வெளியிடப்பட்ட நேரம்: 18:53 (19/06/2017)

கடைசி தொடர்பு:18:53 (19/06/2017)

இந்தியாவின் பழைமையான அகராதியைக் காப்பாற்றிய ஆதிசங்கரர்!

ந்து தர்மம் தழைக்கச் செய்த மாபெரும் ஞானி ஜகத்குரு ஆதிசங்கரர். எப்போதும் நன்மையே செய்பவர்; எப்போதும் இன்பத்தையே தருபவர் என்ற பொருள்படும் சங்கரர் என்ற திருப்பெயரினை ஏற்று, ஶ்ரீசிவகுரு - ஆர்யாம்பா தம்பதியினருக்கு, கேரள மாநிலம் காலடியில் தோன்றியவர் ஆதிசங்கரர். பால்ய பருவத்திலேயே சகல சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்த ஞானி. காலடியில் தோன்றிய சங்கரர், தம் காலடிகளாலே பாரத தேசத்தை மூன்று முறை வலம் வந்து புனிதப்படுத்தினார். அவருடைய அவதார காலத்தில் எண்ணற்ற மதங்கள் மேகங்களைப்போல் தோன்றி, இந்து தர்மம் என்னும் சூரியனை மறைத்திருந்தன.

மேகங்களை விலக்கி, இந்து தர்மம் என்னும் சூரியனைச் சுடர்விட்டுப் பிரகாசிக்கச் செய்த பெருமை ஆதிசங்கரரையே சாரும். அற்புதமான அத்வைதத் தத்துவத்தை நிலைநாட்டிய ஜகத்குரு, இந்து தர்மத்தைக் கடைப்பிடிப்பவர்களின் மனப்பான்மைக்கு ஏற்ப, காணாபத்யம், சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், சௌரம் என்று ஷண்மதம் என்னும் ஆறுவகையான வழிபாட்டு முறைகளையும் வகுத்துக் கொடுத்தார்.

ஆதி சங்கரர்

சிவபெருமானின் அம்சம் என்று போற்றப் பெறும் ஆதிசங்கரர், பத்ரி, துவாரகா, சிருங்கேரி, பூரி, காஞ்சி ஆகிய இடங்களில் ஶ்ரீமடங்களை நிறுவினார். இந்த மண்ணுலகில் அவர் பூத உடலுடன் இருந்தது 32 ஆண்டுகள்தான் என்றாலும், அவருடைய தத்துவங்கள் என்றைக்கும் மறையாமல் உயிர்ப்புடன் திகழ்கின்றன. இந்து தர்மத்தை நிலைநிறுத்தும் வண்ணம், அவர் எண்ணற்ற நூல்களை இயற்றி இருப்பதுடன், சமண மதத்தைச் சார்ந்த அரசர் ஒருவர் எழுதிய அற்புதமான ஒரு நூலை, அழிவில் இருந்து காப்பாற்றித் தந்துள்ளார். அதுவே இந்தியாவின் முதல் அகராதி என்று சொல்லப்படும் அமரகோசம்.

சமஸ்கிருத மொழியின் அழியாத நூல் அமரகோசம் என்று போற்றப்படுகிறது. இந்த நூலை இயற்றியவர் அமரசிம்மன் என்ற அரசர். சமண மதத்தில் நம்பிக்கை கொண்டிருந்த அமரசிம்மன், இந்து தர்ம தத்துவங்களையும், கருத்துகளையும் ஏளனம் செய்து வந்தார். அவருக்கு இந்து தர்ம தத்துவங்களையும், மகிமையையும் உணர்த்த விரும்பிய ஆதிசங்கரர், அமரசிம்மன் வாதத்துக்கு அழைத்தபோது ஒப்புக்கொண்டார். இருவரும் வாதம் செய்யத் தொடங்கினர்.

வாதம் தொடங்குவதற்கு முன்பு அமரசிம்மன் ஒரு நிபந்தனை விதித்தார். அதன்படி அமரசிம்மனுக்கும் ஆதிசங்கரருக்கும் இடையில் ஒரு திரை கட்டப்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் வாதம் தொடங்கினர். ஒரே ஒரு பரம்பொருளே எல்லா ரூபமாகவும் இருந்து மாயையை உருவாக்கி மனிதர்களை மயக்கி வருகிறது என்று ஆதிசங்கரர் ஆணித்தரமாக வாதித்தார். எனினும் அமரசிம்மனின் வாதங்கள் ஆதிசங்கரரை ஆச்சர்யம் கொள்ளச் செய்தது. உறுதியான பல கருத்துக்கள் அமரசிம்மனை சபையில் சிறந்த அறிவாளியாக காட்டியது. ஒருகணம் திகைப்படைந்த ஆதிசங்கரர், மனதில் சிவனை தியானித்தார். நடப்பது அவருக்குப் புரிந்தது.

ஆதி சங்கரர்

சங்கரரை வெல்லவே முடியாது என்று கணித்த அமரசிம்மன், ஜைன அரசராக இருந்தபோதும், அன்னை கலைவாணியை தொழுது தனக்கு பதிலாக வாதம் செய்ய வரும்படி வேண்டிக்கொண்டார். அன்னையும் அவரது பக்திக்கு இணங்கி சம்மதித்தாள். அமரசிம்மன் அருகே வைக்கப்பட்டு இருந்த கலசத்தில் கலைவாணியை ஆவாகனம் செய்து வைத்திருந்தார். அங்கிருந்த கலைவாணி அமரசிம்மன் குரலிலேயே ஆதிசங்கரருக்கு பதில் சொல்லி கொண்டிருந்தார். இதைத் தெரிந்து கொண்ட ஆதிசங்கரர், 'கலைவாணியை தொழுது, இந்து தர்மத்தை கேலி செய்யும் இவருக்கு நீங்கள் உதவலாமா? என்னதான் பக்தி என்றாலும் இது தகுமா?' என்று வேண்ட, அன்னை கலைவாணி கலசத்தில் இருந்து நீங்கினார். ஆதிசங்கரரின் கேள்விகளுக்கு விடை அளிக்கமுடியாமல் அமரசிம்மன் தோல்வி அடைந்தார். இந்து தர்மத்தின் பெருமையை உணர்த்திய ஆதிசங்கரர் அவரை ஆசீர்வதித்து விட்டுக் கிளம்பினார்.

அமரகோஷம்

எத்தனையோ படித்தும், எழுதியும் தன்னால் ஒரு வாதத்தில் வெற்றி பெற முடியவில்லையே என்ற விரக்தியில் அமரசிம்மன், தான் அதுவரை எழுதிய அத்தனை புத்தகங்களையும் எரியும் நெருப்பில் இட்டு அழிக்க தொடங்கினர். அதுபற்றி கேள்விப்பட்ட ஆதிசங்கரர் விரைந்து வந்து தடுக்கப் பார்த்தார். அப்போது கடைசியாக அவரிடம் இருந்தது அமரகோசம் என்ற அகராதி புத்தகமே. என்றென்றும் நிலைத்து நிற்கக் கூடிய அந்தப் புத்தகத்தை ஆசீர்வதித்து அவனிடமே கொடுத்து, அறிவை விரயம் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டார். மதவெறுப்பு கொண்டு இனி எவரையும் இகழாமல் எல்லோரும் போற்றும்விதமாக அந்த அமரகோசம் என்ற அகராதியை விரிவாக எழுதும்படி ஆசீர்வதித்தார். அப்படி உருவாகி இன்றும் புகழ்கொண்டு விளங்குவதுதான் அமரகோசம் என்ற அழியாத பொக்கிஷம். எதிரியையும் மன்னித்து, அவனது படைப்பையும் பாதுகாத்து, அதை சிரஞ்சீவித் தன்மை அடையச் செய்த மஹாஞானி ஸ்ரீ ஆதிசங்கரர், என்றென்றும் வணங்கத் தக்க கருணாசாகரம்தான்.


டிரெண்டிங் @ விகடன்