ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உருளும், அருளும் ஆரூர் அழகுத் தேர்!

ழியிலே தோன்றிய அலைமகளுக்கு ஆரூர் ஈசன் அருள்புரிந்ததற்கு நன்றி செலுத்துவதே போல், அந்த ஆழியே தேராக வந்துவிட்டதோ என்று சொல்லும்படி, மிகப் பிரம்மாண்டமாக அமைந்ததுதான் திருவாரூர் தேர். பிரமாண்டமான கடலைப் போலவே காட்சி தருவதாலேயே திருவாரூர்த் தேர் ஆழித் தேர் என்ற சிறப்பினைப் பெற்றிருக்கிறது போலும்!

 திருவாரூர் தேர்

பெரும்பாலான கோயில்களில் தேர்த் திருவிழா நடைபெற்றாலும், திருவாரூர்த் தேர்த் திருவிழாவுக்குத் தனிச் சிறப்பு உள்ளது என்று சொன்னால், அதற்குக் காரணம் ஆழித் தேரின் பிரம்மாண்டம்தான்.

திருநாவுக்கரசர் தம்முடைய தேவாரப் பதிகத்தில், 'ஆழித் தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே!' என்று பாடி இருப்பதில் இருந்து, திருவாரூரில் கி.பி.5-6 ஆம் நூற்றாண்டுக்கும் முன்பிருந்தே தேர்த்திருவிழா நடைபெற்று வந்திருப்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.

1748 ஆம் ஆண்டு ஆழித் தேரோட்டம் நடந்தது பற்றிய விவரம் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள ஆவணங்களில் இருந்து தெரிய வருகிறது. மேலும் 1765 ஆம் வருடம் தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னர் இரண்டாம் துளஜா ஆழித் தேரோட்டத்தில் கலந்துகொண்டது பற்றிய குறிப்புகளும் உள்ளன.

முதல்முதலில் ஆழித் தேர் யாரால் வடிவமைக்கப்பட்டது என்பது பற்றிய தெளிவான குறிப்புகள் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால், கடந்த நூற்றாண்டில் இருந்து ஆழித்தேர் பற்றிய சில குறிப்புகளை இங்கே பார்ப்போம்.

1927 ஆம் ஆண்டு நடைபெற்ற தேரோட்டத்தின்போது ஆழித்தேர் முற்றிலும் எரிந்துவிட்டது. அதற்குப் பிறகு 1928 ஆம் ஆண்டு புதிய தேர் உருவாக்கும் பணி தொடங்கப்பட்டு, 1930-ல் மறுபடியும் தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து 1948 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற தேரோட்டம், என்ன காரணத்தினாலோ தடைப்பட்டுவிட்டது.

தகவல்கள்

பிறகு 1970 ஆம் ஆண்டு கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தபோது, அவருடைய முயற்சியாலும் வடபாதிமங்கலம் தியாகராஜ முதலியார் முயற்சியாலும் மறுபடியும் ஆழித் தேரோட்டம் நடைபெறத் தொடங்கியது. 

முற்காலத்தில் 10,000-த்துக்கும் மேற்பட்ட பக்தர்களால் தேர் இழுத்துச் செல்லப்பட்டதாகச் சொல்கிறார்கள். அப்போது தேருக்கு பத்து சக்கரங்கள் இருந்தன. திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தினர் ஆழித் தேரில் இரும்பு அச்சுகள், சக்கரங்கள், பிரேக் போன்ற சாதனங்களைப் பொருத்தினார்கள். 10 சக்கரங்களுக்கு பதிலாக நான்கே சக்கரங்கள் பொருத்தப்பட்டன. இந்த மாற்றங்களால் இப்போது மூவாயிரம் பக்தர்கள் இழுத்தால் போதும்... தேர் நகர ஆரம்பித்துவிடும். 

அலங்கரிக்கப்படாத இந்தத் தேர் உயரம் முப்பது அடி. உச்சி விமானம் வரை துணி போன்ற தேர் சீலைகளால் அலங்கரிக்கும் பகுதியின்  அடி நாற்பத்தி எட்டு. விமானத்தின் உயரம் பன்னிரண்டு அடி. தேரின் கலசம், ஆறு அடி... என தேரின் மொத்த உயரம் 96 அடி. இரும்பு அச்சுகள், சக்கரங்கள் உள்பட அலங்காரம் அற்ற மரத்தேரின் எடை சுமாராக இருநூற்று இருபது டன்கள். தேர்ச் சிலைகளும் பனஞ்சப்பைகளும், மூங்கில்களும் பயன்படுத்தப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தேரின் எடை சுமார் 300 டன்கள் ஆகும்.

ஆழித்தேர் நான்கு நிலைகளையும், பூதப்பார், சிறுஉறுதலம், பெரியஉறுதலம், நடகாசனம், விமாசனம், தேவாசனம், சிம்மாசனபீடம் என 7 அடுக்குகளைக் கொண்டதாக உள்ளது. 

எண்கோண வடிவத்தில் அமைந்திருக்கும் இந்தத் தேரை இழுத்துச் செல்வதுபோல் அமைந்திருக்கும் குதிரைகளின் நீளம் 32 அடி; உயரம் 11 அடி ஆகும். தேரில் சுமார் 400-க்கும் மேற்பட்ட சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருவிளையாடல் புராணம், சிவபுராணம், நாயன்மார்கள் வரலாறு போன்றவற்றை விவரிக்கும் வகையில் அந்தச் சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 

தேர் பவனி

ஆழித் தேர் ஒரு வீதியில் இருந்து மற்றொரு வீதிக்குத் திரும்பும் காட்சியே அற்புதமாக இருக்கும். 8 முதல் 10 இரும்பு பிளேட்டுகளை சிறு வளைவான வரிசையில் வைத்து, அந்த பிளேட்டுகளின் மீது தேர்ச் சக்கரங்கள் ஏறித் திரும்பும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

ஆழித் தேரோட்டம் காண்பதே ஆனந்தமாக இருக்கும். 

தகவல் உதவி: சிவநேசன் - தலைமை ஸ்தபதி, இளவரசன் - உதவி ஸ்தபதி

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!