திருப்பதியில் மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள் எளிதாக தரிசனம் செய்யும் வழி! | Easy ways to Tirupati darshan for elderly people and physically disabled

வெளியிடப்பட்ட நேரம்: 12:31 (20/05/2017)

கடைசி தொடர்பு:20:00 (20/05/2017)

திருப்பதியில் மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள் எளிதாக தரிசனம் செய்யும் வழி!

திருப்பதியில் மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள் எளிதாக தரிசனம் செய்யும் வழி! திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதென்றால், எந்நாளும் கூட்டம் பொங்கி வழியும். அதுவும் இப்போது கோடை விடுமுறை என்பதால், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் தினமும் கூட்டம் பெருமளவில் இருக்கிறது. பக்தர்கள் குறிப்பாக சர்வ தரிசனம், திவ்ய தரிசனம், சிறப்பு தரிசனம், என்று மூன்று விதமான முறைகளில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருப்பதி

தற்போது சர்வதரிசனம் செய்பவர்களுக்கு வார நாள்களில் 8 மணி நேரமும், சனி ஞாயிறு போன்ற விடுமுறை நாள்களில் 10 மணி நேரமும் ஆகின்றது. நடை பாதை தரிசனம் செய்பவர்களுக்கு வார நாள்களில் 6 மணி நேரமும் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாள்களில் 8 மணி நேரமும் ஆகின்றது. சிறப்புத் தரிசனம் செய்பவர்களுக்கு 3 மணி நேரமும் ஆகின்றது. முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள், இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகள், ஒரு வயதுக்கு உட்பட்ட கைக்குழந்தை உள்ளவர்கள் பலரும் சுவாமி தரிசனம் செய்ய மிகவும் சிரமப்படுவார்கள். ஒரு சிலர் சுவாமி தரிசனம் செய்யாமல், செய்ய முடியாமல் வந்து விடுவதும் உண்டு. 

முதியோர்கள்

இந்தக் குறையைப் போக்கும் வண்ணம் முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள், இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகள், இத்தனை நேரம்  கியூ வரிசையில்  நின்று வெய்யிலில் வாட வேண்டாம் என்ற நோக்கத்துடன் அவர்களுக்குச் சிறப்புச் சலுகை அளிக்கும் வண்ணம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஓர் ஏற்பாட்டைச் செய்துள்ளது. ஆனால் இதற்காகச் சில கண்டிப்பான விதிமுறைகளை வகுத்துள்ளது.  

65 வருடங்கள்  வயது நிறைவுபெற்ற முதியவர்கள் மற்றும் அவருக்கு உதவியாக அவருடைய துணைவர் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். 

முதியவர்கள் மற்றும் ஊனமுற்றவர்கள் புகைப்படத்துடன் கூடிய வயதுச் சான்றிதழ், ஆதார் அட்டை மிகவும் முக்கியம்.
இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களும்,  புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களும் மருத்துவச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

திவ்ய தரிசனம்

இவர்கள் காலை 10 மணி அளவிலும் பிற்பகல் 3 மணி அளவிலும் இரண்டு முறை அனுமதிக்கிறார்கள். இதற்கான முன்பதிவை காலை 8 மணி அளவிலேயே செய்துகொள்ள வேண்டும். 

எந்தவித தள்ளுமுள்ளுவும் இல்லாமல் பொறுமையாகவும் நிதானமாகவும் தரிசனம் செய்யலாம். இவர்களுக்கு 4 லட்டு டோக்கன் வழங்கப்படும். 

இந்தச் சலுகையை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே தரிசனத்துக்குப் பயன்படுத்த முடியும்.

64 வயதாகிறது இன்னும் ஒரு வருடம்தானே சொல்லிக்கொள்ளலாம் என்று நினைத்தால் நிச்சயம் அனுமதிக்க மாட்டார்கள். அல்லது எப்படியாவது ஏதாவது சொல்லியோ, கையூட்டு கொடுத்தோ கூடுதலாக இன்னும் ஒருவரை அழைத்துச்செல்லலாம் என்றாலும் நிச்சயம் முடியாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

உங்கள் கைகளுக்குள் பெருமாள் தரிசனம்!

'Govinda tirumala tirupati devasthanams'  என்னும் மொஃபைல் ஆப் ஒன்றை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. இதன் உதவியுடன் திருமலையில் சிறப்பு தரிசனம் செய்வதற்கான முன்பதிவை இங்கிருந்த நிலையிலேயே நாம் புக் செய்துகொள்ள முடியும். திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு உண்டியல் காணிக்கை மற்றும் நன்கொடையையும் வழங்க முடியும். இனி, உங்கள் கைகளுக்குள் பெருமாள் தரிசனம்!

தகவல் தொடர்பு மையம்!

திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களின் வசதிக்காக திருப்பதியில் தகவல் தொடர்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. பக்தர்கள், தங்களுக்குத் தேவையான அனைத்து விவரங்களையும் இந்த மையத்தைத் தொடர்பு கொண்டு அறியலாம். திருமலை திருப்பதி ஆர்ஜித சேவைக் கட்டணம், தங்கும் வசதி, நன்கொடை திட்டங்கள், பக்தர்கள் தாங்கள் செய்த முன்பதிவு விவரம் ஆகியவற்றை இந்த மையத்தைத் தொடர்பு கொண்டு அறியலாம். இந்த மையம் 24 மணி நேரமும் இயங்கக்கூடியது. தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:  0877- 2233333, 0877-2277777

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்