புராதன இந்தியாவில் நிகழ்ந்த மருத்துவ ஆச்சர்யங்கள்! | Medical Miracles in Ancient India!

வெளியிடப்பட்ட நேரம்: 10:41 (16/05/2017)

கடைசி தொடர்பு:10:41 (16/05/2017)

புராதன இந்தியாவில் நிகழ்ந்த மருத்துவ ஆச்சர்யங்கள்!

ன்றைய நவீன மருத்துவ உலகம், வேகமான முன்னேற்றங்கள், அறுவை சிகிச்சையில் மேம்பட்ட துல்லியமான அணுகுமுறைகள், விசித்திரமான சம்பவங்கள் என விரிவடைந்துகொண்டே போகின்றது. இறைவனின் படைப்புலக ரகசியங்கள் பலவற்றை  இன்றைய மேற்கத்திய விஞ்ஞான முறை உடைத்து வெளிப்படுத்தி வருகின்றது. ஆனால், முற்கால இந்தியாவில் பக்திபூர்வமாகவும் தவ வலிமையாலும் இதை சர்வசாதாரணமாக நிகழ்த்திக்காட்டி இருக்கிறார்கள். 

இந்தியா

இதைப்பற்றி சமய மெய்யியல் பேராசிரியர் எஸ்.குருபாதத்தை நாம் சந்தித்து உரையாடியபோது அவர் கூறியவற்றிலிருந்து ஒரு தொகுப்பு:

பாரதத்தின் புகழைப் பாடும் இதிகாசங்களான  ராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டும் உண்மையா அல்லது கற்பனையா என்ற ஆய்வுக்கு நாம் செல்லத்தேவையில்லை. ஆனால், அவைப்பற்றிய சாதக பாதகங்களை  அலசி ஆராயாமல் பார்த்தால்,  இந்தக் கற்பனைச் சம்பவங்களே  நமக்கு பெரும் வியப்பை அளிக்கின்றன.

சீதா லவ குசன்

* சீதாப்பிராட்டியார் ராமனைப் பிரிந்து விசுவாமித்திரரின் ஆசிரமத்தில் இருந்தபோது சீதா வெளியே சென்றிருக்கும் வேளையில் திடுமென லவன் காணாமல் போகிறார். சீதா வந்ததும், மகனைக் கேட்பாரே என்ன பதில் சொல்வதென எண்ணிய விசுவாமித்திரர் லவனைப் போலவே தர்ப்பைப்  புல்லைக் கொண்டு குசனை உருவாக்கினார். 

இருவரும்  'லவ குசன்' என இரட்டை குழந்தைகளாகவே வளர்ந்து ராமரின் அஸ்வமேத யாகக் குதிரையைக் கட்டிப்போட்டு ராமர் படையை வெல்கின்றனர் என கதை பயணிக்கின்றது. இதில் தர்ப்பைப் புல்லை வைத்து குழந்தையை உருவாக்கியமை, இக்கால மருத்துவ விஞ்ஞானத்தின் குளோனிங் போன்ற முறையுடன்  ஒத்துப்போகிறது. 

காந்தாரி

* காந்தாரியின் வயிற்றிலிருந்து எடுத்த சினை முட்டையை வேதவியாசர் 101 குடுவைகளில் வைத்து வளர்த்து, காந்தாரிக்கு 101 பிள்ளைகள் பிறந்தனர் என மகாபாரதம் கூறுகிறது. இது தற்போதைய மருத்துவ விஞ்ஞானத்துடன்  அப்படியே ஒத்துப்போகிறது. இக்காலத்தில் சோதனைக் குழாய் குழந்தைகள் முறையில்  பிறக்கும் குழந்தைகள் இத்தகையதே.

திருக்கருகாவூர் கர்பரட்சாம்பிகைக் கோயிலின் தல வரலாறும் இதுதான். இன்றும் புத்திரபாக்கியம் வேண்டுமென்றும், சுகப்பிரசவம் ஆக விரும்புபவர்களும் அங்கு சென்று இறைவியை வணங்கிவருகின்றனர்.

முற்காலத்தில் இறந்தவர்களை உயிர்ப்பித்த கதைகள், 'மயானத்தில் உயிர் பெற்ற லோகிதாசன்' 'சத்தியவான் சாவித்திரி' என நிறையவே காணப்படுகின்றன.

கண்ணப்ப நாயனார்

கண்தானத்துக்கு முன்னோடி கண்ணப்ப நாயனார்:
கண்ணப்ப நாயனாரது கதை ‘கண் தானத்தை’ வலியுறுத்துகிறது. திருக்காளத்தி (தற்போதைய காளஹஸ்திதான்) மலையிலுள்ள சிவலிங்கத்தை வணங்கி, வந்த திண்ணனார், அச்சிவலிங்கத்தின் கண்ணில் காயம் ஏற்பட்டிருப்பதைப் பார்த்து அக்குறையைத் தீர்க்கும் மருந்தாகத் தனது கண்ணை எடுத்து அச்சிவலிங்கத்தின் கண்ணில் அப்பினார் (பொருத்தினார்). இது கண்மாற்று அறுவை சிகிச்சையைப் போல் அல்லவா இருக்கிறது? அன்றுமுதல் அவர் கண்ணப்ப நாயனார் ஆனார் என அவரது கதை கூறுகிறது. ‘ஊனுக்கு ஊனே உற்ற நோய் தீர்க்கும்' எனத் தமிழ் வழக்கில் ஒரு பழமொழியும் உண்டு. கண்ணப்பநாயனார் செய்தது உடல் உறுப்புத் தானமல்லவா! கண் தானத்தை ஆரம்பித்து வைத்த முன்னோடியல்லவா அவர். 

குருபாதம்உடலுறுப்புத் தானத்தைச் சிந்தித்தவர் போதிதர்மர்:
இந்தியாவில் பிறந்து வளர்ந்த  ஜென் மத ஞானி போதிதர்மர், சீனாவில் தனது சீடர்களிடம் தான் இறந்தபின், 'தன் உடலுறுப்புகளில் எதை எதை யார் யார் பெறுவார்கள் என்று கூறுகிறார். பிரதம சீடரான ஹை - ஹோவுக்கு தனது எலும்பு மஜ்ஜையையும், பிக்குனியான தாரணிக்கு தன் தசையும் டா - பியூவுக்கு தன் தோலும்  டா- யூவுக்கு தன் எலும்பும் கிடைக்கும்' என்று கூறினார். தனது ஒவ்வொரு சீடர்களுக்குள்ளும் தான் எலும்பும் தசையும் மச்சையும், தோலுமாகக் கலந்திருப்பேன் என்பதே அதன் பொருளாகிறது, என்று கூறுகிறார்.

இப்படிப்பட்ட புராணக் கதைகள் ஒருபுறமிருக்க, அறுவை சிகிச்சையியலின் தந்தை சுஸ்ருதர்  பற்றி கூறுகிறார், சமய ஆய்வாளர் பி.லட்சுமணன்.

அறுவை சிகிச்சையியலின் தந்தை சுஸ்ருதர்:
சுஸ்ருதர் ‘அறுவை சிகிச்சையியலின் தந்தை’ எனப்படுகிறார். பல ஆயிரம் வருடங்களுக்கு  முன்னர் இவரும், இவரது காலத்தைச் சேர்ந்த உடற்கூறு வல்லுநர்களும், சிக்கலான அறுவை சிகிச்சைகளை செய்துள்ளனர். 

சிசேரியன், கண்புரை நீக்கம், எலும்பு முறிவு. சிறுநீரகக் கல்லடைப்பு மற்றும் தோல் மாற்று சர்ஜரி, மூளை அறுவை சிகிச்சை போன்ற பல அறுவை சிகிச்சை முறைகள் இருந்துள்ளன. சுமார் 125க்கும் மேலான அறுவை சிகிச்சைக் கருவிகள் புழக்கத்தில் இருந்துள்ளன. 
சுஸ்ருதர், உலகளவில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மருத்துவ மாமேதை. இவர் ரிஷி விசுவாமித்திரருக்குப் பிறந்தவர். உலகின் முதல் அறுவை சிகிச்சை கலைக் களஞ்சியமாக ‘சுஸ்ருத சம்ஹிதையை’ மனித சமுதாயத்துக்கு வழங்கியவர். மயக்க மருந்து அறிவியல் மற்றும் தோல் மாற்று அறுவை சிகிச்சையின் தந்தையாகவும் போற்றப்படுகிறார்.

இவர் தமது சுஸ்ருத சம்ஹிதையில், 12 விதமான எலும்பு முறிவுகளுக்கும், ஆறுவிதமான மூட்டு நகர்வுகளுக்கும் உண்டான மருத்துவ முறையை விளக்கியிருக்கிறார். 

சுஸ்ருதர்

125 விதமான அறுவை சிகிச்சைக் கருவிகள்:
125 விதமான அறுவை சிகிச்சைக் கருவிகளை உபயோகப்படுத்தியுள்ளார். இதில் ஊசிகள், கூர் கத்தி, ரண சிகிச்சைக்கான சிறிய கத்திகள், இரட்டை விளிம்புக் கத்திகள்  மற்றும் மலக்குடல் சீரமைப்புக் கருவிகள் போன்றவை முக்கியமானவை. அதில் பெரும்பாலானவை விலங்குகளின் தாடை எலும்புகளிலிருந்து வடிவமைக்கப்பட்டவை.

இவர் பல்வேறு தையல் முறைகளைப் பற்றியும் விளக்கியுள்ளார். குதிரையின் முடி, மரப்பட்டைகளின் இழை, நரம்பு போன்றவற்றை நூலாகக் கொண்டு தைத்திருக்கிறார். எறும்புகளைக் கொண்டு போடப்படும் தையல் முறை ஒன்றும் வழக்கில் இருந்துள்ளது.

சுஸ்ருத  சம்ஹிதையில், 300 விதமான  அறுவை சிகிச்சை முறைகள் விளக்கப்பட்டுள்ளன. ஆச்சார்யார் சுஸ்ருதர், மருத்துவ உலகின் குறிப்பாக அறுவை சிகிச்சையின் மாமேதை என்று போற்றப்படுகிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்