வெளியிடப்பட்ட நேரம்: 19:53 (06/06/2017)

கடைசி தொடர்பு:19:53 (06/06/2017)

வேண்டுவன எல்லாம் அருள்வான் வேல்முருகன் - வைகாசி விசாகத் திருநாள் பகிர்வு

வைகாசி மாதம், விசாக நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் ஆகும். அன்றுதான் வேல்முருகன் அவதரித்தார். முருகப் பெருமானின் பக்தர்கள் விரும்பிக் கொண்டாடும், விரதமிருந்து வழிபடும் திருநாள் வைகாசி விசாகத் திருநாள். சித்திரைக்கு அடுத்த மாதம் வைகாசி, அம்மாதத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகள் இரண்டு. அவற்றில் ஒன்று, வசந்த நவராத்திரி;  மற்றொன்று, வேல்முருகன் பக்தர்கள் விரும்பிக் கொண்டாடும்  வைகாசி விசாகம். இது முருகப்பெருமான் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து புறப்பட்டு சரவணப்பொய்கையில் அவதரித்த திருநாள். 

வேல்முருகன்


'அருவமும் உருவமாகி அநாதியாய்ப்
 பலவா யொன்றாய்ப்
 பிரம்மமாய் நின்ற சோதிப்பிழம்பதோர்
 மேனியாகக்
கருணைகூர் முகங்களாறும்
கரங்கள் பன்னிரண்டுங்கொண்டே
ஒரு தின முருகன் வந்தாங்
குதித்தனன் உலகமுய்ய'

 என வேல்முருகனின் அழகிய தோற்றம் பற்றி கந்தபுராணம் தெரிவிக்கிறது. இந்திராதி தேவர்களைக் கொடுமைப்படுத்திய     சூரபத்மனிடமிருந்து அவர்களைக் காக்க, சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவரே வேல்முருகன். ஆறு குழந்தைகளாகத் தோன்றியவரை கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்துவந்தனர். இதனாலேயே முருகன், `கார்த்திகேயன்’ என்று ஆனார். சூரனை வதைப்பதற்கான காலம் வந்ததும், அன்னை பராசக்தி ஆறு பிள்ளைகளை  அள்ளி அணைத்து, ஒன்றாக்கி ஒரே உருவாக ஆக்கினார். ஆறு முகங்களும், பன்னிரு கரங்களும் என ஸ்கந்தர் உருவானார். உலகில் உள்ள சகல ஜீவராசிகளும் தாயிடம் இருந்து உருவாக, முருகன் ஒருவரே தந்தையின் மூலம் உருவானார். இதனால் சுட்டித்தனமும் கெட்டிக்காரத்தனமும் கொண்டு முருகன் வளர்ந்தார். பின்னர், `அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன்’ என்ற பெயரும் கொண்டார். 

வேல்முருகன்

அதுமட்டுமா? நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக, முருகன் அழகிய ரூபம் கொண்டு `முருகன்’ என்ற சொல்லுக்கே அர்த்தம் கொடுத்தும் வளர்ந்தார். தேவாதி தேவர்களை கொடுமைப்படுத்தி, சிறைப்படுத்தி, வதைத்து வந்த சூரபத்மனையும் அவனது சகோதரர்களையும் ஒடுக்க வேல்முருகன் தயாரானார். அன்னை சக்தி கொடுத்த சக்திவேலும், தந்தை ஈசன் கூட அனுப்பிய வீரபாகு உள்ளிட்ட நவ வீரர்களும் சேர்ந்து சூரபத்ம வதமும் நிறைவேறி, முருகப்பெருமான் அவதார நோக்கமும் நிறைவேறியது. `ஒரு கால் நினைக்கின் இருகாலும் தோன்றும், வெஞ்சமரில் அஞ்சேலென வேல் தோன்றும்’ எனக் கூறுவதைப்போல எந்தத் துயரிலும் ஓடி வந்து காக்கக்கூடிய கடவுள் கந்தப்பெருமான்தான். இவரது அவதார தினமான வைகாசி விசாகம், அவருக்கு மிகவும் ஆனந்தமயமான நிலையைக் கொடுக்கும் அற்புத நாள். `இந்த நாளில் வேண்டிக்கொள்ளும் எந்த வேண்டுதலும் தடையற நிறைவேறும்’ என்பது ஆன்றோர்கள் வாக்கு. எனவே, இந்த வைகாசி விசாகத்தில் முருகப்பெருமானை மனமுருக வேண்டுவோம். அவன் புகழைப் பாடுவோம். 

27 நட்சத்திரங்களில் விஷேசமானது விசாக நட்சத்திரம். முருகப்பெருமான் தோன்றியதால் இந்த நட்சத்திரம் இன்னும் விஷேசமானது என்பார்கள். வைகாசி விசாகம்தான் புத்தர் தோன்றிய நாள் மற்றும் மறைந்த நாள் என்றும் கூறப்படுகிறது. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் அவதரித்த தினமும் வைகாசி விசாக நாள் என்றே கூறப்படுகிறது. யமதர்மன் தோன்றிய தினமும் இதுவே என்றும் புராணங்கள் கூறுகின்றன. இந்த நாளில் யமலிங்கத்தை வணங்குபவர்கள் மரண பயமின்றி வாழலாம். இப்படி எண்ணற்ற சிறப்புகளைக் கொண்டு விளங்குகிறது வைகாசி விசாகத் திருநாள். இந்த நாளில் முருகப்பெருமான் கோயிலில் மட்டுமின்றி, முருகன் சந்நிதி அமைந்து இருக்கும் சிவன் கோயிலிலும் வசந்தோத்ஸவமும் பிரமோற்ஸவமும் நடைபெறுவது வழக்கம். திருத்தணி முருகப்பெருமான் ஆலய வைகாசி விசாகத் திருவிழா மற்ற எல்லா ஆலயங்களைவிடவும் சிறப்பானது என்று சொல்லப்படுகிறது. 

வைகாசி விசாகத்தன்று உண்ணாவிரதம் இருந்து பால் குடம் எடுத்து முருகனை வணங்கினால், ஞானமும் கல்வியும் பெருகும் என்பார்கள். விசாக நாளில் முருகன் கோயில்களில் பலவிதமான காவடிகள் முருகப்பெருமானுக்கு எடுப்பது நம் தொன்றுதொட்ட வழக்கம். பால், பன்னீர், புஷ்ப, சந்தன, மச்ச காவடிகள் என எத்தனை எத்தனைவிதமான காவடிகள் அன்றைய தினம் கோயிலில் காணலாம் தெரியுமா? தோள் வலிக்க, காவடி சுமப்பவர்களை முருகன் தோள்கொடுத்து காப்பான் என்பது நம்பிக்கை. குழந்தை பாக்கியமில்லாதவர்கள் வைகாசி விசாகம் அன்று முழுக்க உண்ணாவிரதமிருந்து, முருகப்பெருமானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்கிறார்கள். இந்த உண்ணாவிரதத்தை மேற்கொள்ளும் அடியார்கள் ஏழை எளியவர்களுக்கு உணவு, மோர், பானகம், பழங்கள் ஆகியவற்றை தானமாக கொடுக்கலாம் அது செல்வவளத்தை அளிக்குமாம். வைகாசி விசாகத்தன்று உண்ணாவிரதமிருந்து முருகனை வணங்கினால் பகை விலகும், துன்பங்கள் நீங்கும் என்கிறார்கள்.

வைகாசி விசாகம்

வைகாசி விரதம் இருப்பவர்கள் அதிகாலையிலேயே எழுந்து நீராட வேண்டும், நெற்றி நிறைய திருநீறிட்டு, சுத்தமான ஆடைகளை அணிந்து விரதத்தைத் தொடங்க வேண்டும். இந்த ஒரு நாள் முழுவதும் உணவு ஏதும்  உண்ணாமல் விரதமிருக்கலாம். அப்படி இருக்க இயலாதவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். முருகனுக்குரிய திருமந்திரங்களைச்  சொல்லி விரதம் இருக்கலாம், திருப்புகழ், கந்தர் அலங்காரம் மற்றும் கந்தர்சஷ்டி கவசம் போன்றவற்றைப் படித்து பயன்பெறலாம். மாலையில் முருகன் கோயிலுக்குச் சென்று திருவிளக்கேற்றி  வழிபடுவது குடும்ப நலனுக்கு நல்லது. முருகன் கோயில் அமைந்துள்ள மலையைச் சுற்றி கிரிவலம் வருவதும் அங்குள்ள கோசாலையில் பசுக்களுக்கு உணவளிப்பதும் விசேஷமானது. பன்னிரு விழிகளால் நம்மை எப்போதும் காத்துவரும் முருகப்பெருமானை அவரது அவதாரத் திருநாளில் தரிசிப்பதும், உபவாசம் இருப்பதும் மிக மிகச் சிறப்பானது. எனவே, இந்த நாளில் முருகனை வணங்கி, சிறப்பான வாழ்வை மேற்கொள்வோம். ஓம் சரவண பவ! 

- எம்.ஹரி காமராஜ்


டிரெண்டிங் @ விகடன்