வெளியிடப்பட்ட நேரம்: 17:17 (04/06/2017)

கடைசி தொடர்பு:17:17 (04/06/2017)

உன் சொர்க்கம் உன் காலடியில்! - உண்மை உணர்த்தும் தத்துவக் கதை!

சொந்த ஊரே சொர்க்கம் என்று சிலர் இருப்பார்கள். போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து என சிலர் இருப்பார்கள். ஆனால் எல்லோரும் அப்படி இருப்பதில்லை. சொந்த ஊரிலேயே ஆயிரம் தொழில்கள் இருந்தாலும், நுகர்வு கலாசாரத்துக்கு ஆட்பட்டு, புலம்பெயர்ந்து நகரம், மாநகரம், வெளிநாடு... என வாழும் வாழ்க்கை.வந்த இடத்தில் உறவுகளை எண்ணிக் கலக்கம். திருமணம், திருவிழா, நல்ல நிகழ்ச்சிகள், நண்பர்கள் உறவுகளைப் பிரிந்திருக்கும் வருத்தம்... தொடர்கதையாகச் செல்லும் விடுகதை வாழ்க்கை.... ஒரு சின்னக் கதை.

சொர்க்கம்

தென் ஆப்பிரிக்காவில் உள்ள கிராமம் ஒன்றில், ஒரு விவசாயி மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். அவர் மனநிறைவுடன் இருந்ததால், மகிழ்ச்சியாக இருந்தார். மகிழ்ச்சியாக இருந்ததால், மனநிறைவுடன்  இருந்தார். ஒருநாள், அந்த ஊருக்கு ஒரு வெளிநாட்டு வியாபாரி வந்தார். `100, 200... என ஏக்கர் கணக்கில் நிலங்களை வைத்துக்கொண்டு அவதிப்படுவதைவிட,  வைரமாக சொத்துகளை மாற்றி வைத்துக்கொள்வதுதான் மதிப்பு மிக்கது’ என்ற துர்போதனையை வீசிவிட்டுப் போனார். வைரங்களின் மகத்துவத்தைப் பற்றியும், அந்த வைரங்களுக்குள்ள சக்தியைப் பற்றியும் வாய்க்கு வந்தபடி அள்ளி வீசினார்.

வைரம்

அன்றிரவு அந்த விவசாயியால் தூங்க முடியவில்லை. படுக்கையில் இருந்து எழுந்து போய் வானத்தைப் பார்த்தார். திரும்பவும் வந்து படுத்தார். தூக்கம் வரவில்லை... தூக்கம் வரவே இல்லை. அவர் மகிழ்ச்சியாக இல்லை. மனநிறைவோடும் இல்லை. 
அடுத்த நாள் காலை, அவரது நிலங்களை விற்க ஏற்பாடுகள் செய்து, அவரது குடும்பத்துக்கு வேண்டியவற்றைச் செய்து கொடுத்துவிட்டு வைரங்களைத் தேடிப் புறப்பட்டார். ஆப்பிரிக்கா முழுவதும் சுற்றிவந்தார். வைரம் கிடைத்தபாடில்லை. பின்னர் ஐரோப்பா முழுவதும் தேடினார்; வைரம் கிடைக்கவே இல்லை. அரேபியாவுக்குப் போனார். அங்கும் கிடைக்கவில்லை. மிகவும் துயருற்றுப்போனார்.

தேடல்

தன் மனைவியும் பிள்ளைகளும் எப்படி இருப்பார்களோ என்ற ஏக்கம் தொற்றிக்கொண்டது. அவர்களை நினைத்து வருந்தினார். 
ஆனாலும், வைரம் கிடைக்காமல் போனால் சொந்த ஊரில் உள்ளவர்கள், வீட்டில் உள்ளவர்கள், நண்பர்கள் என்ன நினைப்பார்கள்? அதனால் வைரம் இல்லாமல் ஊருக்குச் செல்லக் கூடாது என்பதில் மட்டும் வைராக்கியமாக இருந்தார்.

பல நாடுகள் அலைந்து திரிந்து, அவர் ஸ்பெயின் நாட்டை அடைந்தபோது, மனரீதியாகவும், உடல்ரீதியாகவும், பணரீதியாகவும் நிலைகுலைந்து போயிருந்தார். கடைசியில் அவர் மிகவும் மனச்சோர்வடைந்து ஒரு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இனி, அவரது கிராமத்தில் என்ன நடந்தது என்கிற வியப்பான நிகழ்ச்சியைப் பார்ப்போம்.

அவரது நிலத்தை வாங்கியவர், அந்த நிலத்தில் ஓடிக்கொண்டிருந்த ஒரு நீரோடையில் ஒட்டகங்களுக்கு தண்ணீர் காண்பித்துக்கொண்டிருந்தார். அப்போது சூரியனின் கதிர்கள் அந்த ஓடை நீரில்பட்டு அருகாமையிலிருந்த கல்லில்பட்டு, அந்தக் கல் ஒளிப்பிழம்பாக மின்னியது. வித்தியாசமான அந்தக் கல்லை எடுத்துப்போய் தன் வீட்டு மேசையின் மீது டேபிள் வெயிட்டாக வைத்துக்கொண்டார்.

ஒளிபிழம்பு

நீண்ட நாளைக்குப் பிறகு, முன்னர் வந்த வியாபாரி அந்த கிராமத்துக்கு வந்து முகாமிட்டார். தற்செயலாக தன் விவசாய நண்பனின் நினைவு அவருக்கு வந்தது. விவசாயியின் வீட்டுக்குப்போனார்.  

பழைய விவசாயி அங்கே இல்லை. விவசாயியிடம் நிலங்களை விலைக்கு வாங்கியவர்தான் இருந்தார். அவரும் வியாபாரியை இன்முகத்துடன் வரவேற்றார். அப்போது, மேசையின் மீது இருந்த வைரக்கல்லைப் பார்த்த வியாபாரி, ``அட... இதைப் பற்றித்தானே நான் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் அந்த நண்பரிடம் சொல்லிவிட்டுப் போனேன்’’ என்றார். புதிய நண்பரோ அவருக்கு தேநீர் வழங்கிக்கொண்டே, திரும்பி வராமல் போன  அவரது நண்பரின் கதையைச் சொல்லி முடித்தார். 

``இது போன்ற கற்கள் என் தோட்டத்து ஓடையில் நிறையக் கிடக்கின்றன. இது தெரியாமல்தான் எனது நண்பன் வெளியூருக்குப்போயிருக்கிறானா? பாவம், அவன்...’’ என்று கண்கலங்கினார்.

'தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது' என்று நபிகள் நாயகம் சொன்னார். இது தாய்க்கு மட்டுமல்ல, தாய் பூமிக்கும் பொருத்தமாகும். `உள்ளே இருப்பதை வெளியே தேடாதே’ என்கிறது இந்து மதம். இப்படி மதங்களும் ஆன்மிகப் பெரியோர்களும் எவ்வவளவுதான் சொன்னாலும், நம் மனித மனம் இருக்கும் இடத்தைவிட்டு இல்லாததைத் தேடியே அலைகிறது!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்