நீயே எல்லாம் என்ற நிலையே 'பக்தி'..! #ConditionsApply

திகாலை உறக்கம் கலைந்து எழுந்ததுமே உங்கள் இஷ்ட தெய்வத்தை வணங்கியவாறே எழுந்திருங்கள். இதனால்  அன்றைய நாள் முழுக்க நிச்சயமாக நன்மையாகவும், நம்பிக்கையாகவும் இருக்கும். எதிலுமே சந்தேகப்படும் இன்றைய இளைஞர் கூட்டம், ஆண்டவன் பக்தியில் கூட அநேகமாக முழு நம்பிக்கை வைப்பதில்லை. தனது திறமை, வசதி, ஆள் பலம் எல்லாவற்றிலும் நம்பிக்கை கொள்ளும் நபர்கள், இதை எல்லாம் மீறிய தெய்வசக்தியை அத்தனை உறுதியாக நம்புவதில்லை. கடவுள் பக்தி இப்போதெல்லாம் சடங்காக மாறி வருகிறது. 

பக்தி

 

சிவபெருமானை மட்டுமே தனது கடவுளாக ஏற்றுக்கொண்ட திருநாவுக்கரசு பெருமானை சமணர்கள் சொல்லொணாத துன்பங்களுக்கு ஆளாக்குகிறார்கள். சமண சமயத்தை விட்டு நாவுக்கரசர் வெளியேறியது அவர்களை ஆத்திரம் கொள்ள செய்தது. இதனால் அவரை அரசரின் உதவியோடு சித்திரவதை செய்கிறார்கள். கல்லைக் கட்டி கடலில் எறிகிறார்கள். சுண்ணாம்பு காளவாயில் போட்டு அனலை மூட்டுகிறார்கள். எதிலுமே கொஞ்சம் கூட பாதிக்கவில்லை நாவுக்கரசு பெருமான். காரணம் அவரது அசைக்க முடியாத இறைவன் பக்தி தான். 'நற்றுணையாவது நமச்சிவாயவே' என்ற அவரது வார்த்தை அவரை ஒரு சிறு துன்பம் கூட ஏற்படாமல் பாதுகாத்து விடுகிறது. நாமும் அப்படி நம்பிக்கை கொள்ள வேண்டும் அதுவே இறைபக்தி. சிலர் பேசும்போது கூட சொல்வார்கள், 'கடவுள்னு ஒருத்தர் இருந்தா உன்னை பார்த்துப்பார்' அது என்ன கடவுள் இருந்தால்? இதுதான் ஆபத்தானது. கடவுள் உண்மை என்று நம்புங்கள். அந்த அசைக்க முடியாத நம்பிக்கை உங்களை காப்பாற்றிவிடும்.

பக்தி

 

புத்தசமயம் ஓங்கி இருந்த காலகட்டத்தில், இந்து சமயம் பெரும் வீழ்ச்சியை அடைந்தது. இதனால் புத்த மதத்தின் கருத்துகளை அறிந்து கொள்ள விரும்பிய குமாரில பட்டர் ஒரு புத்த மத மடத்தில் சேர்ந்து கொண்டார். அங்கு அநேக புத்த மத கருத்துகளையும் கற்றுக்கொண்டார். ஆனால், இவர் புத்த சமயத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பதை அங்கிருந்தோர் கண்டுகொண்டார்கள். இதனால் குமாரில பட்டரை துன்புறுத்தி ஏழாவது மாடியில் இருந்து தள்ளி கொன்று விட துணிந்தார்கள். அப்போது அவர், 'வேதம் என்பது உண்மையானால், எனக்கு எந்த தீங்கும் நேரக்கூடாது' என்று கூறியவாறே கீழே விழுந்தார். என்ன ஆச்சரியம் அவர் சாகவில்லை. எந்த ஊனமும் உண்டாகவில்லை. ஆனால் ஒரு கல் குத்தி கண்ணில் மட்டும் காயம் உண்டாகி ரத்தம் வழிந்தது. வலி பொறுக்க முடியாத பட்டர், 'வேதத்தையே நம்பிய எனக்கு, இந்த வேதனை உண்டாகலாமா?' என்று கதறினார். அசரீரியாக எழுந்த இறைவனின் குரல் அவருக்குப் பதில் சொன்னது. ஆம் "வேதம் உண்மையானால் என்று நீ சந்தேகம் எழுப்பியதால் தான் உனக்கு இந்த துன்பம்' என்று கூறியது. 

பக்தி

எனவே கடவுளையும், பெரியோர்களையும் முழுமனதாக நம்ப வேண்டும். முக்கியமாக கடவுளைப் பற்றி கூறும் புனித நூல்களை முழுமையாக நம்பி, கூடுமானவரை அதில் உள்ள நல்ல கருத்துகளை கடைபிடிக்க வேண்டும். மனமார முழுமையாக நம்பும் எந்த அடியாரையும் கடவுள் கைவிடுவதே இல்லை என்பது சத்தியம். எனவே இப்போது முதலே இறைவனின் மீதான நம்பிக்கையை உறுதியாக்குவோம். எல்லாமே இறைவன் சித்தம் என்று சரணாகதி கொள்வோம். பக்தி என்பதே சரணாகதி தான். நீயே எல்லாம் என்ற நிலை தான் பக்தி. மற்றபடி செய்யப்படும் மற்ற சடங்குகள் யாவும் அத்தனை பெரியது அல்ல. மனமொன்றி வணங்கப்படும் நிலையே ஆண்டவன் - அடியார் உறவை உறுதியாக்கிவிடும். உறுதியான கடவுள் நம்பிக்கையே நம் வாழ்வை சீராக்கிவிடும். எந்தவித சந்தேகமும் இல்லாத பக்தி எந்நாளும் சிறப்பானது. இதனால் மனம் மட்டுமல்ல, நமது வாழ்க்கையே எந்த பயமும் இன்றி தெளிவாக மாறிவிடும் என்பது சத்தியம்.

- மு. ஹரி காமராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!