வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (11/06/2017)

கடைசி தொடர்பு:18:31 (11/06/2017)

கண்ணனுக்கு மீரா, சிவனுக்கு அக்க மகாதேவி!

கர்நாடக மாநிலம் என்று தற்போது அறியப்படும் சாளுக்கிய தேசத்தை, `வீர சைவ பூமி’ என்றே வரலாறும் இலக்கியமும் போற்றிப் புகழ்கிறது. தமிழ்நாட்டில் கோயில்கள் அதிகம் என்றால், கர்நாடகத்தில் சைவ மடங்கள் அதிகம். இன்றும் இங்கு சைவ சமயம், நன்கு வளர்ந்த நிலையிலேயே இருந்துவருகிறது. கன்னட, சைவ சமய வளர்ச்சியில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களின் பங்களிப்பும் வெகு அபாரமானது. அதில் மிகச் சிறந்த அடியாராகப் போற்றப்படுபவர் அக்க மகாதேவியார். இவர் சமயத்துக்கு மட்டுமின்றி, கன்னட இலக்கியத்துக்கும் வளம் சேர்த்த அற்புதமான கவிதாயினி. சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்ணடிமைப் போக்கையும், சாதியரீதியிலான கொடுமைகளையும் எதிர்த்துக் குரல்கொடுத்த சமயப் புரட்சியாளரும்கூட. 430 வசன கவிதைகளின் மூலம், சிவபெருமான் மீது இவர்கொண்ட பக்தியை ஆழமாக உணர்த்தியுள்ளார். சைவ சமய வரலாற்றில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி, அநேக மக்களை சிவனடியார்களாக மாற்றிய அக்க மகாதேவியின் வாழ்க்கை, பக்த மீராவின் வாழக்கையைப்போல துக்கமும் துணிச்சலும் நிரம்பியது. கன்னட பக்தி இலக்கியத்தில் பெருமையோடு கூறப்படும் இவரது வாழ்க்கை வரலாறு வீரம் செறிந்த கதை. 

அக்க மகாதேவி

கர்நாடக மாநிலத்தின் ஷிமோகா மாவட்டத்தில், உடுதாடி என்ற கிராமத்தில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் பிறந்தவர் அக்க மகாதேவியார். பிறந்தபோது அவரது திருநாமம் மகாதேவிதான். சிவத்தொண்டு செய்து வாழும் குடும்பத்தில் பிறந்ததால், சிறு வயது முதலே இவர் சிவக்கொழுந்தாகவே வளர்ந்துவந்தார். கருவிலேயே குருவான ஈசனின் அருளைப் பெற்றதால், அற்புதமாகப் பாட்டெழுத்தும் ஆற்றலையும், அதை இனிமையாகப் பாடும் குரல் வளத்தையும் பெற்றிருந்தார். எப்போதும், எங்கும் சிவ சிந்தனையாகவே வாழ்ந்துவந்த இந்த சிவனருட்செல்வி, ஸ்ரீசைலத்தில் வாழும் மல்லிகார்ச்சுனர் மீது மாளாத அன்புகொண்டார். அவரையே தனது வாழ்க்கைத் துணையாகவும் வரித்துக்கொண்டார். 

பிறந்து பிறந்து சாகும் மனிதரில் எவருமே தனக்குத் துணையாக மாட்டார்கள், என்றுமே மாறாத ஈசனே தனக்குத் துணை என்று வாழ்ந்துவந்தார். தினமும் மாலை வேளையில் தம் ஊரில் உள்ள சிவாலயத்தில் அவர் பாடுவது வழக்கம். மகாதேவியின் பாடல்கள் சுற்றுவட்டாரத்தில் உள்ள எல்லா மக்களையும் ஈர்த்தது. அவர்களுக்கு மட்டுமா? மகாதேவியின் மனதைக் கவர்ந்த சிவனே அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு அந்தப் பாடல்களை ரசித்துக் கேட்டு வந்தாராம். இப்படி மகாதேவி வளர்ந்துவந்த வேளையில், அவரது புகழ் பரவி அந்தப் பகுதியின் அரசன் காது வரைக்கும் சென்றது. மகாதேவியின் பாடலை மாறுவேடத்தில் வந்து கேட்ட கௌசிகன் என்ற அந்த அரசர், மகாதேவியின் அழகில் மயக்கம்கொண்டார். `மணந்தால் மகாதேவி’ என்றரீதியில், அவரது பெற்றோருக்கு நெருக்கடி தந்தார். சமண சமயத்தைச் சேர்ந்த அரசரை மணந்தால், தமது சிவவழிபாட்டுக்கு தடை உண்டாகும் என்று எண்ணி மகாதேவி, கௌசிகரை மணக்க மறுத்தார். 

அக்க மகாதேவியார்

இறுதியில் தமது தாய், தந்தையருக்கு ஆபத்து நேரலாம் என்ற நிலை வந்தபோது அரசரை மணக்கச் சம்மதித்தார் மகாதேவி. `என் பூஜைக்கு எந்தத் தடையும் விதிக்கக் கூடாது. நான் செய்யும் எந்தக் காரியத்தையும் ஏன் என்று கேட்கக் கூடாது. அப்படிக் குறுக்கிட்டால், மூன்று முறை பொறுப்பேன். அதன் பிறகு, என் சொந்த வழியில் சென்றுவிடுவேன்’ என்று நிபந்தனை விதித்தே அரசனை மணந்தார் மகாதேவி. அரசரும் அவரது நிபந்தனைக்கு உடன்பட்டு இருந்துவந்தார். அரசரோடு எந்தப் பேச்சுவார்த்தையும் இன்றி, சதா சிவ தியானத்தில் மூழ்கி இருந்தார் தேவி. ஒருமுறை விருந்தினர் வருகிறார்கள் என்பதற்காக, அவரது பூஜையைத் தடுத்தார் மன்னர். மற்றொரு முறை நகர் உலா செல்ல அழைக்க, அதனால் மகாதேவியின் பூஜை தடைபட்டது. மூன்றாவது முறை, குடும்ப விழாவைச் சொல்லி அரசர் அழைக்க, அதனால் பூஜை நின்றது. மூன்று முறை பொறுத்த மகாதேவி, நான்காம் முறை அரசர் தன்னோடு தனித்திருக்க விரும்பி அழைத்தபோது கொதித்துவிட்டார். தன்னை விடுமாறு கூறி, அரசர் தடுத்ததால், அரண்மனையைவிட்டு வெளியேறினார். அப்போதும் ஆடையைத் தொட்டு அரசர் இழுக்க, சிவனை எண்ணிக் கதறினார் மகாதேவி. அரசர் தொட்ட ஆடைகளைத் துறந்தார். `திசைகளே இனி என் ஆடைகள்’ என்று அறிவித்தார். 

என்ன ஆச்சர்யம்... அவரது உடலை மறைத்து உதவ, அவரது கூந்தல் நீளமாக வளர்ந்து உடலை முழுக்க மறைத்தது. இதைக் கண்ட அரசர் கௌசிகர் அதிர்ந்துபோனார். தான் இழைத்த தவறு புரிந்து காலில் விழுந்தார். மகாதேவி அதை எல்லாம் கவனிக்காமல் வெளியேறினார். `இந்த உடலே சிவனுடையது. இதை மறைப்பதும் சிவனே!’ என்று எண்ணினார். ஊர் ஊராகச் சுற்றினார். கவிகள் புனைந்தார். இவரது பக்தி மற்றும் கவியால் ஈர்க்கப்பட்ட மக்கள் இவரை `அக்கா’ என்று அழைத்தனர். வீர சைவ மரபில், `அக்கா’ என்றாலே இவரைத்தான் குறிக்கும் என்ற அளவுக்கு சைவ மரபை வளர்த்தார். `அன்னை பராசக்தியின் மறுவடிவே அக்காதான்’ என்று மக்கள் எண்ணினார்கள். இருபத்தைந்து ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த அக்கா மகாதேவியார், ஸ்ரீசைலத்தில் இருக்கும் ஒரு குகைக்குள் நுழைந்து, சிவனைப் பாடத் தொடங்கினார். பல நாள்கள் பாடியபடியே இருந்த அக்கா, பின்னர் சிவனோடு கலந்து ஐக்கியமானார். அப்போது தொடங்கிய சிவபக்தி இயக்கம் இன்று வரை தென்னாட்டில் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. கென்னாரி பொம்மையா, அல்லமா பிரபு, பசவண்ணா, சென்ன பசவண்ணா போன்ற சைவத் துறவிகள் இவரைப் புகழ்ந்து பாடினார்கள்.

அக்க மகாதேவியார்

பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தன்னந்தனியாகப் பெண்மணி ஒருவர் மிகச் சிறந்த இலக்கியவாதியாகவும், வீரப் பெண் துறவியாகவும் வாழ்ந்திருப்பது மிக ஆச்சர்யமான ஒன்று. அக்க மகாதேவி என்னும் இந்த சிவனடியார் பாடிய பாடல்கள், சிவனுக்கு உகந்ததாக சொல்லப்படுகின்றன. அவர் வாழ்ந்த குகை அருகே இன்னும் அந்தப் பாடல்கள் ஒலிப்பதாக ஸ்ரீசைலம் பகுதியில் உள்ளவர்கள் கருதுகிறார்கள். கண்ணனுக்கு மீராபோல, சிவனுக்கு அக்க மகாதேவி! இசையும் ஈஸ்வரனின் அம்சம்தானே? இசையாகவே வாழ்ந்த அக்க மகாதேவி ஈசனோடு கலந்துவிட்டார். ஆனால், ஈசனின் புகழ் கீதம் எங்கு ஒலித்தாலும், அங்கு அக்க மகாதேவி வந்துவிடுகிறார். இசை இருக்கும் வரை அக்க மகாதேவியும் இருப்பார்!

 


டிரெண்டிங் @ விகடன்