பாகுபலியை தரிசிக்க, இந்திரகிரி மலைக்குச் செல்லலாம்!

'பாகுபலி'

இந்தப் பெயர் தற்போது இந்தியா முழுமைக்கும் ஒலித்துக்கொண்டிருக்கும் பெயர். திரைப்படம் என்பதையும் தாண்டி இந்தப் பெயருக்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய வரலாறு உண்டு. இந்தியா முழுமைக்கும் பரவியிருந்த ஒரு மதத்துக்கும் இந்தப் பெயருக்கும் மிகப் பெரிய தொடர்பு உண்டு.

அது எந்த மதம், என்ன வரலாறு என்பதை சற்று விரிவாகப் பார்ப்போம்.

பாகுபலி

இந்தியா முழுமைக்கும் ஒரு காலத்தில் பரவி இருந்த மதம் சமணம். இம்மதத்தின் முதல் தீர்த்தங்கரர் 'ரிஷபதேவர் 'ஆவார். "தீர்த்தங்கரர்' என்றால் 'தம் ஆன்மாவைப் பிறவிப் பெருங்கடலில் இருந்து கரையேற்றிக்கொண்டவர் ' என்று பொருள். இவர் பிறந்த தினத்தையே அட்சய திரிதியை நாளாகக் கொண்டாடப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இவருக்கு யசஸ்வதி, சுகந்தை என்ற இரு மனைவியர். யசஸ்வதிக்கு 'பரதன்' என்ற மகனும், 'பிராமி' என்ற மகளும் உண்டு. சுகந்தைக்கு 'பாகுபலி' என்ற மகனும், 'சுந்தரி' என்ற மகளும் உண்டு. ஆதிநாதர் தன் இருமகள்களில் பிராமிக்கு எழுத்தையும், சுந்தரிக்கு எண்களையும் கற்றுத் தந்தார். இதனாலே எழுத்து முறையை 'பிராமி' என்று அழைக்கின்றோம் என்று சொல்லப்படுகிறது. ரிஷபதேவர் தன் நாட்டை தன் இரு மைந்தர்களுக்கும் பங்கிட்டுத் தந்துவிட்டு, நாட்டை விட்டு வெளியேறி கடும் தவம்புரிந்து தீர்த்தங்கரர் ஆனார்.

ரிஷபதேவரின் இரண்டாவது மைந்தனான 'பாகுபலி' அழகும் வீரமும் நிறைந்தவனாக விளங்கினான் . 'பாகுபலி' என்றால் வலிமையான புஜம் கொண்டவன் என்று பொருள் . மக்கள் அனைவரும் அண்ணன் பரதனை விட தம்பி பாகுபலியையே பெரிதும் விரும்பினர். இதனால் கோபம் கொண்ட பரதன் தன் தம்பியின் பங்கையும் அபகரிக்க படையெடுத்தான். போரில் படைவீரர்கள் உயிரிழப்புகளைத் தடுக்கும் பொருட்டு அண்ணன், தம்பி இருவருக்கு மட்டும் 'மல்யுத்தம்', 'ஜலயுத்தம்' மற்றும் 'திருஷ்டியுத்தம்' போன்ற போட்டிகள் நடத்தலாம் என்று அமைச்சர் யோசனை சொன்னார். சகோதரர்கள் இருவரும் அதற்கு ஒப்புக்கொண்டனர். போட்டிகள் துவங்கின. அனைத்துப் போட்டிகளிலும் அண்ணனை வென்றான் 'பாகுபலி'. இறுதியாக அண்ணனை அடித்துக் கொல்ல வேண்டும். ஆனால் வாடிய தன் அண்ணனின் முகத்தைக் கண்ட பாகுபலி அண்ணணை அடித்துக் கொல்லாமல், தன் தலைமுடியைத் தானே பறித்து வீசி எறிந்துவிட்டு சமணத் துறவியானான்.

பாகுபலி முக்தி அடைந்தது எப்போது?

தவம்

பலநாட்கள் கடும் தவம் புரிந்தும் பாகுபலி முக்தி அடையவில்லை. இதனால் கவலையுற்ற பாகுபலியின் தங்கைகளான பிராமி மற்றும் சுந்தரி இருவரும் ஆதிநாதரிடம் இதுபற்றிக் கேட்டனர். அதற்கு அவர் பாகுபலி யானையின் மேலிருந்து இறங்கினால்தான் முக்தி கிட்டும் என்றார். உடனே பாகுபலியைச் சந்தித்து , 'அண்ணா ஏன் யானை மீது நின்று தவம் செய்கிறாய்?' என்று கேட்டனர். அப்போதுதான் தான் கடும் தவம்புரிகிறேன் என்ற தன்னுடைய அகங்காரம்தான் முக்திக்குத் தடையாக இருக்கிறது என்பதை உணர்ந்தான். பின்பு ஒரு வருடத்துக்கும் மேலாக நின்றவாறு ஆடாமல் அசையாமல் தவம் புரிந்து முக்திஅடைந்தார்.

பாகுபலிக்குக் கோயில் எங்கே உள்ளது?

கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் இந்திரகிரி மலையில் உள்ள சரவணபெலகோலாவில் பாகுபலிக்குக் கோயில் அமைக்கப்பட்டு வழிபடப்படுகிறது. இந்த இடமே சமணர்கள் தமிழ்நாட்டில் நுழைய வழிவகுத்த இடம். தலைக்காடு கங்கர் என்பவர்தான் 10-ம் நூற்றாண்டில் பாகுபலி சிலையை நிறுவியவர். இது ஒரே பாறையால் செதுக்கப்பட்ட சிலையாகும். இச்சிலையை அமைத்தவர் சாவுண்டராயர் என்னும் கொம்மதர். அதனாலேயே கொம்மதரின் ஈஸ்வரன் கோமதீஸ்வரர் என்று பாகுபலி அழைக்கப்படுகிறார்.

இங்கு 12 வருடங்களுக்கு ஒருமுறை மகாமஸ்டாபிஷேகத் திருவிழா 20 நாள்கள் நடைபெறும். இந்த விழாவின்போது கோமதீஸ்வரருக்கு 1008 கலசங்களில் தண்ணீர், பால், தேங்காய், வெண்ணெய், வாழைப்பழம், குங்குமம், வெல்லம், சந்தனம் ஆகிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

சமண சமயத்தின் முக்கிய நோக்கம் ஐம்புலன்களை அடக்கி முக்தி அடைதலே. அந்த வகையில் வீரத்தில் தலைசிறந்தவனாக இருந்தாலும் துறவறம் பூண்டு முக்தி அடைந்து தான் 'ஒரு மாவீரன்' என்பதையும் நிரூபித்துள்ளார் பாகுபலி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!