Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருவோணம் நட்சத்திரக்காரர்கள் பின்பற்ற வேண்டிய ஆன்மிக ஜோதிட நடைமுறைகள், பரிகாரங்கள்! #Astrology

27 நட்சத்திரக்காரர்களின் குணங்கள், நடைமுறைகள் அவர்கள் மேற்கொள்ளவேண்டிய பரிகாரங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றோம். உத்தராடம் நட்சத்திரத்தைத் தொடர்ந்து திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றி 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.

திருவோணம்

நட்சத்திர தேவதை : கருடவாகனத்தில் எழுந்தருளியிருக்கும் 

திருமால். பாற்கடலில் சயனித்திருக்கும் நாராயணன்.கே.பி.வித்யாதரன்

வடிவம் : அம்பு போன்ற வடிவில் இருக்கும் மூன்று நட்சத்திரங்களின் கூட்டமைப்பு.

எழுத்துகள் : ஜு, ஜே, ஜோ, கா.

திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு உரிய பொதுவான பலன்கள்:

கற்பனை கிரகமான சந்திரனின் இரண்டாவது பெரிய நட்சத்திரம் இது. திருமால் அவதரித்த நட்சத்திரம். நட்சத்திர மாலை, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், நீதி நெறி தவறாதவர்; சீரிய வழியில் பொருள் தேடுபவர்; நியாயத்தை உரைக்கவல்ல நீதிபதி; செல்வந்தர் என்று கூறுகிறது.

ஜாதக அலங்காரம், கல்வி கேள்விகளில் சிறந்தவர், சிக்கனத்தைக் கடைப்பிடிப்பவர், ஆனால், தன்னை அண்டியவர்களுக்கு வாரி வழங்குபவர் என்று கூறுகிறது.

யவன ஜாதகம், இவர்களை பல சாஸ்திரங்கள் அறிந்த பண்டிதன்; தைரியசாலி; தனவந்தன்; ஆயகலை அறுபத்துநான்கையும் கற்றவர் என்று கூறுகிறது..

பிருகத் ஜாதகம், இவர்கள், நற்குணமுள்ள மனைவி உடையவர்; செல்வந்தன்; கீர்த்தி உடையவர் என்று கூறுகிறது.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வருந்திய வள்ளலாரைப்போல, மனிதநேயம் மிக்கவர். இவர்கள் மனதைப் போலவே தூய ஆடையை விரும்புவார்கள். உங்களுக்கென தனிக்கொள்கை உடையவராகவும் கோபப்பட்டு, உடனே சாந்தமடைபவராகவும் இருப்பார்கள். நடக்கும்போதும் வாகனத்தை இயக்கும்போதும் நாற்புறமும் பார்த்துச் செல்லும் ஜாக்கிரதை மிக்கவராகவும் பெண்களால் விரும்பப்படுபவராகவும் சுருண்டு, நீண்ட சிகை அழகு உடையவராகவும் வாசனைத் திரவியங்களை விரும்புபவராகவும் உள்ளங்கால் சற்றே உயர்ந்திருப்பவராகவும் இருப்பார்கள்.

எதிரிக்கும் உதவும் பரந்த மனம் கொண்டவர். லட்சியத்தை அடைவதில் பின்வாங்க மாட்டார்கள். 'தாயிற் சிறந்த கோயிலில்லை' என்று நினைப்பார்கள். கடல்கடந்து சென்றாலும், கலாசாரத்தை மறக்க மாட்டார்கள். இங்கிதமாகவும் இதமாகவும் பேசும் இவர்கள், எந்த உயிருக்கும் தீங்கு நினைக்க மாட்டார்கள். நீதிமானாகவும் பழி பாவத்துக்கு அஞ்சி நடப்பவராகவும் வாழ்வார்கள்.

மலையாள மொழியில், ‘ஓணத்தில் பிறந்தவன் கோணத்தை ஆள்வான்’ என்ற ஒரு பழமொழி உள்ளது. அதற்கேற்ப எந்தப் பகுதியில் வாழ்கிறார்களோ அந்தப் பகுதியில் புகழடைவார்கள்.

கிரகங்கள்

கடின உழைப்பால் முன்னேறி வெற்றிவாகை சூடுவார்கள். சில நேரங்களில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவார்கள். பசியைப் பொறுத்துக்கொள்ளாத இவர்கள் பாலால் ஆன இனிப்புகளை விரும்பி அதிகம் உண்பார்கள். அழகான உடலும், புன்னகை பூத்த முகமும் உடையவர். புலவராகவும் பண்டிதராகவும் சிறந்து விளங்குவார்கள்.

நவீன ரக உடைகளை விரும்பி அணிவீர்கள். பழைய பொருள்களை விற்றுவிட்டு சந்தைக்கு வரும் புதிய தொழில்நுட்ப சாதனங்களை வாங்குவதில் விருப்பம் உடையவர். பெரிய முதலீடுகள் செய்து, பிரமாண்டமாகத் தொழில் நடத்துவார்கள். தெய்வ பலமுடையவர். சிறு வயதிலிருந்தே இசை, ஓவியம், நாட்டியம் என்று கலைகளில் அதிக ஈடுபாடு உள்ளவராகவும் கலைஞர்களை ஊக்குவிப்பவராகவும் இருப்பார்கள்.

16 வயது முதல் 23 வயது வரை பொறுமையாக இருப்பது நல்லது. ஏனென்றால், கூடா நட்பால் பாதை தவறுவதற்கான சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில் வாக்குவாதம், பெற்றோரைச் சரியாகப் புரிந்து கொள்ளாதது போன்ற சூழ்நிலை உருவாகும். 24 வயதிலிருந்து இவர்களிடம் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வசதியான வேலை, நல்ல சம்பாத்தியம், பெரிய அந்தஸ்து போன்றவை கிடைக்கும். மற்றவர்கள் வியக்கும்படி வாழ்வில் முன்னேறுவார்கள்.

‘தேச சஞ்சாரி’ அதாவது, பிரயாணப் பிரியன் என்று காக்கேயர் நாடி என்னும் நூல் கூறுகிறது. மனைவிக்குப் பயந்து நடப்பவராகவும் அவள் மீது தீராத அன்பு கொண்டவராகவும் பிள்ளைகளை சொத்தாகக் கருதுபவராகவும் இருப்பார்கள். மனிதாபிமானம் உடையவராகவும் பொய் சொல்லாதவராகவும் விளங்குவார்கள்.

இவர்களில் பலர், முனைவர் பட்டம் பெற்றவர்களாக இருப்பார்கள். மொழி ஆராய்ச்சி, அகழ்வாராய்ச்சி, கல்வெட்டு ஆராய்ச்சி, வங்கிப் பணி ஆகிய பணிகளில் இருப்பார்கள். பேராசிரியர், எழுத்தாளர், தொழிலதிபர் ஆகியோராக இருப்பார்கள். நீண்ட ஆயுள் உண்டு.

திருவோணம் நட்சத்திரக்காரர்கள் நான்கு பாத பரிகாரங்கள்:

திருவோணம் நட்சத்திரம் முதல் பாத பரிகாரம்:

மதுரை - கம்பம் வழித்தடத்திலுள்ள சுருளிமலைக் குன்றின் குகையில் அமர்ந்திருக்கும் முருகப்பெருமானை வணங்குதல் நலம்.

திருவோணம் நட்சத்திரம் இரண்டாம் பாத பரிகாரம்:

திருப்பதி வேங்கடேசப் பெருமாளை வணங்குதல் நலம்.

திருவோணம் நட்சத்திரம் மூன்றாம் பாத பரிகாரம்:

திருப்புல்லாணியில் வீற்றிருக்கும் ஸ்ரீ கல்யாணவல்லி ஸ்ரீ பத்மாஸினி உடனுறை ஸ்ரீ ஆதிஜகந்நாதப் பெருமாளை வணங்குதல் நலம்.

திருவோணம் நட்சத்திரம் நான்காம் பாத பரிகாரம்:

கொல்லூரில் அருள்பாலிக்கும் மூகாம்பிகையை வணங்குதல் நலம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close