சிதம்பரம் நடராஜர் கோயிலின் 10 சிறப்பம்சங்கள்! | 10 Special features of Chidambaram Nataraja Temple

வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (30/05/2017)

கடைசி தொடர்பு:10:44 (30/05/2017)

சிதம்பரம் நடராஜர் கோயிலின் 10 சிறப்பம்சங்கள்!

சிதம்பரம் நடராஜர் கோயிலின்  சிறப்பான பத்து அம்சங்கள் பற்றி வித்தியாசமான முறையில் பட்டியலிடுகிறார், தில்லை எனும் திருத்தலம் நூலின் ஆசிரியர் சந்திரிகா சுப்ரமணியன். இதுவரையில் நாம் தரிசித்த சிதம்பரம் கோயில், இந்தத் தகவல்களை வாசித்ததும் இன்னும் நம் புருவங்களை உயர்த்தச் செய்கிறது.

1. சிதம்பரம்  கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையப் பகுதியாக அமைந்துள்ளது. 

2. நடராஜப் பெருமான் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்தத் தாண்டவம் என்ற திருக்கோலம் காஸ்மிக் நடனம்  (COSMIC DANCE) என்று பல ஆய்வுகளால் கருதப்படுகிறது.

சிதம்பரம்

3.  நிலம், நீர், தீ, வளி, வான் ஆகிய பஞ்ச பூதங்களான ஐந்து இயற்கை அம்சங்களில், வானைக் குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றைக் குறிக்கும் காளஹஸ்தி ஆலயம், புவியைக் குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயம் ஆகிய மூன்றும்  சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது 79 பாகை, 41 கலை கிழக்கில் தீர்க்கரேகையில் அமைந்துள்ளன. இன்றைய அறிவியல் கருவிகள் உதவியுடன் நாம் பார்ப்பதை, அக்காலத்தில் அமைக்கப்பட்டிருப்பது அதிசயமாகும். இது இந்து மதத்தின்  பொறியியல், புவியியல் மற்றும் வானவியலின் 'உச்சகட்ட அதிசயம்' என்றால் அது மிகையாகாது.

கோயில்

4. திருக்கோயிலின் முக்கிய அங்கமான விமானத்தின் மேலிருக்கும் பொற்கூரை 21,600 தங்கத்தகடுகளைக் கொண்டு வேயப்பட்டுள்ளது. சந்திரிகா சுப்ரமணியம்இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21,600 தடவைகள் சுவாசிப்பதைக் குறிக்கின்றது (15*60*24 = 21,600).

5. மேற்படி  21,600 பொற்தகடுகளை வேய, 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 72,000 என்ற இந்த எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளைக் குறிக்கின்றது. இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியைக் கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

6. 'பொன்னம்பலம்' சற்று இடதுபுறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தைக் குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகள் ஏற வேண்டும், இந்தப் படிகள் 'பஞ்சாட்சர படி' என்று அழைக்கப்படுகின்றது, அதாவது 'சி,வா,ய,ந,ம' என்ற ஐந்து எழுத்தே அது. இறைவன் இதயக் கமலத்தில் இடம் பெற ஐந்தெழுத்து மந்திரமே ஒரே வழி என்பதனை உணர்த்துவதாக இது உள்ளது.

சிவன்

7. இந்த கனக சபையைத் தாங்கிடும் நான்கு  தூண்களும் ரிக், யஜூர், சாம,  அதர்வணமாகிய  நான்கு  வேதங்களைக் குறிக்கின்றது.  நடராஜரின் 'கனகசபை' பிற கோயில்களில் இருப்பதைப் போன்று நேராக இல்லாமல், ஒரு பக்கமாகத் தள்ளி இருக்கிறது.

8. பொன்னம்பலத்தில் இருக்கின்ற இருபத்தெட்டு தூண்கள் இருபத்தெட்டு ஆகமங்களையும், சிவனை வழிபடும் இருபத்தெட்டு வழிமுறைகளையும் குறிக்கின்றன. இந்த இருபத்தெட்டு தூண்களும் அறுபத்து நான்கு குறுக்குச் சட்டங்களைக் கொண்டுள்ளது இது அறுபத்து நான்குக் கலைகளைக் குறிக்கின்றது. அதைச் சார்ந்து, இதன் குறுக்கில் செல்லும் பல வித சட்டங்களும், மனித உடலில் ஓடும் பல ரத்த குழாய்களைக்  குறிக்கின்றன.

9. பொற்கூரையின் மேலிருக்கும் ஒன்பது கலசங்கள்,  நவ சக்திகளைக் குறிக்கின்றன. அர்த்த மண்டபத்திலுள்ள ஆறு தூண்கள், ஆறு  சாஸ்திரங்களையும், அந்த மண்டபத்தின் அருகிலுள்ள மண்டபத்திலிருக்கும் பதினெட்டு தூண்கள், பதினெட்டு புராணங்களையும் குறிக்கின்றது.

10. மனித உடலை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது  சிதம்பரம் கோயில். அதனால்தான் அதன் ஒன்பது நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கக் கூடிய ஒன்பது  நவ துவார வாயில்களைக் குறிக்கின்றது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்