வெளியிடப்பட்ட நேரம்: 19:09 (05/05/2017)

கடைசி தொடர்பு:19:40 (05/05/2017)

புத்திரதோஷம் எதனால் ஏற்படுகிறது? அதற்கு உரிய பரிகாரங்கள் என்ன? #Astrology

'குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கட் மழலைச்சொல் கேளாதார் ' என்கிறார், திருவள்ளுவர். ஆனால், அத்தகைய குழந்தை பாக்கியம் எல்லோருக்கும் அத்தனை எளிதாகக் கிடைப்பதில்லை. அந்த பாக்கியம் சிலருக்குக் கிடைக்காமலே போய், அவர்களது வாழ்க்கை பெரும்போராட்டமாகவே  மாறிவிடுகிறது. அது ஏன் அதற்கு ஜோதிட ரீதியாக உள்ள விசேஷ காரணங்கள் என்ன? புத்திரதோஷம் எதனால் ஏற்படுகிறது. அதற்கு உரிய முறையான பரிகாரங்கள் என்ன என்று ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.

புத்திரதோஷம்

'ஆசைக்கொரு பெண்ணும், ஆஸ்திக்கொரு ஆணும் வேண்டும்' என்பார்கள். ஒருவருடைய வம்சத்தை விருத்தி செய்வதற்கு மழலைச் செல்வம் அவசியம்? புத்திரதோஷம் எதனால் ஏற்படுகிறது என்பது பற்றி பார்ப்போம்.

ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு 5-ம் இடம் என்று சொல்லப்படும் பூர்வ புண்ணிய ஸ்தானமே  புத்திர ஸ்தானம்  என அழைக்கப்படுகிறது.  5-ம் இடம் நமது முன் ஜென்மத்தின் புண்ணிய பாவங்களை நமக்குத் தெரிவிப்பதோடு  அல்லாமல் அதிர்ஷ்டம், புத்திரப்பேறு, புத்தி, பூர்வீகச் சொத்துகள் போன்ற பலவற்றுக்கும் காரகத்துவம் பெற்றுத் திகழ்கின்றது.
5-ம் இடத்தின் அதிபதி 5-ல் இருந்தாலோ சுபக் கிரகங்களின் பார்வை 5-ம் இடத்துக்கு ஏற்பட்டாலோ, புத்திரகாரகனான குரு நல்ல நிலையில் இருந்தால்தான் ஒரு ஜாதகருக்கு புத்திரப்பேறு உண்டாகும். 

வித்யாதரன்மாறாக, 5 -ம் இடத்து அதிபதி பகை, நீசம், மறைவு என்னும் நிலையில்
கெட்டுப்போய், 5-ம் இடத்தில் பாவிகள் இருந்து புத்திரக்காரகனான குருவும் கெட்டிருந்தால், புத்திரதோஷம் உண்டாகும்.
புத்திரதோஷம்  ஒவ்வொரு லக்னத்துக்கும் எந்த எந்த கிரகங்களால் எப்படி ஏற்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

மேஷ லக்னத்துக்கு 5 - ம் இடம் சிம்மம். சிம்மத்துக்கு அதிபதியான சூரியன், கன்னியிலோ, துலாத்திலோ, விருச்சிகத்திலோ, மீனத்திலோ இருந்தால், புத்திரதோஷம் உண்டாகும். 

ரிஷப லக்ன ஜாதகர்களுக்கு 5 -ம் இடமான கன்னியில் சுக்கிரன் இருந்தாலும், புதன் துலாத்தில், மேஷத்தில், தனுசில் நின்றாலும், புத்திர உற்பத்தி பாதிப்படையும். 

மிதுன லக்னத்துக்கு 5 - ம் இடம் துலாம். துலாத்தின் அதிபதி சுக்கிரன் 4-ம் இடமான கன்னியில் இருந்து, துலாத்தில் சூரியன் இருந்தால், புத்திர தோஷம் உண்டாகும். இதில் செவ்வாய் இருந்தாலும், புத்திரதோஷம் ஏற்பட்டுவிடும்.

கிரகங்கள்

கடக லக்னத்துக்கு 5 -ம் இடம் விருச்சிகம், லக்னாதிபதி விருச்சிகத்தில் நின்று செவ்வாய் கடகத்தில் நின்றால், புத்திரப்பேறு பாதிக்கும். மேலும், விருச்சிகத்தில் புதன் நின்று, கேதுவின் தொடர்பு ஏற்பட்டாலும், சனி நின்றாலும் புத்திரதோஷம்தான்.

சிம்ம லக்னத்துக்கு 5- ம் இடமான தனுசுக்கு அதிபதி குரு 6 -ம் இடமான மகரத்திலும், 6-ம் இடத்துக்கு உடைய சனி தனுசில் நின்றாலும், புத்திர பாதிப்பு உண்டு. 5 -ம் இடத்தில் குரு ஆட்சி பெற்று, சனியுடன்  இணைந்தாலோ பார்வை செய்தாலும் தோஷம் உண்டாகும்.

கன்னி லக்னத்துக்கு 5- ம் இடமான மகரத்தில் சனி நிற்பது தோஷமாகாது என்றாலும், சூரியனுடன் இணைந்து இருந்தால், 5-ம்  இடத்துக்குடையவன்  ஐந்திலேயே கெடுவதால் 5- மிடமும் 5 - ம் பாவாதிபதியும் கெடுகிறார். இது புத்திரதோஷம்தான். 

துலாம் லக்னத்துக்கு  5 - இடம் கும்பம். இதன் அதிபதி சனி மேஷத்தில் இருந்து, கும்பத்தில் செவ்வாய் நின்றாலோ, சனி கன்னி ராசியில் இருந்து கும்பத்தில் குரு சஞ்சாரம் செய்தாலோ, செவ்வாய் சிம்மத்தில் நின்று பார்த்தாலோ புத்திரதோஷம் ஏற்படும்.

விருச்சிக லக்னத்துக்கு 5 -ம் இடமான மீனத்தில் சனி இருந்து, மகரத்தில் குரு சஞ்சரித்தால் தோஷம் உண்டு. மீனத்தில் குரு இருந்து மகரத்தில் சனி இருந்தாலும், புத்திர தோஷம் உண்டாகும்.

தனுசு லக்னத்துக்கு 5-ம் இடமான மேஷத்தில் செவ்வாய், சனி கூடினாலோ, செவ்வாய் 8 -ம் இடத்திலும் சனி 5 -ம் இடமான மேஷத்திலிருந்தாலும் புத்திர ஷம் உண்டாகும்.

மகர லக்னத்துக்கு 5 மிடம் ரிஷபம். இதன் அதிபதி சுக்கிரன், கன்னியில் நீசமாக, 5 ல் ராகு கேது சூரியனுடன் இணைந்தால் புத்திர தோஷம் ஏற்படும். சுக்கிரன் சிம்மத்திலிருந்து ரிஷபத்தில் நின்ற குருவை நீசச் சந்திரன் சூரியனுடன்கூடி பார்வை செய்தால் தோஷம் தரும்.

கும்ப லக்னத்துக்கு 5 -ம் இடமான மிதுனத்தில் சந்திரன் இருந்து, மீனத்தில் புதனும் நின்று பாவிகள் பார்த்தால், வம்ச விருத்திக்குத் தடை உண்டாகும். புதனும், சந்திரனும் மிதுனத்தில்கூடி நிற்க, செவ்வாய் பார்த்தால் புத்திர தோஷம் தரும்.

மீன லக்னத்துக்கு 5 - ம் இடம் கடகம். கடகத்தில் சூரியன் சஞ்சரித்தாலோ, சுக்கிரன் சனி சஞ்சரித்தாலோ புத்திரதோஷம் உண்டாகும். இதைப் போல சந்திரனும் பாக்கியாதிபதியான செவ்வாயும் பரிவர்த்தனை பெறுவதும் தோஷத்தை உண்டாக்கும்.

இத்தகைய துயரத்துக்கு என்ன காரணம்? புத்திரதோஷத்தைத் தரும். கிரகம் சூரியன். சிவதூஷணை செய்ததாலும், முன்னோர்களுக்கு முறையாக ஈமக் கடன் செய்யாததாலும், தகப்பனுடைய சாபத்தினாலும், முன்னோர்களின் சாபத்தினாலும்  இத்தகைய தோஷம் ஏற்படுகிறது.

புத்திரபாக்கியம்


பரிகாரம்
புத்திரதோஷம் உள்ளவர்கள் முதியோர் காப்பகங்களிலுள்ள முதியோருக்கு உணவு, உடை வழங்கி அவர்களின் ஆசியைப் பெற்றால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.
*  சந்திரனால் புத்திரதோஷம் ஏற்பட்டிருந்தால், பெண் சாபத்தாலும், தாயாரை சரியாக கவனிக்காததாலும் தோஷம் ஏற்படுகிறது.

பரிகாரம்:
இதற்கு முதியோர் இல்லங்களில் உள்ள ஆதரவற்ற பெண்களுக்கு உணவு, உடை வழங்குவதால் அவர்களின் ஆசிபெற்று தோஷ பரிகாரம் பெறலாம்.
* செவ்வாயால் புத்திரதோஷம் ஏற்பட்டிருந்தால், தனது எதிரிகளின் சாபத்தாலும், சகோதர, சகோதரிகளை சரியாக பராமரிக்காததாலும் அவர்கள் இட்ட சாபத்தினால் தோஷம் நேர்ந்ததை அறியலாம்.

பரிகாரம்:
இத்தகைய தோஷமுள்ளவர்கள், முதிர்கன்னியாக இருக்கும் ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு பண உதவி செய்தும், ஏழைச் சிறுவர்களுக்கு கல்விச் செலவு செய்வதும் சரியான தோஷ பரிகாரமாகும்.
* தோஷம் தருபவர் புதனாக இருந்தால்,  ஸ்ரீவிஷ்ணு தூஷணை செய்ததாலும், தாய்மாமனால் இடப்பட்ட சாபத்தாலும் புத்திர தோஷம் ஏற்பட்டதை அறியலாம்.

பரிகாரம்
இவ்வகையான தோஷமுடையவர்கள், தன்னால் இயன்றவரை ஏழைகளின் திருமணத்துக்கு சரீரத்தால் உழைப்பாலோ, பொருளுதவி செய்வதாலோ பரிகாரம் தேடலாம்.

 

நவக்கிரகங்கள்

*  குரு பகவானால் தோஷம் ஏற்பட்டால்  அந்தணரைக் கொன்ற பாவத்தாலோ, குல தெய்வக் குற்றத்தாலோ, மரங்களை காரண காரியமின்றி வெட்டியதால் உண்டான சாபத்தாலோ புத்திர தோஷம் ஏற்பட்டதை அறிய வேண்டும்.

பரிகாரம்:
குலதெய்வ வழிபாடு. வயோதிக அந்தணருக்கு தானதர்மம் செய்தல், திருக்கோயில்களில் உழவாரப்பணி செய்வதன் மூலம் பரிகாரம் தேடலாம்.
* சுக்கிரனால் தோஷம் ஏற்பட்டால் மனைவியின் சாபந்தாலோ, பெண்ணை ஏமாற்றியதலோ, பசுவதை செய்ததாலோ ஏற்பட்ட  தோஷம்  என அறியலாம்.

பரிகாரம்: 
ஏழைப் பெண்களுக்குத் திருமண உதவி, மருத்துவ உதவி செய்தல், பசுக்களை பூஜித்து கோசாலை அமைத்து பராமரித்தல் போன்ற செயல்களைச் செய்தால் பரிகாரம் கிடைக்கும்.
* சனியினால் ஏற்பட்ட தோஷம் என்றால், பிறர் மனைவியை அபகரித்ததால் உண்டான கணவனின் சாபத்தினாலும், நயவஞ்சகத்தால் ஏமாற்றப்பட்ட ஒரு ஏமாளியின் சாபத்தாலும், ஏற்பட்ட தோஷமாகும்.

முதியோர் இல்லம்


பரிகாரம்:
வறுமையில் வாடும் ஏழைகளுக்கு உணவு, உடை, தானம் செய்வதாலும், கோயில்களில் உழவாரப் பணி செய்வதன் மூலமும், ஏழை உடல் ஊனமுற்றோருக்கு கைத்தடி, சைக்கிள் தானம் செய்வதன் மூலமும் பரிகாரம் தேடலாம்.
* ராகு கேதுக்களால் தோஷம் ஏற்பட்டால், ஞானிகளின் சாபத்தாலும், முப்பாட்டன் பாட்டிகள் இட்ட சாபத்தாலும், நாக தோஷத்தாலும் தோஷம் ஏற்பட்டதென அறியலாம்.

பரிகாரம்:
ஞானிகளின் ஆசிரமத்துக்கு பொருள் தானம் செய்வதன் மூலமும், வயோதிகர்களுக்கு உணவு, உடை, மருத்துவ வசதிகள்  செய்வதன் மூலமும், விலங்குகளுக்கு உணவளிப்பதன் மூலமும், மரம் நட்டு வளர்ப்பதன் மூலமும் பரிகாரம் தேடலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்