வெளியிடப்பட்ட நேரம்: 19:34 (25/04/2017)

கடைசி தொடர்பு:22:00 (25/04/2017)

தென்னிந்தியாவின் முதல் சி.எஸ்.ஐ தேவாலயத்தைக் கட்டியவர், தஞ்சை பிராமணப் பெண்!

தென்னிந்தியாவின் முதல் சி.எஸ்.ஐ. தேவாலயம் கட்டியது,  தஞ்சை மண்ணில் பிறந்து வளர்ந்த பிராமணப் பெண் என்றால், நம்புவதற்குக் கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும் ஆனால், உண்மை அதுதான். தமிழ்ச்சினிமாவில் வரும் திடுக்கிடும் காட்சிகளைவிட திருப்பமானதாக இருக்கிறது, கோகிலா என்ற  16 வயது பெண் கிளாரிந்தாவாக ஆன கதை. 

தேவாலயம் 

இன்றைக்குச் சரியாக 247 ஆண்டுகளுக்கு முன் அந்த தஞ்சை கிராமத்து மக்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி நின்று மிகுந்த துயரத்துடனும் பயத்துடனும் அந்தக் கோர நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட அங்கிருந்த எல்லோருமே தங்களின் பிராமணப் பெண் இதயத்தைக் கல்லாக்கிக் கொண்டு சிலை மனிதர்களாக நின்று கொண்டிருந்தனர். 

16 வயது மதிக்கத்தக்க அந்த பிராமண சிறுமியை உடன்கட்டை ஏற்றத்தான் அவர்கள் அங்கே ஒன்று கூடி இருக்கின்றனர். 

தஞ்சை மண்ணை மராட்டிய அரசர்களின் பிரதிநிதிகள் ஆண்டு வந்த நேரம்.  அந்த அரச குடும்பத்தைச்சேர்ந்த ஒரு பெண்ணின் பெயர் கோகிலா.  அவரது கணவர் அரண்மனையில் நல்லதொரு பொறுப்பில் இருந்தார். அப்போதெல்லாம் பால்ய வயதிலேயே திருமணம் நடந்து விடுமல்லவா? அதற்கு கோகிலா மட்டும் விதிவிலக்கல்லவே. ஆனால் கோகிலாவின் வாழ்க்கையில் விதி விபரீதமாக விளையாடியது. அவரது கணவர்  உடல் நலம் குன்றிய நிலையில், ஏதோ வைத்தியக் கோளாறினால் தனது உயிரை இழந்தார்.

கணவன் மறைந்தால் மனைவியும் உடன்கட்டை ஏற வேண்டுமென்ற கேவலமான நடைமுறையின் காரணமாக, கோகிலாவையும்  அலங்கரித்து உடன்கட்டை ஏறச்செய்ய அழைத்து வந்திருந்தனர். இந்த கொடூரமான காட்சியைப் பார்க்கத்தான் ஊர் மக்கள் கூடி இருந்தனர்.

கோகிலா கணவனின் சடலத்தைக் கிடத்தி, அதற்கு தீமூட்டினர். கொழுந்துவிட்டெறியும் அந்த கோரத்  தீயில் கோகிலாவையும் கொடூரமாக தள்ளுவதற்காக இழுத்து வந்தனர். ஆனால், திடுமென பாய்ந்து வந்த வெள்ளைக்கார துரை ஹென்றி லிட்டில்டன் என்பவர் கோகிலாவைக் கடத்திச்சென்று விட்டார். 

சர்ச் வளாகம்

கிழக்கிந்திய கம்பெனி அப்போதுதான் தமிழகத்தில் மெள்ள அடியெடுத்து வைத்திருந்த நேரம். அதில் ஹென்றி லிட்டில்டன் நல்ல பதவியிலிருந்தார். மனிதாபிமானத்துடன் கோகிலாவைக் காப்பாற்றி தன்னுடனே அழைத்துசென்று விட்டார். ஊரார் எல்லாம் கோகிலாவை ஒதுக்கி வைத்தனர். அதைப்பற்றியெல்லாம் கோகிலா கவலைப்பட வில்லை.  சிலநாட்கள் கழிந்தன. ஹென்றி தஞ்சையிலிருந்து பாளையங்கோட்டைக்கு மாற்றலாகி வந்தார்.

கிளாரிந்தா என்ற பெயர் மாற்றத்துடன்  கோகிலா, ஹென்றியின் வாழ்வில் இணைந்தார். தன்  இன்னுயிர் காத்தவரின் மீது கோகிலா காதல் கொண்டு  அவரை கண்ணென காப்பாற்றினார். ஆனால், ஹென்றியும் சிலநாளில் மறைந்தார் . 
கிளாரிந்தா தன் வாழ்வை முழுவதுமாக இறைப்பணிக்கும் மக்களுக்கு  சேவை செய்யவும், தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.  அங்கு வசித்த பிள்ளைகளுக்கு கல்வியைத்தந்தார். ஞாயிற்றுக் கிழமைகளில் பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்தினார். அதில் பலரும் கலந்து கொண்டனர்.இதனால் அந்தப்பகுதி மக்களிடையே விரைவிலேயே நற்பெயர் ஈட்டினார்.

சர்ச் வளைவு 

ஊர் மக்கள் பயன் பெற வேண்டுமென பொது கிணறு ஒன்றை வெட்டினார். தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் செலவிட்டு, ஒரு தேவாலயம் ஒன்றையும், குழந்தைகள் படிக்க பள்ளிக்கூடம் ஒன்றையும் கட்டினார். இவரே வகுப்பெடுக்கவும் தொடங்கினார். இந்த கிறிஸ்தவ தேவாலயம்தான் தென்னிந்தியாவின் முதல் கிறிஸ்தவ தேவாலயமாக இன்றும் திகழ்கின்றது.     
நெருப்பில் பூத்த  தெய்வமகள் கோகிலா என்னும்  கிளாரிந்தா!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்