காரணத்தை அறிந்தால் நம் முன்னோர்களின் தற்காப்பு அறிவு புலப்படும். கோபுரங்களில் உள்ள கலசங்கள் இடி, மின்னல் ஏற்படும் போது மக்களைக் காக்கும் இடிதாங்கியாகச் செயல்படும். இதற்குள்ளே வைக்கப்படும் தானியங்கள் நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை ஆகியவை ஆகும். அதிலும் குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக வைத்தனர். "வரகு" மின்னலை தாங்கும் ஆற்றலை பெற்றுள்ளது என இன்றைய அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.

உயர்ந்த கோபுரம்

வெள்ளம் வரும் நாட்களில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். அப்போது நாம் பாதுகாத்து வைத்திருந்த விதைநெற்களும் அடித்துச் செல்லப்படும். அந்த நேரங்களில் விவசாயத்திற்கு தேவையான விதைதானியங்கள் தந்து நம்மை காக்கும் கடவுளாக கோபுரத்தின் கலசங்களே உள்ளன.

நாம் கோபுரத்தினை தரிசிக்கும் காலத்தை பொறுத்து நமக்கு ஒவ்வொரு நன்மையைத் தருகிறது.

காலையில் கோபுர தரிசனம் - நோய் நீக்கும்

மதியம் கோபுரதரிசனம் - செல்வ வளம் பெருகும்

மாலையில் கோபுர தரிசனம் - பாவம் போக்கும்

இரவு கோபுர தரிசனம் - வீடு பேரு கிடைக்கும்

தஞ்சை பெரிய கோயில்

நாம் வேலைப்பளுவினால், வேறு சில காரணங்களால் கோயிலுக்குச் செல்ல முடியாத நேரங்களில் நமக்கு கோபுரங்களே இறைவனின் வடிவமாக காட்சி தருகின்றன. சிவன், பெருமாள், முருகன், அம்மன், பிள்ளையார் , இப்படி ஒவ்வொரு இறைவன் வீற்றிருக்கும் ஆலயங்களின் கோபுரங்களை காணும் போது நமக்கு அந்த இறைவனையே தரிசித்த உணர்வு ஏற்படுவது இயற்கையானது. கோபுர தரிசனம் நமக்கு மனத்தூய்மை, இறைநாட்டம், நோய் எதிர்ப்புசக்தி போன்றவற்றையும் கொடுக்கிறது. கோபுர தரிசனம் நமக்கு பாவ விமோசனம் தரக் கூடியது. நாளும் ஆலயங்களுக்குச் சென்று இறைவனைத் தொழுவோம்! இயலாத நேரங்களில் கோபுர தரிசனம் செய்து நன்மைகளைப் பெறுவோம்.

- இரா.செந்தில் குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!