வெளியிடப்பட்ட நேரம்: 06:42 (09/06/2017)

கடைசி தொடர்பு:08:21 (09/06/2017)

சகல சௌபாக்கியங்களைத் தரும் நல்ல நெறிமுறைகள் !

வாழ்க்கையில் நம்மால் முன்னேற முடியவில்லையே? செல்வச்செழிப்பில், மற்றவர்களெல்லாம் எப்படி எப்படியோ முன்னேறுகிறார்களே, என்று சிலர் கவலைப்படுவதுண்டு. அப்படி முன்னேற வேண்டுமானால், அதற்குரிய அருமையான  வழிமுறைகள் என்ன என்பதை அறிய ஆவலாக இருக்கிறீர்களா? இதோ... சகல  சௌபாக்கியங்களையும் நாளும்  நம் வீட்டுக்குத் தரும் நல்ல நல்லநெறிமுறைகள்.

நெறிமுறைகள்

* அதிகாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை உள்ள நேரத்துக்கு 'பிரம்ம முகூர்த்தம்' என்று பெயர். அந்த நேரத்தில் விழித்தெழுந்து நாளைத் தொடங்க வேண்டும். முதலில் சிரமமாக இருந்தாலும், இப்படிப் பழகிவிட்டால் பிறகு பழக்கமாகிவிடும். இவ்வாறு நாம் செய்வது ஆரோக்கியத்தையும், நீண்ட  ஆயுளையும் கொடுக்கும். அந்த நேரத்தில் தேவர்களும், முன்னோர்களும் நம் வீட்டை நோக்கி வருவார்கள் என்பது நம்பிக்கை. அப்போது விழித்திருந்து மனதால், அவர்களை வழிபட்டால், அவர்களைக் கௌரவித்து வரவேற்றால்,  அவர்கள் சந்தோஷப்பட்டு நமக்கு நன்மை செய்வார்கள்.

* தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு. துளசி மாடத்துக்கு விளக்கேற்றி, மும்முறை வலம் வந்தால் சிறப்புகள் கூடும். காலை, மாலை ஆறுமணிக்கு திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும். 

* நெருப்பையும் தண்ணீரையும் சிக்கனமாக உபயோகிப்பவர்களுக்கு எப்போதும் லக்ஷ்மி கடாட்சம் உண்டு.

கோலம்

* அன்றாடம் ஒரு வேளைக்கு ஒரு பிடி அரிசியை ஒரு பெரிய பாத்திரத்தில் கடவுளுக்கு (அன்னதானம் செய்ய ) என்று போட்டு வைத்து தானம் செய்தால், லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும். லக்ஷ்மி வீட்டில் வாசம் செய்வாள்.

* 'ராம நாமம்' உச்சரிக்கப்படும் இடத்துக்கு எப்போதும் அனுமன் தேடி வந்துவிடுவார். அதேபோல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமைமிகு பாடல்கள் ஒலிக்கும் இடத்தில், அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள். 

* காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலித்தால், செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.

* வீட்டில் நெல்லி மரம் வைத்து வளர்த்தால், லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால், நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். 

துளசி மாடம்

* நெல்லிக்கனிக்கு 'ஹரி பலம்' என்ற பெயரும் உண்டு. லக்ஷ்மி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். 

* சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தமானவை.

* பசுக்களுக்கு ஒரு  வாழைப்பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும்போது, அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால், மிகச் சிறப்பான பலன்கள் கிடைகும். பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான். கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.

* சங்கு, நெல்லிக்காய், பசுஞ்சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.

* காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோயில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றைப் பார்க்கவேண்டும்

* மாற்று திறனாளிகளுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யவேண்டும்.

* நமது வீட்டில் செல்வம் நிலைத்திருக்கவும், விருத்தி அடையவும், பணம் தொடர்பான கொடுக்கல் வாங்கல்களை, செவ்வாய்க்கிழமை, செவ்வாய் ஹோரையில்  செய்வது உத்தமம். 

* எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக்கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.

பூஜை

* வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால், பல வித சௌபாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.

* எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

* கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்.

* அமாவாசையன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது.

* கோலம் இட்ட வீட்டில் திருமகள் தங்குவாள். வீட்டு வாசலில் கோலம் இடுவது அவசியம். ஃபிளாட்களில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டுக்கதவுக்கு அருகிலாவது சிறிய அளவில் கோலம் வரையலாம்.

* தங்கம் எனப்படும் 'சொர்ணம்', மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால், அதை இடுப்புக்குக் கீழே அணியக்கூடாது.

* வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணிக்குள் நமது வீட்டை பெருக்கி, சுத்தம் செய்து,  கழுவி விட வேண்டும். நமது வீட்டுப் பூஜையறையில் நெய்யில் தாமரை நூலில் தீபம் ஏற்றிட வேண்டும். அதன் பிறகு, உப்பு வாங்கி வருவது, செல்வ வளத்தை நமது வீட்டுக்கு விரைவாகக் கொண்டு வரும்.

* குழந்தைகள் விளையாடும் சந்தோஷ ஒலி, பறவைகள் எழுப்பும் இனிய கீதங்கள், வீணை, மிருதங்கம் போன்ற வாத்தியங்களின் இனிய இசை நம் இல்லங்களில் நிறைந்திருந்தால், லக்ஷ்மி கடாட்சம் பெருகும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்