வெளியிடப்பட்ட நேரம்: 06:53 (01/05/2017)

கடைசி தொடர்பு:06:52 (01/05/2017)

கொலை சதியிலிருந்து ஸ்ரீராமாநுஜர் உயிர்காத்த பெருமாளும் தாயாரும்! #SriRamanujaJayanti

ஶ்ரீராமாநுஜரை தெய்வப் பிறவி என்று நம்பிய பக்தர்கள் இருந்ததைப் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். அதே நேரத்தில் அவரைக் கொன்று விடுவதற்குக் காத்திருந்த சிலர் செய்த சதியைப் பற்றித் தெரியுமா..? தெய்விக அவதாரமாக பூமியில் ஒருவர் பிறக்கப் போகிறார். அவர் சாதி, சமயம் பாராமல், மானிட ஒற்றுமையை வலியுறுத்துவார். அகிலமெங்கும் ஆன்மிகநெறியைப் பரப்புவார். அவரே ஆதிசேஷனின் மறு அவதாரமான   ஶ்ரீராமாநுஜர்’ என்று அவர் பிறப்பதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்னரே நம்மாழ்வாரால் கூறப்பட்டது. அத்துடன் ராமாநுஜரின் வடிவம் இப்படித்தான் இருக்கும் என்று அவர் பிறப்பதற்கு முன்னரே தனது சீடரான மதுரகவி ஆழ்வாருக்கு அளித்தார் நம்மாழ்வார். 

ஶ்ரீராமாநுஜர்

ஶ்ரீபெரும்புதூரில் ஆசூரி கேசவ சோமயாஜிக்கும் காந்திமதி அம்மையாருக்கும் பிள்ளையாக அவதரித்தார் ஶ்ரீராமாநுஜர். இவரது தாய் மாமா திருமலையில் பணிபுரிந்தவர் என்பதால், இவரை `திருமலை நம்பி’ என்று கூறுவர்.

ராமாநுஜரின் மிகப் பெரிய விசுவாசி’ என்றும், `ராமாநுஜரின் நிழல்’ என்றும் அவரின் சீடரான கோவிந்தனைக் கூறுவார்கள். ஒருநாள் கோவிந்தன் நந்தவனத்தில் இருந்த பாம்பின் வாயில் கையை விட்டு, பின்பு நீராடி தன் கடமைகளைச் செய்துகொண்டிருந்ததைக் கண்டறிந்தார் ராமாநுஜர். "கோவிந்தா , பாம்பின் வாயில் யாராவது கையைவிடுவார்களா? ஒருவேளை அது உன்னைக் கடித்திருந்தால் என்ன செய்வாய்?’’ என்று கடிந்துக்கொண்டார்... அதற்கு கோவிந்தனோ, "அந்தப் பாம்பின் நாக்கில் முள் குத்திவிட்டதால், வலியில் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்ததைக் கண்டேன். அந்தப் பாம்பின் நாக்கிலிருந்த முள்ளை அகற்றவே அவ்வாறு செய்தேன்’’ என்றார். இத்தகைய மனம் படைத்த கோவிந்தன்தான் பின்னாளில் ராமாநுஜரின் உயிரைக் காத்தார்.

ஸ்ரீவைஷ்ணவர்களுக்கே உரிய ஆசார அனுஷ்டானங்களைத் தீவிரமாகக் கடைப்பிடித்த ஸ்ரீராமாநுஜரின் வைஷ்ணவப் பற்றும் பக்தியும் தீவிரமாக வளர்ந்தன.இளவயதில் வேதாந்தக் கருத்துக்களைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு ராமாநுஜரும் கோவிந்தரும் குருகுலம் சென்றனர். அங்கிருந்த யாதவபிரகாஸரின் கருத்துகளைக் கேட்கக் கூட்டம் அலை அலையாக வரும். ராமாநுஜர் வருகைக்குப் பிறகு நடந்த கதையே வேறு. இயற்கைக்குப் புறம்பான கருத்துகளைக் கூறிவந்த யாதவபிரகாஸரின் கருத்துகளை எதிர்த்து, தம்முடைய கருத்துகளை எடுத்துக்கூறி வந்தார். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத யாதவபிரகாஸர் ராமநுஜரைக் கொல்லச் சதி திட்டம் தீட்டினார்.

ஸ்ரீராமாநுஜர்

`காசிக்குச் செல்லும்போது, கங்கையில் ராமாநுஜரைத் தள்ளிவிடலாம்’ என்று தன் சீடர்களுடன் காசிக்குச் சென்றார் யாதவபிரகாஸர். இது எப்படியோ கோவிந்தனுக்கு தெரிந்துவிட,  ராமாநுஜரிடம் இந்த விஷயத்தைக் கூறி, அந்தக் குழுவில் இருந்து தப்பி ஓடிவிடச் சொன்னார்.
ராமாநுஜரும் தப்பி ஓடி, வழி தெரியாமல் ஒரு காட்டில் நடு இரவில் மாட்டிக்கொண்டார். அப்போது காஞ்சி வரதராஜப் பெருமானும், பெருந்தேவி தாயாரும் வேடன் வேடுவச்சியாக வந்து காப்பாற்றி, காஞ்சியில் கொண்டுவந்து அவரைச் சேர்த்தார்கள். தக்க சமயத்தில் இந்த உதவியை கோவிந்தன் செய்யாவிட்டால், ராமாநுஜர் நமக்குக் கிடைத்திருப்பாரா? உலகமே கண்டிராத வகையில் 120 ஆண்டுகள் பூவுலகில் உடல்நலம் சிறிதளவும் குன்றாமல் வாழ்ந்தவர்.

ஸ்ரீராமாநுஜரின் ஜீவிய காலத்திலேயே அவரது விக்கிரகங்களும் சிலைகளும் சிஷ்யர்களால் தயாரிக்கப்பெற்று பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அவற்றில் ஸ்ரீரங்கம்- 'தானான திருமேனி’, மேல்கோட்டை- 'தானுகந்த திருமேனி’, ஸ்ரீபெரும்புதூர் - 'தமர் உகந்த திருமேனி’ ஆகிய மூன்று விக்கிரகங்களையும் ஸ்ரீராமாநுஜரே தழுவி, தமது ஆசிகளோடு அளித்தார்.

இப்போது 1,000 ஆண்டுகள் ஆகிவிட்டன. நம்மால், கண்களால் காண இயலாவிட்டாலும், இன்றும் நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார் ஸ்ரீராமாநுஜர்....!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்