கிடைக்காத பலன்களைக்கூட தரும் குலதெய்வ வழிபாடு! - மகா பெரியவா அறிவுரை

வ்வொரு குடும்பத்துக்கும் குலதெய்வம் உண்டு. காலம் காலமாக நம் முன்னோர்களால் வழிபடப் பெற்று வரும் குலதெய்வத்தை வழிபட்ட பிறகே நாம் அனைத்து சுப காரியங்களையும் தொடங்கவேண்டும். ஒவ்வொருவருக்கும் அம்மா எவ்வளவு முக்கியமோ அதேபோல் குலதெய்வ வழிபாடும் முக்கியம். குலதெய்வ வழிபாடு நம் வாழ்க்கையில் எப்போதும் துணை நின்று, பல நன்மைகளை நாம் கேட்காமலேயே அருளும்.

குலதெய்வ வழிபாடு

குலதெய்வ வழிபாட்டின் அவசியம் பற்றி காஞ்சி மகா பெரியவா ஒரு பக்தருக்கு உணர்த்திய சம்பவத்தை இங்கே பார்ப்போம்.

ஒருமுறை மகா பெரியவா யாத்திரை மேற்கொண்டிருந்தார். ஒரு கிராமத்தில் அவர் முகாமிட்டிருந்தபோது, ஒரு பக்தர் அவரை தரிசிக்க வந்திருந்தார். மிகுந்த சோகத்துடன் காணப்பட்ட பக்தரின் முகத்தைப் பார்த்ததுமே மகா பெரியவா அவருடைய நிலைமையைப் புரிந்துகொண்டார்.

"என்னப்பா சொல்லு, என்ன பிரச்னை உனக்கு?'' என்று கேட்டார் மகா பெரியவா.

பெரியவா கேட்ட மறுகணமே விவசாயியின் கண்ணில் இருந்து சாரைசாரையாகக் கண்ணீர் கொட்டியது.

கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார் அந்த விவசாயி.

''சாமி, வாழ்க்கையில நான் எதைத் தொட்டாலும் பிரச்னையில் போய் முடியுது. விவசாயமும் சரி இல்ல, குடும்பத்திலும் ஏகப்பட்ட பிரச்னைகள் சாமி. இதை எல்லாம் போக்க நீங்கதான் ஒரு வழி சொல்லனும் " என்றார் கவலையோடு.

அதற்கு மகா பெரியவா "குலதெய்வக் கோயிலுக்கெல்லாம் அடிக்கடி போய் வர்றியா, பூஜை, புனஸ்காரங்கள் எல்லாம் சரியா செய்றியா" என்று கேட்டார்.

விவசாயியோ "என்ன சாமி சொல்றீங்க? குலதெய்வக் கோயில் எங்க இருக்குன்னே எனக்குத் தெரியாது" என்றார் பரிதாபமாக.

மேலும் "எங்க முன்னோர்கள் எல்லாம் பர்மாலதான் இருந்தாங்க. அங்க இருந்து எங்க குடும்பம் மட்டும்தான் இங்க திரும்பி வந்தோம். எங்க பாட்டனார் ஒருத்தருக்கு இந்த சாமி நம்பிக்கை எல்லாம் இல்லை. அவருக்கு அப்புறம் வந்தவங்களும் அப்படியே இருந்துட்டாங்க. ஏதோ எங்க தலைமுறையிலதான் கோயில், கடவுள்னு கொஞ்சம் போயிட்டு இருக்கோம் சாமி" என்றார்.

"வீட்டுல வேற பெரியவங்க யாருமே இல்லையா?" என்றார் மகா பெரியவா.

மகாப் பெரியவா

"சாமி, எங்க பாட்டனார் ஒருவர் இன்னும் உயிரோடத்தான் இருக்கார்'' என்றார் விவசாயி.

" சரி, நீ போயி அவர்கிட்ட கேட்டு குலதெய்வத்த வழிபடுப்பா" என்றார் மகா பெரியவா.

''சாமி, எவ்வளவோ சாமி இருக்கு. அதையெல்லாம் கும்பிடாம எங்க இருக்குன்னே தெரியாத குலசாமியைத் தேடிப் புடிச்சு கும்பிடனுமா" என்றார் விவசாயி.

மகா பெரியவா, " பாத்திரத்துல அடிப்பக்கம் இல்லாம நீ அதுல எவ்வளவு தண்ணி புடிச்சாலும் பாத்திரத்துல ஒரு சொட்டு தண்ணி கூட நிக்கப் போறது இல்ல. அந்த மாதிரிதான் நீ எத்தனை தெய்வத்த கும்பிட்டாலும், குலதெய்வ வழிபாடு இல்லைன்னா, எந்த பலனும் உனக்கு கிடைக்கப் போறது இல்லை. அதுக்கு என்ன காரணம்னு உனக்கு நான் அப்புறமாச் சொல்றேன் முதல்ல நான் சொல்றதச் செய் " என்று சொல்லி பிரசாதம் கொடுத்து அனுப்பினார்.

அந்த பக்தரும் மலை அடிவாரத்துல, புதர் மண்டிக் கிடந்த இடத்தில் அவரோட குலதெய்வமான பேச்சாயிய கண்டுபுடிச்சு, வணங்கிட்டு மகா பெரியவாளை தரிசிக்க வந்தார்.

நடந்ததை எல்லாம் மகா பெரியவாகிட்ட சொன்னார்.

அதைக் கேட்ட மகா பெரியவா, "அந்தக் கோயிலை அப்படியே விட்டுடாத, நல்லா சீரும் சிறப்புமா அங்க ஒரு கோயிலைக் கட்டு. உனக்கு எந்தக் கஷ்டமும் வராது. பேச்சாயிதான் உனக்கும் உன் குடும்பத்துக்கும் இனி எல்லாம். பேச்சாயி மனசு குளிர்ந்தா உன் வாழ்க்கை ஒளிரும்னு" சொல்லி அனுப்பி வைத்தார்.

ஒரு வருடம் ஆனது, ஒரு தட்டில் பூ, பழம், பணம் என்று செல்வச் செழிப்போடு மகா பெரியவாளைப் பார்க்க வந்தார் அந்த விவசாயி.

"சாமி, இப்ப நான் சந்தோஷமா இருக்கேன். உங்க வழிகாட்டல்தான் என்னோட இந்த நிலைமைக்கு காரணம். பேச்சாயி புண்ணியத்துல ரொம்ப செல்வச் செழிப்போட இருக்கேன் சாமி" என்றவர் தொடர்ந்து,

வெட்டுடையார் காளியம்மன்

''சாமி, எப்படி சாமி என் வாழ்க்கையில இவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டுச்சு? அந்த ரகசியத்த மட்டும் கொஞ்சம் சொல்லுங்க சாமி'' என்றார் ஆவலோடு.

மகா பெரியவா திருவாய் மலர்ந்தார். " நம் முன்னோர்கள் வணங்கிய தெய்வம்தான் நம் குலதெய்வம். முன்னோர்கள் என்றால், நம் தந்தை வழி முன்னோர்களையே நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். 'கோத்திரம்' என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப்பாதை இதுவே. பெரும்பாலும் நம் பாட்டிகள் வேறு கோத்திரத்தில் இருந்துதான் வந்திருப்பார்கள். அதனால் ஆண்வழியாகவே குலதெய்வம் அறியப்படுகிறது. இந்த ரிஷி பரம்பரை ஒரு சங்கிலித் தொடர் போல அறுபடாமல் இருக்கும்.

எனவே குலதெய்வத்தை வணங்கும்போது மற்ற எல்லா கோயில்களுக்குச் சென்று வழிபட்டும் கிடைக்காத பலன்கள் கிட்டும். பக்தி என்னும் ஒன்று உருவாவதற்கு முன்பே குலதெய்வத்தை வணங்கியிருப்போம். குலதெய்வக் கோயிலில் நாம் நிற்கும்போது, நம் பரம்பரையின் வரிசையில் நிற்பதாக அர்த்தம். இந்தத் தொடர்பை வேறு எப்படியும் உருவாக்கிட முடியாது" என்றார்.

தொடர்ந்து, ''மேலும் ஒரு குடும்பத்துக்கு இறைசக்தியானது குலதெய்வவடிவில்தான் கிடைக்கவேண்டும் என்று வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வேறு, நாம் வேறு அல்ல. எனவே அவர்களைத் தொழும்போது பித்ருக்களாக விண்ணில் இருந்து நம்மைப் பார்ப்பார்கள், ஆசிர்வதிப்பார்கள். நாமும் நலமுடன் வாழலாம் " என்று குலதெய்வத்தின் மேன்மையைச் சொல்ல, விவசாயி மட்டும் அல்லாமல் வந்திருந்த அனைவரும் குலதெய்வ வழிபாட்டின் மேன்மையை உணர்ந்து கொண்டனர்.

மகாப் பெரியவர்

நாமும் குலதெய்வ வழிபாட்டின் மேன்மையைப் புரிந்துகொண்டு நம்மால் முடியும் போதெல்லாம் குலதெய்வத்தை வழிபட்டு, நமக்கும் நம் சந்ததியினருக்கும் நன்மைகள் தழைத்துச் செழிக்கச் செய்வோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!