நிறைமாத கர்ப்பிணியாக அருளும் புட்லூர் அம்மன்...!

உங்கள் பிரச்னைகள் தீரவேண்டுமா?

அதிகப் பணம் செலவிடாமல், வெறும் மூன்றே எலுமிச்சம்பழங்கள் மட்டுமே உங்கள் பிரச்னைக்குத் தீர்வாகுமா?

உங்களுக்குள் பாசிட்டிவான எண்ணங்கள் தோன்றவேண்டுமா?

அப்படி என்றால் நீங்கள் செல்லவேண்டியது பூங்காவனத்தம்மன் கோயிலுக்குத்தான்.

வெறும் மூன்றே எலுமிச்சம் பழங்களில் எல்லா வரங்களையும் அள்ளித் தருகிறாள் திருவள்ளூர் மாவட்டம் புட்லூரில் கோயில் கொண்டுள்ள பூங்காவனத்தம்மன்.

 

புட்லூர் அம்மன்

அம்மன் என்றால் அழகு....

அம்மன் என்றால் அன்பு...

அம்மன் என்றால் ஆக்ரோஷம்....

அம்மன் என்றால் ஆவேசம்....

நாம் எந்த மனநிலையில் இருக்கிறோமே அந்த மனநிலையில் நமக்குக் காட்சி தருவாள் அம்மன். மனம் அழகாகவும் அன்பாகவும் இருந்தால் அம்மனும் நமக்கு அழகாகவும் அன்பின் வடிவமாகவும் காட்சி தருவாள். நாம் ஆக்ரோஷமாகவும் ஆவேசமாகவும் இருந்தால், அம்மனும் அப்படியே நமக்குக் காட்சி தருவதுடன் நம்முடைய ஆக்ரோஷத்தையும் ஆவேசத்தையும் அகற்றி, நம்மையும் அன்புமயமாகச் செய்தருள்வாள்.

பூங்காவனத்தம்மனின் கோயிலுக்குள் கால் வைக்கிறபோது இந்த அத்தனை உணர்வுகளையும் ஒருசேர உணர முடியும்.
மஞ்சளும் குங்குமமும், வேப்பிலையும் மணக்கும் சந்நிதிக்குள் நிறைமாதக் கர்ப்பிணியாகப் படுத்த நிலையில் வரவேற்கிறாள் பூங்காவனத்தம்மன். அந்தத் திருவுருவத்தை தரிசிக்கும்  யாருக்கும் உச்சி முதல் பாதம் வரையிலான சிலிர்ப்பு சில நொடிகள் நீடிக்கும் நிச்சயம்.

புட்லூர் அம்மன்

நிறைமாதக் கரு சுமந்த வயிற்றுடன், வாய் திறந்து மல்லாந்த நிலையில் படுத்திருக்கும் அந்த அம்மனை வணங்கினால், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை. ஆனால், குழந்தைக்காக மட்டுமின்றி, எல்லா விதமான வேண்டுதல்களுக்கும் பூங்காவனத்தம்மனைத் தேடி வருகிறார்கள் மக்கள்.

கடவுள் பற்று என்பதே ஒருவிதமான நம்பிக்கைதான். கோயிலுக்குச் செல்கிறபோது அந்த அமைதியும் ஆரவாரமற்றச் சூழலும் நம்மையும் பற்றிக் கொள்ளும். மனதும் உடலும் அமைதியானாலே எல்லாம் நன்மைக்கே என்கிற எண்ணம் தோன்றும். கோயில் வாசனையும் இனி எல்லாம் சுகமே என்கிற எண்ணமும் சேர்ந்து பிரச்னையின் தீவிரத்தைப் பாதியாகக் குறைத்துவிடும். கோயிலை விட்டு வெளியேறும் போது மனது லேசாகியிருக்கும். கடவுள் நம்பிக்கையின் பின்னணியில் உள்ள உளவியல் இதுதான்.

அப்படிப் பார்த்தால் புட்லூர் பூங்காவனத்தம்மன்கூட மிகச் சிறந்த உளவியல் நிபுணர் என்றே சொல்லலாம். இந்த அம்மனிடம் வேண்டுதலை முன்வைக்க எலுமிச்சம் பழங்களுடன் செல்ல வேண்டும். ஏழை, பணக்காரர் யாரானாலும் எலுமிச்சம் பழம் மட்டுமே அனுமதி. 

புட்லூர் அம்மன்

'எலுமிச்சம் பழங்களில் கரும்புள்ளிகளோ, திட்டுகளோ இல்லாமல் பார்த்து வாங்கிச் செல்லுங்கள்' என அட்வைஸ் செய்கிறார்கள் ஏற்கெனவே கோயிலுக்குப் போய் வந்தவர்கள். அதன் பின்னணியிலும் ஓர் உளவியல் இருக்கிறது. அதைப் பற்றிப் பிறகு பார்ப்போம்.
இப்படி வாங்கிச் செல்கிற எலுமிச்சம் பழங்களை கோயிலை வலம் வந்த பிறகு அம்மனின் பாதங்களில் வைத்துவிட்டு, பெண்கள் புடவை முந்தானையை ஏந்திப் பிடித்தபடி அமர்ந்திருப்பார்கள். அம்மன் பாதத்தில் இருந்து எலுமிச்சம் பழங்கள் உருண்டு முந்தானையில் விழுந்தால் நினைத்தது நடந்தேறும் என ஆனந்தம் கொள்வார்கள் பக்தர்கள்.

விளிம்பான ஓர் இடத்தின் மீது வட்டமான எலுமிச்சம் பழங்களை வைக்கும்போது அது உருண்டு விழுவதுதானே இயல்பு? பழங்கள் விழுந்துவிட்டாலே தங்கள் பிரச்னை பாதியாகக் குறைந்துவிட்ட திருப்தியோடு திரும்புகிறார்கள் பக்தர்கள். நம்பினால் நடக்கும் என்கிற உளவியலும் பாசிட்டிவிட்டியும்தான் இங்கே வொர்க் அவுட் ஆகிறது.

புட்லூர் அம்மன்

இதையும் தாண்டி சிலருக்கு எலுமிச்சம் பழங்கள் விழுவேனா என அடம் பிடிப்பதும் உண்டு. கரடுமுரடனான பழங்கள் என்றால் ஒருவேளை அப்படிச் சில நொடிகள் விழாமல் இருந்து சற்று நேரத்துக்குப் பிறகே விழும். அதற்காகத்தான் கரும்புள்ளிகளோ, திட்டுகளோ இல்லாத பழங்கள் அவசியம் என்கிற ஆலோசனை.

பழங்கள் விழாத பக்தர்கள் இன்னொரு முறை அம்மனைச் சுற்றி வருவார்கள். அதற்குள் ஏற்படுகிற அதிர்வுகளில் அந்தப் பழங்கள் நிச்சயம் விழுந்துவிடும்.

'பிரச்னைகள் நிச்சயம் தீரும். ஆனால் சற்று தாமதமாகலாம் போல.... பொறுமை அவசியம் என்கிறார் அம்மன்'' என்பதாக அதையும் பாசிட்டிவாகவே பதியவைத்து வழியனுப்பப் படுகிறார்கள் பக்தர்கள்.

எல்லாக் கடவுள்களுமே பக்தர்களுக்குள் விதைப்பது பாசிட்டிவ் மனப்பான்மையையும் நம்பிக்கையையும்தான். பூங்காவனத்தம்மனும் அதையே செய்கிறாள். ஆனால் இனிமையாகவும் எளிமையாகவும்.

புட்லூர் அம்மன் கோயில்

ஒரு விஷயம் நடக்காமலிருப்பதற்கான ஆயிரம் காரணங்களை நினைத்துக் கவலைப்படுவோருக்கு, அது நடக்கக்கூடும் என்பதற்கான ஒரே நம்பிக்கைதான் கடவுள்! 

'நம்பினோர் கெடுவதில்லை' என்கிற வார்த்தைகள் கடவுளை நம்பினோர் என்று மட்டுமே அர்த்தம் கொள்ளப்பட வேண்டியது அல்ல... கடவுள் நம்பிக்கையுடன், தன்னம்பிக்கையும் இருப்பவர்கள் என்றே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

அந்த அடிப்படை உளவியலைப் போதிக்கிற புட்லூர் பூங்காவனத்தம்மனை எல்லோருமே ஒரு முறை தரிசிக்க வேண்டியது அவசியம்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!