‘என் உடலுக்கு இன்று மரணம்!’ உயிர்நீத்து, உயிர்த்தெழுந்த ஜென் துறவி! | 'My body is dead today!' Zen saint dead and Resurrected!

வெளியிடப்பட்ட நேரம்: 11:22 (09/05/2017)

கடைசி தொடர்பு:12:23 (09/05/2017)

‘என் உடலுக்கு இன்று மரணம்!’ உயிர்நீத்து, உயிர்த்தெழுந்த ஜென் துறவி!

எஸ்.குருபாதம், சமய மெய்யியல் ஆய்வாளர் , எழுத்தாளர் டொரொன்டோ, கனடா  

ஜப்பானைச் சேர்ந்த ஜென் ஞானியான பொகூயூ தன் சீடர்கள் அனைவரையும் வருமாறு அழைத்தார். அவர்களைப் பார்த்து ‘என் உடலுக்கு இன்று மரணம் கொடுக்கப் போகிறேன். உடலைவிட்டு நான் பிரியப் போகிறேன். என் உடலுக்கு ஒரு தனித்துவமான மரணத்தைக் கொடுக்கவேண்டும் தனித்துவமான முறை ஒன்றைக் கூறுங்கள்’ என்றார். 

ஜென்

ஒரு சீடன் 'நீங்கள் தாமரைப் பூ வடிவம் போன்று உட்கார்ந்திருந்து மரணமாகலாம்' என்றார். இன்னொரு சீடன் குறுக்கிட்டு 'பல ஞானிகள் அந்த முறையில்தான் தங்கள் உடலை விட்டுப் பிரிந்துள்ளார்கள்' என்றார். தொடர்ந்து வேறொரு சீடன், 'நீங்கள் நிலத்தில் நின்று உடலை விட்டுப் பிரியுங்கள்' என்றார். பிறிதொரு சீடன், 'ஏற்கெனவே ஒரு ஞானி அப்படித்தான் பிரிந்தார்' என்றார். அடுத்தவர் , 'நான் ஒரு வித்தியாசமான முறையைச் சொல்கிறேன்' என்றார். எல்லோரும் ஆவலாக அவர் சொல்லப்போகும் முறைக்
காகக் காத்திருந்தனர். 'தலைகீழாக நின்று இறப்பீர்களா? இது தனித்துவமாக இருக்கும்' என்றார். அதற்கு ஞானி இணங்கினார்.

கிடந்த நிலையில் மரணம்

சீடர்கள் முன்னிலையில் தலைகீழாக நின்று தன் உடலுக்குத் தன்னுணர்வுடன் இறப்பைக் கொடுத்தார். இந்தத் தனித்துவமான மரணத்துக்கு எப்படி தனித்துவமான இறுதி மரியாதை கொடுப்பது என்று தெரியாமல் சீடர்கள் விழித்தனர்.  சீடர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர். ஞானி பொகூயூ அவர்களின் அக்கா ஒரு ஞானி. அவரிடம் ஒரு ஆலோசனை கேட்போம் என்று அவர்கள் புறப்பட்டு அருகாமையில் இருந்த அவரது ஆசிரமத்துக்குச் சென்று அவரிடம் கேட்டனர். 'நாங்கள் எங்கள் குருவுக்கு மிக உயர்ந்த தனித்துவமான இறுதி மரியாதையைக் கொடுக்க வேண்டும். நாங்கள் உங்கள் ஆலோசனையைப் பெற வந்துள்ளோம்' என்றனர். 

மரணம்

இதைக் கேட்டதும் தன் தம்பியினது உடல் இருந்த இடத்துக்கு அக்கா விரைந்தார். அவரது உடலுக்கு முன் நின்று உரத்த குரலில் கத்தினார். 'நீ உன் வாழ்நாள் முழுக்க முட்டாள்தனமாக நடந்துகொண்டாய், உன் இறுதி நாளிலும்கூட இதுவரை நீ செய்யாத முட்டாள்தனங்களையும்விட  ஒரு மிகப் பெரிய முட்டாள்தனமான இறப்பை உன் உடலுக்கு கொடுத்துள்ளாய். நீ, ஞானம் அடைந்திருந்தாலும், உன் முட்டாள் வேலைகள் உன்னைவிட்டுப் போகவில்லை. இந்த முட்டாள்தனத்தைவிட்டு வெளியே வா! பிறர் எதிர்பார்ப்பதுபோல் இறவாதே!! பிறரின் எதிர்பார்ப்புக்கேற்ப  செயல்படாதே! நீ படுத்திருந்து சாதாரண நிலையில் உன் உடலை விட்டுப்பிரி, பொகூயூ நீ உயிர்த்தெழு' என்று உரக்கக் கூறினார்.

இயல்பு நிலை


சுவாசம் நின்றிருந்த அவரது உடல், இதயம் நின்றிருந்த அவரது உடல் மீண்டும் இயங்கத் தொடங்கியது. தலைகீழாக நின்று மரணமான அந்த ஞானி எழுந்த நிலத்தில் நின்றார். பின்னர் ‘உலகின் பொது மரணமான படுத்திருந்து இறப்பது’ என்ற அந்த நிலையை அவர் ஏற்று, எஸ்.குருபாதம்அதனையே தன்னுடலுக்கு அனுமதித்து இவ்வுடலை விட்டுப் பிரிகிறேன் என்றார். அப்படியே உடலை விட்டுப் பிரிந்தார். பழையபடி அவரது சுவாசம் நின்றது. இதயத் துடிப்பு நின்றது. சீடர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

இந்த ஞானி முதலில் ஏற்பட்ட மரண நிலையில் இருந்து தன் சீடர்களுக்கு மரணத்தைப் பற்றி ஒரு தெளிவைத் தத்துவார்த்தமாகச் செயல்முறையில் விளக்கியிருக்கிறார். அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் நின்ற திகைப்பையும் கவனித்திருக்கிறார். தன் மரணம் மூலம் சீடர்களுக்கு அழகான அனுபவத்தைக் கொடுத்து  மரணத்தை ஒரு சாதாரண அழகான நிகழ்ச்சியாக மாற்றி உலகத்துக்கு வழங்கிச்சென்றுள்ளார். இவர் மரணத்திலிருந்து மரணமற்ற நிலையை அடைந்தார்.

‘என் உடலுக்கு இன்று மரணம் கொடுக்கப் போகிறேன்' இறப்பைக்கூட இயல்பாக எடுத்துக்கொண்ட ஜென் ஞானி! எதையுமே இயல்பாக எடுத்துக்கொள்வது போல, மரணத்தையும் அவ்வாறே எடுத்துக்கொண்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்