நவரத்தினக் கற்கள் அதிர்ஷ்டக் கற்களாக உருவான கதை! | The Story of the Nine Zodiac Stones

வெளியிடப்பட்ட நேரம்: 19:42 (14/06/2017)

கடைசி தொடர்பு:19:42 (14/06/2017)

நவரத்தினக் கற்கள் அதிர்ஷ்டக் கற்களாக உருவான கதை!

`ஆதி அந்தம் இல்லாதவன்’ என்றும், `கருணையே வடிவானவன்’ என்றும் போற்றப்பெறும் இறைவன், தன்னுடைய படைப்புகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிச் சிறப்பை அருளவே செய்கிறார். ஓரறிவு உள்ள ஜீவன் முதல் ஆறறிவு உள்ள மனிதர்கள் வரை இறைவனின் அனைத்து படைப்புகளுக்குமே ஏதேனும் ஒரு வகையில் தனிச் சிறப்பு உண்டு. அந்த தனிச் சிறப்பு என்பது என்ன? ஒவ்வொரு படைப்பும் மற்றவர்க்கு ஏதேனும் ஒரு வகையில் பயன் உள்ளதாக இருக்கவேண்டும் என்பதுதான் அந்தத் தனிச் சிறப்பு. இந்த உண்மையைப் புரிந்து கொள்ளும்போது மனிதர்களின் வாழ்க்கை பெருமைமிக்கதாக அமைந்துவிடும். மனிதர்கள் மட்டுமல்ல, அசுர குணம் கொண்டவர்களும்கூட இந்த உண்மையைப் புரிந்துகொள்ளும்போது, தங்கள் பிறவிப் பயனை அடைந்துவிடுகிறார்கள். தன் இறப்புக்குப் பிறகும் தன்னுடைய அங்கங்கள் மற்றவர்களுக்குப் பயன் தரும் வகையில் இருக்க வேண்டும் என்று விரும்பிய ஓர் அசுரன்தான் வலாசுரன். மனிதர்கள் அனைவருக்குமே தங்கத்தின் மீதும் நவரத்தினக் கற்கள் மீதும் மோகம் இருக்கவே செய்யும். தங்கத்தைவிடவும் நவரத்தினங்களுக்குத் தனிச் சிறப்பு உண்டு. காரணம், நவரத்தினங்கள் விலை மதிப்புமிக்கவையாக இருப்பதுடன், ராசிகளுக்கு உரிய அதிர்ஷ்டக் கற்களாகவும் இருக்கின்றன. மிகுந்த ஒளியுடன் பிரகாசிக்கும் நவரத்தினக் கற்கள் தோன்றியதன் பின்னணியில் வலாசுரன் என்பவனின் முடிவு மறைந்திருக்கிறது. அவனுடைய உயிர்த் தியாகமே நவரத்தினங்களாக இன்றைக்கும் ஒளிர்கின்றன. வலாசுரன் நவரத்தினங்களாக மாறிய புராண வரலாறு இதுதான்...

நவரத்தினக் கற்கள்

பிறந்ததில் இருந்தே பிடிவாதமும் உறுதியும்கொண்டவன் வலாசுரன். இது வரை தன்னுடைய இனத்தைச் சேர்ந்த பல அசுரர் தலைவர்கள் வரங்கள் பல பெற்றும், தேவர்களின் தந்திரத்தால் அழிக்கப்பட்டதை எண்ணி கோபம் கொண்டான் வலாசுரன். இதனால், தான் செய்யப்போகும் தவத்தால், தன்னை எவருமே அழிக்க முடியாத நிலையை வரமாகப் பெற வேண்டும் என்று வைராக்கியச் சிந்தனையுடன் தவம் இயற்றத் தொடங்கினான். காலங்கள் ஓடின. பஞ்சபூதங்கள் மிரட்டியபோதும் வலாசுரனின் தவத்தை ஒன்றுமே செய்ய முடியவில்லை. தேவர்கள் எத்தனைத் தடைகள் செய்தபோதும் அவனின் விடாப்பிடியான வைராக்கியத்தால் தவம் தொடர்ந்தது. இறுதியில் ஈசனே வந்து வரம் கொடுத்தாகவேண்டிய கட்டாயம் உண்டானது. வலாசுரனின் தவத்தை மெச்சிய ஈஸ்வரன், அவனுக்குக் காட்சி கொடுத்து, வேண்டிய வரத்தை கேட்குமாறு கூறினார். எளியோர்க்கு எளியோரான ஈசனை பலவாறு துதித்த வலாசுரன், எல்லா அசுரர்களைப்போலவே, சாகா வரம்வேண்டியே அடம்பிடித்தான். `அதைத் தவிர வேறு எந்த வரத்தை கேட்டாலும் தருவேன்’ என்று ஈசன் சொன்னதும் பிடித்துக்கொண்டான். 'அப்படி என்றால், நானாக விரும்பும்போதுதான் எனக்கு மரணம் வர வேண்டும். மேலும், என்னுடைய மரணத்துக்குப் பிறகும் நான் பூமியைவிட்டு நீங்காமல், உலக மக்கள் அனைவராலும் விரும்பப்படும் நிலையில் இருக்க வேண்டும்' என்று வரம் கேட்டான். ஈசனும் அப்படியே வரம் கொடுத்து மறைந்தார்.

வலாசுரன்

வழக்கம்போல, வரம் கிடைத்த வலாசுரன் பூவுலகை ஆட்சி செய்வதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. தேவர்களை வம்புக்கு இழுத்து, தொல்லைகள் செய்தான். பஞ்ச பூதங்களை, அஷ்டதிக் பாலகர்களை அடைத்துவைத்து கொடுமை செய்ததால், பூமியின் சூழலே மாறி சகல ஜீவராசிகளும் துன்பம் அடைந்தன. இந்த நிலை என்று மாறுமோ... இந்த அசுரன் என்று மாய்வானோ என்று எல்லோருமே பரமேஸ்வரனை எண்ணித் துதிக்கத் தொடங்கினர். வலாசுரனின் போதாத காலம் தொடங்கியது. மிக மிக மோசமான ஒரு நேரத்தில் இந்திரலோகம் நோக்கிப் படை எடுத்தான். படுபயங்கரமான போரில் வலாசுரனே வெற்றி பெறும் நிலைக்கு வந்தான். இந்திராதி தேவர்கள் அத்தனை பேரும் தோல்வி அடைந்து சரண் அடைந்தனர். எவராலும் இவனைக் கொல்ல முடியாது என்றும், இவனே விரும்பி மரணம் அடைந்தால் மட்டுமே அது சாத்தியம் என்றும் உணர்ந்த தேவேந்திரன் தனது சாகசப் பேச்சை தொடர்ந்தார். 'அசுரர் குல திலகமே, தங்களின் வெற்றியை மெச்சினோம், உங்களுக்கு வேண்டிய வரம் என்ன?' என்று கேட்டதுமே வலாசுரனுக்கு சிரிப்பு வந்துவிட்டது. 'நீ எனக்கு வரம் தருகிறாயோ? மூடனே, நீ என்னிடம் வரம் கேள்!' என ஆணவத்துடன் சொன்னான் வலாசுரன்.

நவரத்தினக் கற்கள்

இதுதான் சமயமென எண்ணிய இந்திரன் 'என்ன கேட்டாலும் தருவீரோ?' என்று கேட்க, 'எதுவும் தருவேன், இது சிவன் மீது ஆணை' என்றான். 'தங்களின் வெற்றியைக் கொண்டாட நான் செய்யப்போகும் யாகத்தில் நீங்களே யாகப்பசுவாக மாறி இருக்க வேண்டும்' என்றான் இந்திரன். இது ஆபத்து என்று உணர்ந்தும், அசுரர் குலகுரு சுக்கிராச்சாரியார் தடுத்தபோதும், இந்திரனுக்கு கொடுத்த வரத்தை நிறைவேற்றினான் வலாசுரன். ஆம், யாகப்பசுவாக மாறினான். தனது இறுதிக்காலத்தை எண்ணி சிறிதும் கலக்கம் அடையாமல் தயாரானான். அந்தப் பசு கொல்லப்பட்டு, யாக அக்னிக்கு இரையானது. என்னதான் அசுரன் என்றாலும், பசுரூபம் கொண்டதும் அது புனிதம் பெற்றது. மேலும், வலாசுரனின் தியாகம் தேவர்களையே வியக்கச் செய்தது. பரமனின் வரத்தின்படியே அந்தப் பசுவின் உடல் வெடிக்கத் தொடங்கியது. பூமியின் பல பாகங்களில் விழத்தொடங்கியது. வலாசுரனின் ரத்தம் மாணிக்கமாகவும், பற்கள் முத்துக்களாகவும், ரோமங்கள் வைடூரியமாகவும், எலும்பு வைரமாகவும், நிணம் கோமேதகமாகவும், பித்தம் மரகதமாகவும், தசை பவளமாகவும், கபம் புஷ்பராகமாகவும், கண்கள் நீலக்கல்லாகவும் மாறின. இவ்விதம் பூமியில் நவரத்தினங்கள் வந்து சேர்ந்தன. அதுமுதல் வலாசுரனின் பெருமையைத் தாங்கி அவை இருந்தும் வருகின்றன. உடலின் பாகங்களே ரத்தினங்களாக மாறியதால், அவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட குணங்களைக் கொண்டும் இருந்துவருகின்றன. ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு கல்லுக்கும் அதிபதியாக இருந்து பலனையும் கொடுத்து வருகின்றனர். அசுரர் குலத்தில் பிறந்தும், வெற்றிமேல் வெற்றி பெற்று வீணே அழிந்துவிடாமல், உரிய நேரத்தில் செய்த உயிர்த்தியாகம் வலாசுரனை என்றென்றும் நீடித்து வாழச்செய்யும் உன்னத நிலைக்கு கொண்டு வைத்தது. அடுத்தவருக்காகத் தன் வாழ்க்கையைத் தியாகம் செய்யும்போது, அளவற்ற ஆனந்தம் தரும் என்பது உண்மைதான்!


டிரெண்டிங் @ விகடன்