ஞாயிறு முதல் சனி வரை... கருட தரிசனம் செய்தால் கிட்டும் நன்மைகள் என்னென்ன?

ருடன்! மங்கள வடிவமானவன். பறவைகளின் அரசன். கருடனைத் தரிசிப்பது சுபசகுனம். ஆகாயத்தில் கருடன் வட்டமிடுவதோ, குரலெழுப்புவதோ நல்லதொரு அறிகுறி. இன்றளவும் கும்பாபிஷேகத்தின்போது எத்தனை விதமான பூஜைகள், யாகங்கள் நடந்தாலும் பூஜையின்போது கருடன் வந்து தரிசனம் தந்தால்தான் கும்பாபிஷேகமே முழுமை பெறுகிறது. கருடனைத் தரிசிக்கும்போது நம் மனம் நிறைவடைகிறது. ஸ்ரீமந் நாராயணன் எத்தனை விதமான வாகனத்தில் தரிசனம் தந்தாலும் கருட வாகனத்தில் தரிசனம் தருவது தனிச்சிறப்பு.

கருட தரிசனம்

கருடன், கச்யபர் -  விநதை தம்பதிக்கு இரண்டாவது மகனாவார். ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர். கருடாழ்வார், மங்களாலயன், பக்ஷிராஜன், சுபர்ணன், புஷ்பப்பிரியன், வினதைச் சிறுவன், வேதஸ்வரூபன், வைனதேயன் போன்ற எண்ணற்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். இவருக்கு ருத்ரை மற்றும் சுகீர்த்தி என்னும் இரண்டு மனைவியர் உள்ளனர்.

கருடாழ்வார், மகா பலம் உடையவர். அழகான முகம், உறுதியான நகங்களை உடையவர். கூர்மையான கண்கள், பருத்த கழுத்து, குட்டையான கால்கள் மற்றும் பெரிய தலையையும் பெற்றவர். அனைத்து திசைகளிலும் வேகமாகவும், உயரமாகவும் பறக்கும் ஆற்றலைக் கொண்டவர். சர்ப்பங்களைக்கூட விழுங்கும் ஆற்றலைப் பெற்றவர். மகாவிஷ்ணுவின் ஸ்தலங்களில் 'பெரிய திருவடி" என்று போற்றப்படுபவர்.

கருட சேவை

கருட சேவை:

பிரம்மோற்ஸவத்தின்போது அனைத்து ஆலயங்களிலும் எம்பெருமான் கருட வாகனத்தில் எழுந்தருள்வார். இது 'கருட சேவை' என்று பக்தர்களால் போற்றி வணங்கப்படும். கருட சேவை 'பெரியத் திருவடி சேவை' என்றும் அழைக்கப்படுகிறது. கருடனை வணங்கும்போது கரங்களைக் கூப்பாமல், மானசீகமாக வணங்க வேண்டும். திருவரங்கம், காஞ்சிபுரம், திருப்பதி, நவதிருப்பதிகள், திருநாங்கூர், திருநாராயணபுரம் நாச்சியார் கோவில் ஆகிய திருத்தலங்களில் நிகழும் கருட சேவைகள் தனிச்சிறப்பு உடையது.

திருமண் தந்த கருடன்:

ஒருமுறை ஶ்ரீ மகா விஷ்ணுவின் வைர முடியை விரோசனன் என்பவன் திருடிக் கொண்டான். வெள்ளையம் என்னும் தீவில் ஒளித்து வைத்திருந்தான். கருடனே அந்த வைரமுடியை மீட்டு வந்தார். அப்போது தன் மீது ஒட்டி இருந்த மண்ணைத் திருநாராயணபுரத்தில் உதிர்த்து வந்தார். அந்த மண்ணே இன்று நாம் பக்தியோடு இட்டுக் கொள்ளும் 'திருமண்'.

கருட புராணம்:

பிறருக்குத் தீங்கிழைப்பவர்கள், தாங்கள் செய்த தீமையின் பலனை இறந்த பின்பு அனுபவிப்பார்கள். எந்தத் தவறுக்கு என்ன தண்டனை என்பதை கருடனுக்கு இறைவன் போதித்ததே 'கருட புராணம்'.

கருட சேவை

கருடனைத் தரிசித்தால் கிட்டும் நன்மைகள்:

கருடசேவையைத் தரிசிப்பது பாவம் போக்கும்.

நாகத் தோஷம் போக்கும்.

தோல் வியாதிகள், நீண்ட நாள் பிணி நீங்கும்

மணமான பெண்கள் கருட பஞ்சமி நாளில் கருடனைப் பூஜை செய்ய பிறக்கும் குழந்தைகள் அறிவும், வீரமும் உடையவர்களாக விளங்குவர்.

கருட தரிசனம், பூஜைகளிலும் மந்திர உச்சரிப்பிலும் அறியாமல் நிகழ்கிற தவறுகளால் ஏற்படும் பாவத்தைப் போக்க வல்லது .

கருடனைத் தரிக்கும் கிழமைகளைப் பொறுத்து நாம் அடையும் பலன்கள்:

ஞாயிறு கருட தரிசனம் - நோய் அகலும்

திங்கள் கருட தரிசனம் - குடும்ப நலம் பெருகும்.

செவ்வாய் கருட தரிசனம் - தைரியம் கூடும்.

புதன் கருட தரிசனம் - எதிரிகள் இல்லா நிலை உருவாகும்.

வெள்ளி கருட தரிசனம் - பணவரவு கிட்டும்

சனி கருட தரிசனம் - நற்கதி அடையலாம்.

கருடாழ்வார்

கருட காயத்ரி:

‘ஓம் தத்புருஷாய வித்மஹே

ஸூவர்ண பட்சாய தீமஹி

தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்’

என்னும் மந்திரத்தை நாளும் உச்சரிப்போம். நன்மைகள் பல பெறுவோம். மறுபிறவியற்ற நிலையை அடைவோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!