தமிழர்களின் ஐந்து திணைகளுக்குமான கடவுள்கள், வழிபடும் முறைகள்! | Tamil people's homeland gods and worship methods

வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (26/04/2017)

கடைசி தொடர்பு:18:31 (26/04/2017)

தமிழர்களின் ஐந்து திணைகளுக்குமான கடவுள்கள், வழிபடும் முறைகள்!

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை இவையே ஐந்திணைகள். திணைக்கடவுள்கள் பற்றி தொல்காப்பியம்,

'மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே
' என்கிறது.

இதில்  பாலைத் திணை தவிர்த்து நான்கு திணைக் கடவுள்கள் பற்றி தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். ஏனெனில், `பாலை’ என்பது தனி நிலம் அல்ல. குறிஞ்சியும் முல்லையும் மழை இல்லாமல் காய்ந்து போன நிலமே பாலை எனப்படும். எனினும், பாலைக்கும் தெய்வம் உண்டு. ஒவ்வொரு திணை மக்களும் ஒவ்வொரு கடவுளை வழிபட்டனர். அவை மாயோன், சேயோன், வேந்தன் , வருணன், கொற்றவை ஆகியன. ஐந்திணை மக்களின் வழிபாட்டு முறையைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

முருகன்

ஐந்து வகை தமிழர் திணைகளுள் இது முதன்மையானது. மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி எனப்படும். குறிஞ்சித் திணையில் வாழ்ந்த மக்கள் குன்றக்குறவர்கள் ஆவர் . இவர்கள்  ஐவனம், தினை ஆகிய  தானியங்களைப் பயிரிட்டு வாழ்ந்தவர்கள் . குறிஞ்சி நிலத்தின் கடவுள் முருகு. முருகுக்கு நெடுவேள், சேய் போன்ற பெயர்களும் உண்டு. முருகுவை 'சேயோன்' என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.

ஐந்திணை கடவுள் முருகன்

மலையே முருகு வீற்றிருக்கும் இடமாகும். குறிஞ்சி நிலத்தில் செந்தினையை நீரோடு கலந்து தூவி வழிபடும் முறை இருந்தது. இது வேலன் வெறியாடிய சடங்கு எனப்படும். இது  இளம்பெண்ணைப் பற்றிய முருகனை விலக்கிட வேண்டி நடத்தப்படும் ஒரு நிகழ்வாகும். இது புராதன சமயம் சார்ந்தது . முருகையே பிற்காலத்தில் 'முருகன்' என்று அழைத்தனர். மலையில் உறைந்து இன்றளவிற்கும் மக்களுக்கு எண்ணற்ற நன்மைகள் புரியும் தெய்வமாகப் போற்றப்படுகிறார்.

திருமால்

காடும் காடு சார்ந்த இடமும் முல்லை. இது குறிஞ்சிக்கும் மருதத்துக்கும் இடைப்பட்ட நிலம். இங்கு வாழ்ந்த மக்கள் இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களின் உணவாக வரகு, சாமை இருந்தன. முல்லை நில மக்கள்  மால் எனப்படும் திருமாலை தங்கள் கடவுளாக வழிபட்டனர் . திருமாலை 'மாயோன்' என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.

திருமால்

திருமால் நீலமணி போன்றவர் என்றும், கரிய மலர் போன்றவர் என்றும்  கார்மேகம், காரிருள், கடல் போன்றவர் என்றும் சொல்லப்படுகிறது. சங்க இலக்கியங்கள், `ஒளிரும் திருமேனியையுடையவர்’ என்று குறிக்கின்றன. திருமாலை, 'கண்ணன்' என்றும் அழைக்கின்றனர். ஆடுமாடு மேய்த்தல் முல்லை நில மக்களின் தொழில். முல்லை நில மக்களில்  ஒருவராகப் பிறந்தவரே கண்ணன் . முல்லை நில மக்களுக்கு வரும் துன்பங்களைப் போக்கி அவர்களைக் காப்பாற்றியவரே கண்ணன் என்றும் சொல்லப்படுகிறது.

இந்திரன்

வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம். மருத  நில மக்களின் இறைவன் இந்திரன். 'வேந்தன்' என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். இந்திரன் என்ற சொல்லுக்கு, `வேதக் கடவுளரின் தலைவன்’ என்று பொருள் . போருக்குச் செல்லும் முன்னர் இந்திரனையே  மருத நில மக்கள் வணங்கினர். இந்திரன், பொன் இடியை ஆயுதமாகக் கொண்டவன். இந்திரனுடைய ஆயுதம்  'வஜ்ஜிராயுதம். வஜ்ஜிரம் என்றால், `இடி’ என்று பொருள்.

இந்திரன்

 

இந்திரன் ஐராவதம் என்னும் வெள்ளை யானையை வாகனமாகக்கொண்டவன். சிலப்பதிகாரத்தில் இந்திரவிழா பற்றித் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. உழவர், உழத்தியர், கடையர், கடைசியர், ஊரன், மகிழன், களமர் போன்றோர் மருத நில மக்கள் ஆவர். வேளாண்மையே மருத நில மக்களின் தொழில்.

வருணன்

கடலும் கடல் சார்ந்த நிலமே நெய்தல். சேர்ப்பன், நுளைச்சி, நுளையர், பரதவர், பரத்தியர் நெய்தல் நிலத்து மக்கள் ஆவர். நெய்தல் நில மக்களின் கடவுள் வருணன். வருணன் ஆகாயத்தைக் குறிப்பவர். வருணன் மேகம், மழை, ஆறு, கடல்  என்று நீர் நிலைகளுடன் தொடர்புடைய நீர்க்கடவுள். உலகம் முழுவதும் பரந்து இருப்பவர். `உலகத்தையே ஆள்பவர்’  என்று அழைக்கப்படுவதும் உண்டு.

வருணன்

நெய்தல் நில மக்கள் முத்துக்களையும், வலம்புரிச் சங்குகளையும் காணிக்கையாகச் செலுத்தி, தங்கள் கடல் தெய்வத்தை வழிபட்டனர். சிலப்பதிகாரத்தில்  மாதவி, கோவலன் அல்லாத வேறொருவனை தான் காதல்கொண்டது போல் பாடியதை மன்னிக்க வேண்டி கடல் தெய்வமான வருணனை வழிபடுகிறாள்.

கொற்றவை

முல்லையும் குறிஞ்சியும் முறை திரிந்து கதிரவன் வெம்மையாலே எங்கும் வளமை தீய்ந்து போன நிலமே பாலை. விடலை, காளை, மறவர், மறத்தியர் பாலை நிலத்து மக்கள். பாலை  நிலத்தின் கடவுள் 'கொற்றவை'.

கொற்றவை

கொற்றவைக்கு அவரை, துவரை, எள்ளுருண்டை, இறைச்சி முதலியன படைக்கப்படும். கொற்றவை பவனி வரும்போது புல்லாங்குழல் இசைக்கப்படும். பாலை நில மக்கள் தாங்கள் போருக்குச் செல்லும் முன்னர் போரில் வெற்றியடைய தங்கள் தெய்வத்தை வழிபடுவர்.


ஐந்திணைக் கடவுள்களைப் போற்றும் விழாக்கள்

கார்த்திகைக் கார்த்திகை : முருகன்
ஆவணித் திருவோணம் : இந்திரன்
சித்திரைச் சித்திரை: இந்திரன்
மாசி மகம் : வருணன்
புரட்டாசித் திருவோணம்: கொற்றவை


தமிழர்கள் ஆதிகாலத்தில் இயற்கையையே தங்கள்  கடவுளாக வணங்கி வந்தனர். அதில் இருந்து மேம்பட்டவிதமாகத் தங்களைக் காத்த மக்களையே இறைவனாக  வழிபடத் தொடங்கியது திணைவாழ்வில்தான். ஐந்திணைக் கடவுள்களும் அவ்வகைக் கடவுள்களே. தமிழர்  மரபில் ஐந்திணை வாழ்வியல், வழிபாடு மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்