நோன்பு கற்றுத்தரும் பாடங்களும் சிறப்புகளும்! - ரம்ஜான் நோன்பு சிறப்புக் கட்டுரை

ஸ்லாமிய மார்க்கத்தில் ரமலான் (ரம்ஜான்) மாதத்தில் மாதம் முழுவதும் நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. நோன்பு நமக்கு எம்மாதிரியான பாடங்களைக் கற்றுத்தருகிறது என்பதைப் பற்றியும், நோன்பின் சிறப்புகளைப் பற்றியும் பேராசிரியர் அபூதாஹிர் அளித்த தகவல்களின் தொகுப்பு.

நோன்பு

இஸ்லாமியர்களுக்குரிய 12 மாதங்களில் 9 வது மாதமான ரமலான் மாதம் மிகவும் நன்மைக்குரியதாகும். இதில் இஸ்லாமிய மார்க்க வழிகாட்டி திருக்குர்ஆன்.பேராசிரியர் அபுதாஹிர்

இந்த மாதத்தில் இறைவன் நோன்பு நோற்பதைக் கட்டாயமாக்கியுள்ளார். 14 மணி நேரம் பசித்திருந்து, விழித்திருந்து, ஒவ்வொருவரும் தன்னை புடம்போட்டு தூய்மைப்படுத்தி, அதன் மூலம் மனித சமுதாயத்துக்குப் பல்வேறு நன்மைகளை வழங்குகிறார்கள்.

நோன்பின் சிறப்புகள்:

* என் உயிர் எவனிடம் இருக்கிறதோ அந்த இறைவன் மீது ஆணையாக நோன்பாளியின் வாயிலிருந்து வெளியாகும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட மிகவும் நறுமணமுள்ளதாகும். இவ்வாறு நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

* நோன்பு நோற்பவன் தன் உணவையும், குடிபானத்தையும், இச்சையையும் எனக்காகவே விட்டுவிடுகிறான். நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுக்கின்றேன். ஒரு நன்மைக்குப் பத்து மடங்கு நன்மைகளை வழங்குவேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

* சுவர்க்க வாசல்களில் ஒன்றுக்கு 'அர்ரய்யான்' என்று சொல்லப்படும். மறுமை நாளில் அவ்வாசலில் நோன்பாளிகளைத் தவிர வேறு யாரும் நுழையமாட்டார்கள். 'நோன்பாளிகள் எங்கே' என்று அழைக்கப்படும். அப்போது நோன்பாளிகள் எழுந்து அவ்வாசல் வழியாக நுழைவார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் மூடப்படும். அவர்களைத் தவிர வேறு யாரும் அவ்வாசலில் நுழையமாட்டார்கள் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள்மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள்மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)

தொழுகை

நோன்பு கற்றுத்தரும் பாடங்கள்:

தன்னடக்கம்:

உடல் இச்சைகள், பாலியல் உணர்வுகள் மனிதர்களுக்கு இயற்கையாகக் கொடுக்கப்பட்டது. ஆனால், அது முறையற்று பயன்படுத்தப்படுமானால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். பெற்ற பிள்ளைகள், வளர்த்த பெற்றோர், என்று யாரையும் பார்க்காது. கொலை செய்யும் அளவுக்குகூட துணிந்துவிடும். அதனால், இஸ்லாம் நோன்பைக் கட்டாயமாக்குகிறது. இதன் மூலம் சொந்த மனைவியிடம் கூட நெருங்காத தன்னடக்கத்தைக் கற்றுக்கொடுக்கிறது.

கோபத்தை அடக்குதல்:

உலகம் இயந்திரத்தனமாக மாறிவிட்டது. மனிதர்களுக்குச் சிந்திக்கும் தன்மை குறைந்துகொண்டே போய் சுயநலம் பெருகி வருகிறது. சுயநலம் பெருகிய மனத்தில் சகிப்புத்தன்மை போய்விடுகிறது. இதன் விளைவாக, 'தூங்கிய கணவன் மீது கல்லைத்தூக்கிப் போட்டு கொலை செய்யும் மனைவி', 'பக்கத்து வீட்டு நாய் குரைத்து தூக்கம் தொலைந்ததால் அண்டைவீட்டார் சுட்டுக் கொலை' இதுபோன்ற செய்திகளைப் பார்க்க முடிகிறது. இப்படிப்பட்ட மோசமான செயல்களிலிருந்து மனிதர்களை மீட்டு, அனைவரும் நம் சகோதர்களே என்ற உணர்வை வளர்த்து கோபத்தை விடுத்து உயர்தன்மையை நோன்பின் மூலம் இஸ்லாம் வழங்குகிறது.

நாவடக்கம் :

'நோன்பு ஒரு கேடயமாகும். தவறான பேச்சு பேச வேண்டாம். யாராவது உம்மிடம் சண்டைக்கு வந்தால் நான் நோன்பாளி' என்று அவரிடம் கூறிவிடவும் (நூல்:புகாரி)

மனிதன் தன் பகுத்தறிவை மீறிப் பேசினால், மனித நிலையிலிருந்து பேசும் மிருகம் என்றாகி பெரும் விபரீதங்களை விளைவித்து விடுகின்றான். நோன்பு இதைக் கட்டுபடுத்துகிறது. நாவடக்கத்தைக் கற்றுத்தந்து நன்மையைத் தருகிறது.

ரம்ஜான்

உணவுக் கட்டுப்பாடு:

தவறான உணவுமுறையால் கொழுப்புகூடி இருக்கும். அதைக் குறைக்கவும், அது சம்பந்தமான நோய்களிலிருந்து மனிதர்களைப் பாதுகாக்கவும் மருத்துவ உலகம் போராடிக் கொண்டிருக்கிறது.

யோகாவில் அமுத காற்று வீசும் நேரம் என்று சொல்லக்கூடிய நுரையீரல் சிறப்பாக இயங்கக்கூடிய நேரமான அதிகாலை 3 மணியிலிருந்து 5 மணி வரை 'ஸஹர்' செய்வதால் நுரையீரல் புத்துணர்ச்சி அடைகிறது. இதனால் மற்ற உறுப்புகளும் நன்கு இயங்க ஆரம்பிக்கின்றன.

அமெரிக்க மருத்துவர் யூவே கூறுகிறார் : நோயாளி சாப்பிட வேண்டாம். பசித்திருப்பது அவருக்குச் சிறந்தது.

பள்ளிவாசல்

சமூக நலம் பேணுதல்:

நோன்பின் மூலம் பசித்திருப்பதால் ஏழ்மையின் வழி உணரப்பட்டு ஏழைகளுக்கும், வறியவர், அநாதை, என்று தேவையுள்ளவர்களைத் தேடிச் சென்று உதவிக்கரம் நீட்டுவதை நோன்பு கற்றுக் கொடுக்கிறது.

சமூதாய சமரசத் திட்டத்தைக் கற்றுத்தரும் ரமலான் நோன்பைப் புரிந்து முழு உலகிலும் சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி அமைதிப் பூங்காவாக ஒன்றிணைந்து வாழ்வாங்கு வாழ்வோமாக.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!