செவ்வாய் கிழமையில் முருகனுக்கு விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

முருகப் பெருமானுக்கு உகந்த விரதங்கள் என்று மூன்று விரதங்கள் பிரதானமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. 

வார விரதம்; நட்சத்திர விரதம்; திதி விரதம்

வார விரதம் என்பது செவ்வாய்கிழமைகளில் அனுஷ்டிப்பது;

நட்சத்திர விரதம் என்பது கார்த்திகை நட்சத்திரத்தில் அனுஷ்டிப்பது;

திதி விரதம் என்பது சஷ்டி திதியில் அனுஷ்டிப்பது.

முருகன்

வார விரதம்: கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகப் பெருமான். செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், பூமியினால் தீராத பிரச்னைகள் உள்ளவர்களும் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டு வந்தால், விரைவிலேயே செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்கிவிடும். 

விரதம் இருக்கும் முறை: செவ்வாய்க்கிழமைதோறும் காலையில் நீராடி முடித்து, அருகில் உள்ள முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபடவேண்டும். பிறகு வீட்டுக்குத் திரும்பியதும், வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை மேற்கொள்ளவேண்டும். கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம் போன்ற முருகப்பெருமானுக்கு உரிய ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்யலாம். மாலை 6 மணிக்கு மறுபடியும் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும். இப்படி 9 செவ்வாய்க்கிழமைகள் விரதம் இருந்தால், செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்கிவிடும் என்பது உறுதி.

நட்சத்திர விரதம்: கார்த்திகை நட்சத்திரத்தன்று அனுஷ்டிக்கப்படுவது நட்சத்திர விரதம். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளில் இருந்து தோன்றிய முருகப் பெருமானை சரவணப் பொய்கையில் இருந்து எடுத்து வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்குச் சிறப்பு சேர்க்கும் விதமாக, சிவபெருமான் அவர்களுக்கு ஒரு வரம் அளித்தார். அந்த வரத்தின்படி கார்த்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுபவர்கள், நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் ஆகிய பேறுகளைப் பெற்று சிறப்புற வாழலாம். 

முருகன்

விரதம் இருக்கும் முறை: கார்த்திகை நட்சத்திரத்துக்கு முதல்நாள் வரும் பரணி நட்சத்திரத்தன்று இரவில் உணவு உண்ணாமல் இருந்து, மறுநாள் அதிகாலையில் நீராடி, அருகில் உள்ள ஆலயத்துக்குச் சென்று முருகப்பெருமானை வழிபடவேண்டும். அன்று பகல் முழுவதும் விரதம் இருந்து முருகப் பெருமானின் ஸ்தோத்திர நூல்களைப் பாராயணம் செய்யவேண்டும். மாலையில் வீட்டில் உள்ள முருகப் பெருமான் திருவுருவப் படத்தை அலங்கரித்து, தூப தீபம் காட்டி, அரிசியும், துவரம்பருப்பும், சர்க்கரையும் சேர்த்துச் செய்த பொங்கலை நைவேத்தியம் செய்து, அந்தப் பொங்கலையே பிரசாதமாக உண்டு விரதத்தைப் பூர்த்தி செய்யவேண்டும். தேவரிஷிகளில் முதன்மையானவராகப் போற்றப்படும் நாரத மகரிஷி, விநாயகப் பெருமானின் உபதேசப்படி கார்த்திகை விரதத்தை அனுஷ்டித்தே முதன்மைச் சிறப்பைப் பெற்றார். 

திதி விரதம்: வளர்பிறை சஷ்டி திதியில் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் இது. மாதம்தோறும் வரக்கூடிய வளர்பிறை சஷ்டி திதியன்று காலையில் நீராடிவிட்டு, முருகப் பெருமானை தியானித்து, நாம் என்ன கோரிக்கைக்காக விரதம் இருக்கிறோமோ, அந்தக் கோரிக்கையை மனதில் சங்கல்பம் செய்துகொண்டு, விரதத்தைத் தொடங்கவேண்டும். அருகில் உள்ள முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபடவேண்டும். வீட்டுக்குத் திரும்பியதும் பகல் முழுவதும் விரதம் இருக்கவேண்டும். முடிந்தால் மாலையில் மறுபடியும் ஒருமுறை கோயிலுக்குச் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வீட்டுக்குத் திரும்பி, விரதத்தை நிறைவு செய்யலாம். தொடர்ந்து ஆறு சஷ்டிகள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. மாதம்தோறும் வரும் சஷ்டி விரதத்தைக் கடைப்பிடிக்க இயலாதவர்கள்கூட, ஐப்பசி மாதத்தில் வரும் கந்த சஷ்டி விரதத்தைத் தவறாமல் அனுஷ்டித்தால், முருகப் பெருமானின் அருளால் வாழ்க்கையில் சகல ஐஸ்வர்யங்களையும் அடையலாம்.

கந்த சஷ்டி விரதம்  இருக்கும் முறை: ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை பிரதமை தொடங்கி ஆறு நாள்கள் விரதம் இருக்கவேண்டும். தினமும் அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டில் உள்ள பூஜையறையில் பூர்ணகும்பம் வைத்து, அதில் முருகப் பெருமானை உரிய மந்திரங்களால் ஆவாஹணம் செய்து, அர்ச்சனை செய்து வழிபடவேண்டும். பகல் முழுவதும் விரதம் இருந்து முருகப் பெருமானுக்கு உரிய ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்யவேண்டும். பகலில் ஒருவேளை மட்டும் உணவு கொள்ளலாம். இப்படி ஆறுநாள்கள் விரதம் இருக்கமுடியாதவர்கள், சஷ்டி அன்று மட்டுமாவது விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டால், அனைத்து நன்மைகளையும் பெறலாம்.

குழந்தை வரம் தரும் விரதங்களில் முதன்மையான விரதமாக கந்த சஷ்டி விரதமே போற்றப்படுகிறது. அதனால்தான், 'சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்'  என்று கூறுகிறார்கள். சஷ்டியில் விரதம் இருந்தால், கருப்பையில் குழந்தை வரும் என்பதே இதன் பொருள். 

முருகப் பெருமானுக்கு உரிய இந்த மூன்று விரதங்களை நாம் முடிந்தவரை அனுஷ்டித்தால், அனைத்து நன்மைகளையும் பெற்று, மகிழ்ச்சியாக வாழலாம்.

- புவனா கண்ணன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!