Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெளிநாடு சென்று சம்பாதிக்கலாம்... வரமருளும் `விசா பாலாஜி!

'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்பது ஒளவையின் அறிவுரை. பணம் இந்தக் காலத்தில் மட்டுமல்ல அது எந்தக் காலத்திலும் அத்தியாவசியமான ஒன்றாகத்தான் இருந்திருக்கிறது. இதைத்தான் ஔவையார், 'கடல் தாண்டிச் சென்றாவது பொருளைத் தேடு அப்போதுதான் நீயும் உன் சந்ததியும் வாழ்வாங்கு வாழ்வார்கள்' என்று உரைக்கிறார்.

விசா பாலாஜி தரிசனம் வெளிநாடு யோகம்

பணம் சம்பாதிக்கும் விருப்பமானது அனைவருக்கும் உண்டு. ஆனால் விருப்பம் மட்டுமே இதற்கானத் தகுதியாக ஆகிவிடாது. அதற்கான யோகமும் முயற்சியும் நமக்கு இருக்கவேண்டும். பொருளீட்டுவதற்காக வெளிநாடு செல்ல விரும்புபவர்களில், எல்லோருடைய ஆசையும் உடனே நிறைவேறிவிடுவதில்லை. பாஸ்போர்ட் கிடைத்தால், விசா கிடைக்காது. இரண்டும் கிடைத்தாலும், கையில் போதுமான பணம் இல்லாமல் போகும். அல்லது சம்பந்தப்பட்ட ஏஜென்டிடம் இருந்து நல்ல பதில் வர தாமதமாகும். இந்தத் தொல்லைகளெல்லாம் தீர என்ன வழி என்று பலரும் மண்டையைக் குழப்பிக்கொள்வதை நாம் அனுதினமும் பார்க்கிறோம். ஆனால் இந்தப் பிரச்னையெல்லாம் தீர்ந்து நாம் சிரமம் இல்லாமல் வெளிநாடு செல்ல ஒரு கோயில் இருக்கிறதென்றால் கேட்கவே ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? ஆம் இருக்கிறது.

'விசா பாலாஜி' என்னும் 'சில்கூர் பாலாஜி' ஆலயம்தான் அது. எங்கே இருக்கிறது ?

ஹைதராபாத் நகரிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் 'உஸ்மான் சாகர்' என்னும் ஏரி உள்ளது. இதன் கரையில் அமைந்துள்ள சில்கூரில்தான் இந்த 'பாலாஜி கோயில்' அமைந்துள்ளது. தெலங்கானா மாநிலத்தில் உள்ள தொன்மையான கொயில்களில் இதுவும் ஒன்று. இது 17- ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில் என்று சிலர் சொல்கிறார்கள்.

விசா பாலாஜி ஆலயம் முகப்புத் தோற்றம்

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பதி வெங்கடேஸ்வரப் பெருமாளின் அடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். ஒவ்வொரு வருடமும் அறுவடைக் காலம் முடிந்த பின்பு, திருப்பதிக்குச் செல்வது இவரது வழக்கம். திருப்பதி ஏழுமலையானை தரிசித்துவிட்டு வந்த பின்னர் தமது நிலத்தில் விளைந்த பொருட்களின் ஒருபகுதியை தானம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். காலம் செல்லச் செல்ல அவருக்கு வயதானது.

வயதான காலத்தில், அவரால் முன்புபோல் நிலத்தில் உழைக்கமுடியவில்லை. மேலும் திருப்பதிக்கும் செல்ல முடியாமல் வருந்தினார். ஒருநாள் தன் வயலில் சோர்வாகப் படுத்திருந்தார். அப்போது எம்பெருமான் திருமணக் கோலத்தில் அவரது கனவில் தோன்றி 'இனிமேல் திருப்பதிக்கு நீ வரவேண்டிய அவசியமில்லை. நானே உமது வயலில் உள்ள எறும்பு புற்றினுள் குடி கொண்டிருக்கிறேன்' எனக்கூறி மறைந்தார்.

விசா பாலாஜி

பெருமாள் கூறிய வண்ணம், அடியாரும் எறும்புப் புற்றைத் தோண்டிப் பார்த்தார். பூதேவி மற்றும் ஸ்ரீதேவியை சமேதகராக திருப்பதி பாலாஜியின் திருமணக் கோலச் சிலையை கண்டு விக்கித்துப்போய் நின்றார். இந்தச் செய்தி ஊர் முழுவதும் பரவியது.

பின்னர் ஆகம விதிகளின்படி கோயிலாக உருவானது. 17- ம் நூற்றாண்டைச் சார்ந்த பக்த ராமதாசின் மாமன்மார்களான வெங்கண்ணாவும் அக்கண்ணாவும் இக்கோயிலை கட்டமைத்தனர் என்று கூறுகின்றனர்.

விசா பாலாஜிக் கோயிலின் தனிச்சிறப்புக்கள்:

கேட்ட வரம் கிடைக்கும். வேண்டும்போது 18 முறையும், வேண்டுதல் நிறைவேறிய பின்பு 108 முறையும் கோயிலை வலம் வரவேண்டும்.

வெளிநாடு செல்ல விரும்புவோர், பெருமாள் காலடியில் பாஸ்போர்ட்களை வைத்து வணங்கிச் செல்கின்றனர். இப்படி வேண்டிக்கொண்டால் உடனே வேண்டுதல் நிறைவேறும் என்பது இந்தப்பகுதி மக்களின் நம்பிக்கை. இதன் காரணமாகவே 'விசா பாலாஜி' என்று இங்குள்ள பாலாஜியை மக்கள் அழைக்கின்றனர்.

பக்தர்கள் தரிசனம்

சைவ-வைணவ ஒற்றுமைக்காக இங்கே ஒரு சிவன் கோயிலும் உள்ளது. இந்தக் கோயிலில் எந்தவிதக் கட்டணங்களும் கிடையாது. இந்தக் கோயிலுக்கு வாரந்தோறும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இங்குள்ள இறைவனை ஜபிக்க வேண்டிய திருநாமமும் அதற்கான பலன்களும்:

'ஓம் வஷ்டகாராய நமஹ' - வணிகத்தில் வெற்றி

'ஓம் அக்ஷராய நமஹ' - கல்வியில் வெற்றி

'ஓம் புதபவனாய நமஹ' - உடல் நலம் பெற

'ஓம் பரமாத்மனே நமஹ' - தன்னம்பிக்கை பெற.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close