வெளியிடப்பட்ட நேரம்: 12:03 (23/04/2017)

கடைசி தொடர்பு:12:25 (20/09/2018)

ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் பின்பற்ற வேண்டிய ஆன்மிக ஜோதிட நடைமுறைகள், பரிகாரங்கள்! #Astrology

27 நட்சத்திரக்காரர்களின் குணங்கள், நடைமுறைகள் அவர்கள் மேற்கொள்ளவேண்டிய பரிகாரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. பூசம் நட்சத்திரத்தைத் தொடர்ந்து ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றி 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.

ஆயில்யம்

நட்சத்திர தேவதை : மூன்று கண்களையும் சிவந்த மேனியையும் உடைய சர்ப்பராஜன் எனப்படும் ஆதிசேஷன்.
வடிவம் : பாம்பைப் போன்ற வளைந்து நெளிந்தவடிவமும் ஆறு  நட்சத்திரங்களையும் கொண்ட கூட்டமைப்பு.கே.பி.வித்யாதரன்
எழுத்துகள் : டி, டு, டே, டோ.
ஆயில்யம்  நட்சத்திரக்காரர்களின் பொதுவான பலன்கள் : வித்யாகாரகனான புதனின் முதல் நட்சத்திரம் இது.

நட்சத்திர மாலை, என்னும் நூல் வேகமாக நடப்பவர்களாகவும், இளகிய மனதுடையவர்களாகவும், கல்வி மீது நாட்டம் உள்ளவர்களாகவும், சரளமாகப் பேசக் கூடியவர்களாகவும் இருப்பார்கள் என்று கூறுகிறது. 

ஜாதக அலங்காரம், எதிரிகளையும் நேசிப்பவர்களாகவும், மாதா, பிதாவை வணங்குபவர்களாகவும், அழகிய கண்கள், பரந்த நெற்றி, சுருண்ட கேசம் ஆகியவை உள்ளவர்களாகவும் திகழ்வார்கள் என்று கூறுகிறது. பிருகத்ஜாதகம், ‘பிறர் மனதை எளிதில் கவர்பவர்கள்’ என்று கூறுகிறது. 

ஆயில்ய நட்சத்திரத்துக்கு புதனும், சந்திரனும் அதிபதிகள். இதில் பிறந்தவர்கள் சமயோஜித புத்தி உள்ளவர்கள். கனிவான பேச்சால் கல் மனதையும் கரைப்பவர்கள். மற்றவர்களின் மன ஓட்டத்தை நாடி பிடித்துப் பார்ப்பவர்கள். 

கலகலப்பான பேச்சால் அருகில் இருப்பவர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைப்பார்கள். ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தால் மாமியாருக்கு ஆகாது என்று பலர் கூறுகின்றனர். பண்டைய நூல்களில் இதற்கு ஆதாரம் ஏதும்  இல்லை. 

உடல் வலிமையும் மன வலிமையும் இவர்களிடம் ஒருங்கே காணப்படும். நாளை நடப்பதை இன்றே அறியும் நுண்ணிய ஆற்றல் உண்டு. பகை பல வந்தாலும் பதறாமல் இருப்பார்கள். மற்றவர்களுடைய ஆலோசனையை எளிதில் ஏற்கமாட்டார்கள். கண்களாலேயே பேசி, பல காரியங்களை சாதிக்கக் கூடியவர்கள். 

காடு, மலை, கடல் போன்ற இயற்கை வளங்களை அதிகம் ரசிப்பவர்கள். ஆதலால், அது போன்ற இடங்களுக்கு அடிக்கடி சென்று வருவார்கள். பயணப் பிரியர்களாக இருப்பார்கள்.

நட்சத்திரம்

பாலால் ஆன இனிப்பை அதிகம் விரும்பி உண்பார்கள். திடீரென்று கார வகை உணவுகளுக்கு மாறி சிறிது காலம் கழித்து மீண்டும் இனிப்பை ருசிப்பார்கள். நொறுக்குத் தீனி விரும்பிகள். 

இளமையிலேயே சுக்கிர திசை வருவதால், 23, 24 வயதிலேயே சிலருக்குத் திருமண வாழ்க்கை அமையும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவார்கள், ஆதலால் மருந்து, மாத்திரைகள் தேவைப்படாது. 

பள்ளிப் பருவத்தில் வறுமை இருக்கும். இருந்தாலும், மத்திய வயதிலிருந்து யோகம் அடிக்கும். மனைவி, பிள்ளைகள் மீது பிரியமுடன் இருப்பார்கள். பிள்ளைகளுக்கு வேண்டிய எல்லா வசதி, வாய்ப்புகளையும் செய்து கொடுப்பார்கள். குடும்பத்துக்காக அதிகம் செலவுசெய்வார்கள்.

வாழ்க்கையைத் திட்டமிட்டு வாழ்பவர்கள். தான் வேலை செய்யும் நிறுவனத்தில், நேர்மை, நாணயத்துடனும் நிறுவனத்துக்கு விசுவாசமாகவும் நடந்துகொள்வார்கள். அதனால் ஓய்வு பெறும் வரை ஓரே நிறுவனத்தில் பணியாற்றுவார்கள். மனசாட்சிக்கு மீறி நடக்கவே மாட்டார்கள். கெட்டவர்களுக்குத் துணை போகவே மாட்டார்கள். தைரியம் மிக்கவர்கள்.

பெற்றோரிடம் அதிக பாசம் உடையவர்கள். பேச்சு வன்மையால் எந்தக் காரியத்தையும் சாமர்த்தியமாக முடிப்பார்கள். ஆடம்பரமாக வாழ ஆசைப்படுவார்கள். என்றாலும், தகிடுதத்தங்களில் இறங்கிப் பணம் சம்பாதிக்க மாட்டார்கள். 

படிக்கின்றபோதே கலைக் கழகம், விளையாட்டு ஆகியவற்றில் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெறுவார்கள். தினசரி படிப்பது குறைவாக இருந்தாலும், தேர்வு நேரத்தில் குறைந்த நேரத்தில் நன்கு படித்து அதிக மதிப் பெண்களைப் பெற்று பெற்றோரை ஆச்சர்யப்பட வைப்பார்கள்.

இந்த நட்சத்திரக்காரர்களில் பலர் கல்லூரிப் பேராசிரியர், ஆய்வுக் கூட அறிவியல் அறிஞர், குழந்தை நல மருத்துவர், காவல் அதிகாரி ஆகியவர்களாக விளங்குவார்கள். 

பேசும்போதெல்லாம் இடைச்செருகலாகப் பழமொழியைப் பயன்படுத்துவார்கள். மற்றவர்களைப் போல் பேசியும் நடித்தும் காட்டுவதில் வல்லவர்கள். சில நேரங்களில் சோம்பலாகவும் அலட்சியமாகவும் இருப்பார்கள். 

40 முதல் 47 வயதுக்குள் சொத்துகள் வாங்குவார்கள்; அந்தஸ்துப் பெருகும், அதிகாரமிக்கப் பதவியில் அமர்வார்கள். நீண்ட ஆயுள் உண்டு.
ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் பரிகாரத் தலங்கள் ஏதாவது ஒன்றில் சர்ப்ப சாந்தி செய்வது நல்லது.

ஶ்ரீரங்கம்

ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் நான்கு பாத பலன்கள்:

ஆயில்யம் நட்சத்திர முதல் பாதம் பரிகாரம்:

ஸ்ரீரங்கத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் கருடாழ்வாரையும் அரங்கநாயகி சமேத அரங்கநாதரையும், சக்கரத்தாழ்வாரையும்  வணங்குதல் நலம்.

ஆயில்யம் நட்சத்திர இரண்டாம் பாதம்  பரிகாரம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீற்றிருக்கும் கோதைநாச்சியார், வடபத்ரசாயி (ரங்கமன்னார்) புஜங்கசயன், கருடாழ்வார் ஆகியோரை வணங்குதல் நலம்.

ஆயில்யம் நட்சத்திர மூன்றாம் பாதம் பரிகாரம்:

திருப்புறம்பியத்தில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீ பிரளயம் காத்த பிள்ளையாரை தேனாபிஷேகம் நடைபெறும் விநாயக சதுர்த்தி திதியில் கண்டு வணங்குவது நல்லது.

ஆயில்யம் நட்சத்திர நான்காம் பாதம் பரிகாரம்:

திருவாரூருக்கு அருகிலுள்ள எண்கண் என்ற ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீசுப்ரமண்யரை வணங்குதல் நலம்.

மற்ற நட்சத்திரங்களின் குணநலன்கள்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்