வெளியிடப்பட்ட நேரம்: 11:17 (05/05/2017)

கடைசி தொடர்பு:11:17 (05/05/2017)

கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்வது எப்படி? - புத்தரின் பதில்

சிறுகுழந்தைகள் தொடங்கி, மாணவ மாணவிகள், இளைஞர்கள் யுவதிகள், ஆண்கள், பெண்கள், முதியோர்கள் என சகலருக்கும் சகிப்புத்தன்மையும், விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ளும் மனோபாவமும், மனப்பக்குவமும் ரொம்பவே குறைந்து போய் விட்டது. இதற்கு தலைகீழாக சகமனிதர்களைப் பாராட்டும் குணம் குறைந்து போனதோடு, எதையெடுத்தாலும் விமர்சிக்கும் போக்கும் நம்மை அறியாமலே பலருக்கும் வந்துவிட்டது. நாம் அணியும் உடை பார்க்கும் வேலை தொடங்கி ஓவியம், எழுத்து, கலை சினிமா அரசியல் என பொதுவிஷயங்கள் விமர்சிக்க ஆரம்பித்துவிட்டோம். சரி குறைகூறுகின்றார்கள் என்றால், அப்படி இப்படி என்றில்லை. நன்றாகவே காய்ச்சி எடுத்துவிடுகிறார்கள். இந்த விமர்சனகளில் பல  பூனை பூனைக்குட்டியைக் கவ்வுவதாக இல்லாமல், பூனை எலியைக் கவ்வும் விதமாகத்தான் இருக்கின்றன. இந்த இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்வது எப்படி? கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்வது எப்படி? புத்தர் சொல்லும் புதிரான வழி! 

புத்தர்

புத்தரும் அவருடைய சீடர்களும் ஒரு ஊருக்கு வந்திருந்தனர். அங்கிருந்த அரச மரத்தடியில் அவர்கள் சற்று இளைப்பாறி விட்டுப் புறப்பட்டனர். அதற்குள் அங்கு பெரும் கூட்டம் கூடிவிட்டது. வந்தவர்கள் எல்லாம்,  வாழ்க கோஷம் போட்டு அவருடைய ஆசியைப் பெற்றுச்சென்றனர்.

அவர்கள் நடந்துசெல்லும் பாதையில் எல்லாம் ஏராளமான மலர்கள், வகைவகையான இனிப்புகளைத் தட்டுதட்டாக கொண்டுவந்து கொடுத்தனர். தங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வரும்படி ஆளாளுக்கு அழைத்தனர். ஆனால் புத்தரோ எல்லாவற்றையும் ஒரு மென் புன்னகையால் கடந்து போனார். 

புத்தர்

சீடர்களுக்கோ இதில் சற்று வருத்தம்தான். ஒருசில சீடர்கள் மட்டும் 'வந்தவர்கள் முகம் கோணுவார்களே சிறிதளவாவது நமது குரு எடுத்துக்கொள்ளக்கூடாதா ஏன் இப்படி செய்கிறார்' என்று ஆத்திரப்படக் கூடச்செய்தனர். ஆனால், வெளியில் காண்பித்துக்கொள்ளவில்லை. 

பிறகு தங்கள் இருப்பிடம் வந்து ஓய்வு எடுத்துவிட்டுப் புறப்பட்டனர். இந்த ஊரிலோ புத்தரும் அவரது சீடர்களும் உள்ளே வர விடாமல் ஊர்க்காரர்கள் தடுத்தனர். கேட்கவே கூசும் வார்த்தைகளால் அவர்களை திட்டித் தீர்த்தனர். புத்தர் மௌனமாக தன் சீடர்களுடன் அந்த ஊரின் மத்தியசாலைகளின் வழியே நடந்து போனார். ஒரு சிலர்  அழுகியப்பொருட்களான முட்டை தக்காளியைக் கொண்டு வீசினர். எதையும் பொருட்படுத்தவில்லை. சீடர்களும் அவரை பின் தொடர்ந்தனர்.

ஊருக்கு வெளியே வந்ததும் சீடர்கள், புத்தரிடம், 'இந்த ஊருக்கு நாம் போக வேண்டாம் என்று முன்பே சொன்னோம் நீங்கள்தான் கேட்கவில்லை' என்றனர். 

புத்தர்

'இதுபோன்ற மக்களிடம்தான் நமக்கு வேலை அதிகமிருக்கிறது', என்றார். 'அவர்கள் நம்மை அவ்வளவு கேவலமாகப் பேசுகிறார்கள், கண்டதை எடுத்து வீசுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நாம் ஏன் வழிகாட்ட வேண்டும்? உங்களுக்கு அவர்கள் மீது கோபமே இல்லையா?' என்று கேட்டனர்.

புத்தர் பதிலுரைத்தார்.

'காலையில் நாம் சென்ற ஊரில் உள்ளவர்கள் பாராட்டுகளையும் இனிப்புகளையும் வழங்கியபோது அங்கேயே வைத்துவிட்டுத்தான் வந்தோம். அதேபோல்தான் இவர்களது வசைகளையும் அங்கேயே விட்டுவிட்டு வாருங்கள், என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்