சூரியன் முதல் கேது வரை... கிரகங்களுக்கு வலிமை சேர்க்கும் பரிகாரங்கள்!

ஒருவரின் ஜனன ஜாதகத்தில் எல்லா கிரகங்களும் நல்ல இடத்தில் இருப்பது என்பது அவருடைய பூர்வ புண்ணியத்தைப் பொறுத்தே அமையும். பெரும்பாலான ஜாதகங்களில் ஏதேனும் ஒரு கிரகம் தோஷம் பெற்றிருப்பதை நாம் காணலாம். பொதுவாக ஒரு கிரகம் லக்னத்தில் இருந்து எண்ணி வரும் 6,8,12 போன்ற மறைவு ஸ்தானங்களில் இருந்தாலோ, பகை, நீச்சம் பெற்று இருந்தாலோ அந்த கிரகம் வலுக்குன்றிப் போவதுடன், அந்த கிரகத்தினால் ஏற்படக்கூடிய நற்பலன்கள் நமக்குக் கிடைக்காமல் செய்துவிடுகிறது.

கிரகம்

ஜாதகத்தில் எந்த கிரகம் வலுக் குன்றி இருக்கிறதோ அந்த கிரகத்துக்கு உரிய எளிய பரிகாரம் செய்வதால், அந்த கிரகம் வலுப் பெற்று நமக்கு நற்பலன்களைத் தரும். அப்படி நவகிரகங்களுக்கும் உரிய எளிய பரிகாரங்களை இங்கே பார்ப்போம். 

நெய் தீபம்

சூரியன்:

ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் வலுக்குன்றி இருந்தால், சூரிய பலம் பெற ஞாயிறுதோறும் அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று சூரிய பகவானுக்கு நெய்தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து வருவதுடன், ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் பாராயணம் செய்யலாம். வசதி படைத்தவர்கள் மாணிக்கக் கல் பதித்த மோதிரத்தை வலக் கையின் மோதிர விரலில் அணிந்துகொள்ளலாம்.

அம்பிகை

சந்திரன்:

சந்திரன் வலுக்குன்றி இருந்தால், சந்திர தசை மற்றும் சந்திர புக்தியில் திங்கட்கிழமை விரதம் இருந்து, அருகில் உள்ள அம்பிகையின் ஆலயத்துக்குச் சென்று நெய்தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்வதுடன், பௌர்ணமி தினங்களில் விரதம் இருந்து இரவு பூரண சந்திரனுக்கு வீட்டிலேயே பூஜை செய்தால், சந்திரன் வலுப் பெற்று நற்பலன்களைப் பெறலாம்.

முருகன்

செவ்வாய் தோஷ நிவர்த்தி:

செவ்வாய் வலுக்குன்றி இருந்தால், செவ்வாய்க்கிழமைகளில் ஏதேனும் முருகர் கோயிலுக்குச் சென்று முருகப் பெருமானை அர்ச்சனை செய்து வழிபடுவதுடன், செவ்வாய் கிரகத்துக்கு செண்பக மலரால் அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால், செவ்வாய் வலுப் பெற்று, பூமி யோகம், சகோதரர்களால் ஆதாயம் போன்ற நற்பலன்களைப் பெறலாம்.

பெருமாள்

புதன்:

புதன் வலுக்குன்றி இருந்தால், புதன்கிழமை விரதமிருந்து, பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி தளத்தால் அர்ச்சனை செய்வதும், விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் புதனை வலுப்பெறச் செய்து, புதனால் நமக்குக் கிடைக்கக்கூடிய நற்பலன்களை அதிகரிக்கச் செய்யும்.

மகான்கள்

குரு:

குரு வலுக்குன்றி இருந்தால், வியாழக்கிழமை விரதமிருந்து முல்லை மலர் தூவி, கொண்டைக் கடலையுடன் தயிர் சாதம் படைத்து குரு காயத்ரியை 24 முறை பாராயணம் செய்து வழிபடுவதுடன், மகான்கள், சித்தர்களை வழிபடவேண்டும். இதனால் குரு வலுப் பெற்று நற்பலன்களை அருள்வார்.

மகாலட்சுமி

சுக்கிரன்:

சுக்கிரன் வலுக்குன்றி இருந்தால், வெள்ளிக்கிழமைகளில் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, தாயாருக்கு தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து, நெய்தீபம் ஏற்றி வழிபடுவதுடன், மகாலக்ஷ்மி அஷ்டகம் போன்ற லக்ஷ்மி ஸ்துதிகளைப் பாராயணம் செய்தால், சுக்கிரன் வலுப் பெற்று நல்ல வாழ்க்கையை அருள்வார்.

சனிபகவான்

சனி:

சனி வலுக்குன்றி இருந்தால், சனிக்கிழமை விரதமிருந்து, கருங்குவளை மலர் தூவி, எள் அன்னம் நைவேத்தியம் செய்து, சனிபகவானின் வாகனமான காகத்துக்கு அன்னம் அளித்து வந்தால், சனி பகவான் வலுப் பெற்று நன்மைகளை வாரி வழங்குவார்.

துர்கை

ராகு:

ராகு வலுக் குன்றி இருந்தால், செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாள்கள் ஒன்றில் ராகு கால வேளையில் துர்கைக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடுவதுடன், துர்காஷ்டகம் போன்ற துர்கை ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்து வந்தால், நாளடைவில் ராகு வலுப் பெற்று, அவரால் நமக்கு ஏற்படக்கூடிய நன்மைகளைத் தருவார்.

கேது:

கேது வலுக் குன்றி இருந்தால், சதுர்த்தி வரும் நாள்களில் விநாயகப் பெருமானுக்கு அறுகம்புல் மாலை அணிவித்து, நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட்டு வரவேண்டும். இப்படித் தொடர்ந்து செய்து வந்தால், கேதுவால் ஏற்படக்கூடிய நற்பலன்கள் நமக்குத் தவறாமல் கிடைக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!