பூசம் நட்சத்திரக்காரர்கள் பின்பற்ற வேண்டிய ஜோதிட ஆன்மிக நடைமுறைகள், பரிகாரங்கள்! #Astrology

27 நட்சத்திரக்காரர்களின் குணங்கள், நடைமுறைகள் அவர்கள் மேற்கொள்ளவேண்டிய பரிகாரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. புனர்பூசம் நட்சத்திரத்தைத் தொடர்ந்து பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றி 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.

பூசம்

நட்சத்திர தேவதை:  பிரம்மாவின் மானஸபுத்திரனும் தேவ குருவுமான பிரஹஸ்பதி.
வடிவம்        :                மாலை போன்ற தோற்றமுடைய எட்டு நட்சத்திரங்களின் கூட்டம்.கே.பி.வித்தியாதரன்
எழுத்துகள்        :         ஹூ, ஹே, ஹோ, ட.

பூசம் நட்சத்திரக்காரர்களின் பொதுவான பலன்கள் :
நட்சத்திர மாலை, என்னும் நூல், சிறந்த கல்விமானாகவும், பிரச்னைகளை அலசி ஆராய்ந்து எளிதில் தீர்வு காணும் வல்லமை கொண்டவராகவும் பக்திமானாகவும் விளங்குவார்கள் என்று கூறுகிறது.
 இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி, அகிலத்தில் புகழ் பெற்று விளங்குவார்கள். பூஜ்ஜியத்திலிருந்து ராஜ்ஜியத்தைப் பிடிப்பார்கள். 

எந்த நெருக்கடியையும் சமாளிக்கும் சாமர்த்தியம் உடையவர்கள். உறவினர்களுக்கும் உடன் இருப்பவர்களுக்கும் உதவும் மனப்பாங்கு இருக்கும். பொறுப்பானதும் சவாலானதும் பெரியதுமான பணிகளைத் திறம்பட செய்து  முடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். தயவு தாட்சண்யமும் மனசாட்சிக்கு பயந்து நடப்பதும் இவர்களுடைய சுபாவம்.

நன்னெறிகளும் ஒழுக்கமும் குடிகொண்டிருக்கும்.
இவர்களது முகம் பார்ப்பதற்குப் பரவசமாக இருக்கும். கண்களும், நாசியும் கவர்ச்சியாக இருக்கும். பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பது போல, பசியைப் பொறுக்க மாட்டார்கள். விருந்தோம்பலில் இவர்களுக்கு நிகர் யாருமில்லை. அமிர்தமே ஆனாலும், பிறருக்குப் பகிர்ந்தளித்து உண்பார்கள். நண்பர்களுக்கு முன்னுரிமை தருவார்கள்.

கிரகம்

பாட்டன், பாட்டி, தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள், பேரன், பேத்தி என்று ஒரு பெரிய கூட்டுக்குடும்பமாக வாழ விரும்புவார்கள். கால்நடைகளை விரும்பி வளர்ப்பார்கள். தரமான வண்டி வாகனங்களும் இவர்களுக்கு அமையும். 

சகல விஷயங்களிலும் தெளிவான ஞானமும், எவ்வளவு சிக்கலான விஷயங்களையும் புரிந்துகொள்ளும் அறிவாற்றலும் இருக்கும். அதே சமயத்தில் சட்டென்று கோபம் வந்துவிடும். குடும்பத்தில் எந்த விஷயமாக இருந்தாலும், தன்னால்தான் முடிந்தது என்ற இறுமாப்பு இருக்கும். சுய கௌரவத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். 

தளராத தைரியமும், தன்னம்பிக்கையும் இருப்பதால், தலைவனாவார்கள். அடிக்கடி கற்பனை உலகத்தில் சஞ்சரிப்பதால், கதை, கட்டுரை எழுதுவதெல்லாம் இவர்களுக்கு சர்வசாதாரணம். பிள்ளைகள் மீது பாசம் உடையவராகவும், மனைவிக்கு இனியவராகவும் இருப்பார்கள். 
குடும்பத்துக்குத் தேவையான சின்னச்சின்னப் பொருட்களைக்கூடப் பார்த்துப் பார்த்து வாங்குவார்கள். யாரிடமேனும் உதவி பெற்றிருந்தால், அதை மறக்காமல் பல வருடங்கள் கழித்தேனும் திருப்பிச் செய்து விடுவார்கள்.  

பிரபலமாக இருப்பதுடன், பிரபலங்களுடன் நட்பாகவும் இருப்பார்கள். சினிமாத் துறையில், இயக்குனர், கதாநாயகன், கதாசிரியர், பாடலாசிரியர் ஆகியோராகப் பலர்  இந்த நட்சத்திரத்தில் இருப்பார்கள். ஆயுள் காரகனான சனி பகவானுடைய நட்சத்திரமாதலால்  தீர்க்காயுளுடன் இருப்பீர்கள். புதுமை விரும்பிகள்.

திருப்பரங்குன்றம்
பூசம் நட்சத்திரக்காரர்கள் நான்கு பாத பரிகாரங்கள்:
பூசம் நட்சத்திரம் முதல் பாதம் பரிகாரம்:
பண்ருட்டிக்கு அருகிலுள்ள திருவதிகையில் வீற்றிருக்கும் ஸ்ரீ திரிபுர சுந்தரி உடனுறை திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரரை வில்வத்தால் அர்ச்சித்து வணங்குதல் நலம்.
பூசம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் பரிகாரம்:
சீர்காழிக்கு அருகிலுள்ள திருவெண்காட்டில் வீற்றிருக்கும் பிரம்மவித்யா நாயகி உடனுறை சுவேதாரண்யேஸ்வரரை வணங்குதல் நலம்.
பூசம் நட்சத்திரம் மூன்றாம் பாத பரிகாரம்:
கன்னியாகுமரிக் கடலோரத்தில் வலது கையில் ஜப மாலையுடன் அருள்பாலிக்கும் ஸ்ரீ பகவதியம்மனை வணங்குதல் நலம்.
பூசம் நட்சத்திரம் நான்காம் பாத பரிகாரம்:
அறுபடை வீடுகளில் முதலாவது வீடான திருப்பரங்குன்றத்தில் மணக்கோலத்தில் வீற்றிருக்கும் முருகப் பெருமானை வணங்குதல் நலம்.

மற்ற நட்சத்திரங்களின் குணநலன்கள் 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!