வெளியிடப்பட்ட நேரம்: 12:31 (12/05/2017)

கடைசி தொடர்பு:12:31 (12/05/2017)

கசிந்துருகுவான் கந்தன்... காவடி வழிபாட்டு மகிமை!

முருகன்! தமிழர்கள் போற்றி வணங்கும் தமிழ்க்கடவுள். பல்லாண்டு காலமாக தமிழர்கள் இதயங்களில் வீற்றிருக்கும் குலக்கொழுந்து. முருகனை வழிபடுதலில் முக்கியமானது 'காவடி' எடுத்தல்.

முருகன்

பழந்தமிழ் இலக்கியங்களில் தோளில் தாங்கிச் செல்லும் சுமையைக் குறிக்க, 'கா' என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. 'காவுதல்' என்றால் 'தூக்குதல்' என்று பொருள். காவடியானது, 'காத் தண்டு', 'காவடித் தண்டு', 'காவணப் பத்தி', 'காவுப் பொருட்டு' என்ற பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது.

‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்று ஒரு சொலவடையே உண்டு. நாம் காவடி எடுப்பதற்கும் இரண்டு குன்றுகள் தான் காரணமாக அமைந்தன.. அந்த நிகழ்வை விரிவாகக் காண்போம்.

அகஸ்திய முனிவருக்கு 'இடும்பன்' என்ற ஒரு சீடர் இருந்தார். ஒருமுறை இடும்பனை அழைத்த அகஸ்தியர், 'கயிலைக்குச் சென்று அங்கு முருகனின் மலையான கந்தமலைக்குச் செல். அங்கு இருக்கும் சிவசக்தி சொரூபமான 'சிவகிரி', 'சந்திரகிரி' என்னும் இரண்டு மலைகளையும் கொண்டு வா. வழிபாட்டுக்குத் தேவைப்படுகிறது' என்கிறார்.

குருவின் கட்டளையை ஏற்ற, சீடன் கந்தமலைக்குப் புறப்படுகிறார். இருமலைகளையும் சுமந்து வருவதற்கு வசதியாக காவடியாகக் கட்டுகிறார். அதைத் தன் தோளில் தாங்கிப் புறப்படுகிறார்.

வரலாறு

இதனைக் கண்ட முருகப் பெருமானோ, தனது விளையாட்டைத் தொடங்குகிறார். இரண்டு மலைகளையும் திருவாவினன்குடியில் நிலைபெறச் செய்துவிட வேண்டும் என்ற முடிவுக்கும் வருகிறார். மேலும் இடும்பனுக்கும் அருள் புரிய வேண்டும்' என்றும் எண்ணுகிறார்.

இந்த இரு மலைகளையும் தாங்கி வரும் இடும்பனுக்கோ நடுவில் வழி தெரியாமல் போகிறது. இதனால், என்ன செய்வது என்பது அறியாமல் குழம்புகிறார்.

அப்போது ஓர் அரசனைப் போல் தோற்றம் எடுத்து வந்த முருகன், இடும்பனை ஆவின்குடிக்கு அழைத்து வருகிறார். சற்று ஒய்வு எடுக்கும்படியும் அறிவுறுத்துகிறார்.

இடும்பனும் காவடியை இறக்கி வைத்து ஓய்வெடுக்கிறார்.நேரம் ஆனதும் புறப்படத் தயாராகிறார். காவடியைத் தூக்குகிறார். ஆனால், அவரால் தூக்க முடியவில்லை . மீண்டும் முயற்சி செய்கிறார். அசைக்க கூட முடியவில்லை.எங்கே குருவின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாதோ என்று வருந்துகிறார்.

கயிலையில் இருந்து தூக்கி வந்த தன்னால், ஏன் தற்போது தூக்க முடியவில்லை என்று நினைத்து மனம் வருந்துகிறார். அப்போது சிவகிரியின் மீது சிறுவன் ஒருவன் கோவணம் மட்டும் அணிந்து கையில் தண்டுடன் நிற்கிறான். உடனே, அவனை மலையில் இருந்து இறங்குமாறு கூற, அச்சிறுவனோ, 'இந்த மலை எனக்கே சொந்தம்' என்கிறான்.

முருகப்பெருமான்

உடனே கோபம் கொண்ட இடும்பன் சிறுவனைத் தாக்க முயல, அப்படியே சாய்ந்து விழுகிறான் இடும்பன். இதனை அறிந்த அகஸ்தியர் , இடும்பன் மனைவியுடன் சென்று முருகனிடம் வேண்ட இடும்பனுக்கு ஆசிவழங்குகிறார் முருகன். இடும்பனைத் தன் காவல் தெய்வமாகவும் நியமனம் செய்கிறார். அன்று முதல் முருகனுக்கு காவடி எடுக்கும் பழக்கம் உருவானது.

தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் போன்ற திருவிழா நாட்களில் முருகப்பெருமானின் தீவிர பக்தர்கள், பக்தியோடு காவடி எடுத்து வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். முருகப்பெருமானும் அவர்களின் துன்பங்களைப் போக்கி, அவர்களுடய வாழ்வை இன்பமயமானதாக மாற்றுகிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்