1,000 பொற்காசுகள், நவரத்தினக் கல், இரண்டு வராகன்கள்... எது மனிதனுக்கு உதவியது? அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உணர்த்திய பாடம்!

காபாரதக் காலத்தில், ஒரு கிராமத்தில் வயதான முதியவர் ஒருவர் வாழ்ந்துவந்தார். அவரால் எந்த வேலைக்கும் செல்ல முடியாததால், மனைவி பிள்ளைகளோடு மிகுந்த வறுமையில் வாடினார். ஒருநாள் மிகுந்த வருத்தத்தோடு ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். அப்போது பகவான் கிருஷ்ணர், அர்ஜூனன் இருவரும் அவ்வழியே வந்துகொண்டிருந்தனர். அவர்களைக் கண்ட அந்த வயதானவர் அவர்களிடம் சென்று தன் நிலையைச் சொல்லி எதாவது தர்மம் செய்யும்படி கேட்டார்.

பகவான் கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனன்

முதியவரின் நிலையைக் கண்டு மனமிரங்கிய அர்ஜூனன், அவருக்கு 1,000 பொற்காசுகளைக் கொடுத்து அனுப்பினான். எப்படியும் ஒரு வருடத்துக்கு நம் குடும்பத்துக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று நினைத்துக்கொண்டே வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார் அந்த முதியவர்.

நடந்ததை எல்லாம் கவனித்துக்கொண்டிருந்த கள்வன் ஒருவன் முதியவரிடம் வழிகேட்பதுபோல் பாவனை செய்து, தங்கக்காசுகளைக் கொள்ளை அடித்துச் சென்றுவிட்டான். மிகுந்த மன வருத்தத்தோடு வீட்டுக்குச் சென்றார் அந்த முதியவர்.

ஒரு மாதம் கழித்து, அர்ஜூனன் யதேச்சையாக அந்தப் பக்கம் வந்தான். அப்போதும் அதே மரத்தடியில் அமர்ந்திருந்தார் அந்த முதியவர். அவரிடம் சென்று நலம் விசாரித்தான் அர்ஜூனன். முதியவரோ பொருள் கொள்ளை போனது பற்றி அர்ஜூனனிடம் கூறினார். மீண்டும் மனமிரங்கிய அர்ஜூனன் விலை உயர்ந்த நவரத்தினக் கல்லை முதியவருக்குக் கொடுத்து, `பத்திரமாக எடுத்துச் செல்லுங்கள்’ என்று அறிவுரை கூறி அனுப்பிவைத்தான்.

இந்தமுறை மிகுந்த கவனத்துடன் ரத்தினக்கல்லை பாதுகாப்பாக வீட்டுக்குக் கொண்டுவந்தார் முதியவர். மேலும் மனைவி, பிள்ளைகளுக்குக்கூடத் தெரியாமல் பரண் மீதிருந்த ஒரு பானைக்குள் போட்டுவைத்தார்.

வீட்டில் யாரும் இல்லாத சமயங்களில் பானைக்குள் 'கல்' இருக்கிறதா என்று அடிக்கடி பார்த்துக்கொண்டார்.

ஒருநாள் முதியவரின் மனைவி வழக்கமாக தண்ணீர் பிடிக்கும் குடம் உடைந்துவிட்டது. அதனால் பரணில் இருக்கும் ஒரு குடத்தை எடுக்கலாம் என்று, நவரத்தினக் கல் இருக்கும் குடத்தை எடுத்துச் சென்றாள். அதற்குள் இருந்த கல்லை அவள் கவனிக்கவில்லை. குடத்தைக் கழுவும்போது கல் ஆற்றுக்குள் விழுந்துவிட்டது.

கிருஷ்ண பரமாத்மா

வீட்டில் வழக்கம்போல் கல் இருக்கிறதா என்று பார்த்த முதியவருக்கு கல் இருக்கும் பானையைக் காணவில்லை என்றதும் அதிர்ச்சியாகிவிட்டது. அங்கும் இங்கும் தேடினார். சரியாக அந்த நேரம் பார்த்து அவர் மனைவி அந்தப் பானையுடன் அங்கு வந்தார். வேகமாக மனைவியிடம் இருந்த குடத்தைப் பிடுங்கி அதற்குள் கையை விட்டுப் பார்த்தார். உள்ளே நவரத்தினக் கல் இல்லை. வேகமாக ஆற்றுக்கு ஓடி, தேடிப் பார்த்தார். ஒரு நாள் முழுவதும் தேடியும் நவரத்தினக் கல் கிடைக்கவில்லை.

மீண்டும் சில தினங்கள் கழித்து பகவான் கிருஷ்ணனும் அர்ஜூனனும் அந்த வயதான முதியவரைச் சந்தித்தனர். அப்போது வயதானவர் தனக்கு நடந்ததைச் சொல்லி மிகவும் வருத்தப்பட்டு கண்கலங்கினார். அப்போது கிருஷ்ணனின் பக்கம் திரும்பிய அர்ஜூனன், "இரண்டு முறை நாம் இவருக்கு உதவியும், அதை இவரால் அனுபவிக்க முடியவில்லை. அதிர்ஷ்டம் இல்லாத நபராக இருக்கிறாரே என்ன செய்யலாம்?" என்று  கேட்டான்.

பகவான் கிருஷ்ணரோ, "அர்ஜூனா, இந்த முறை நீ அதிகமாக எதுவும் செய்ய வேண்டாம். இரண்டு வராகன்களை மட்டும் கொடுத்தனுப்பு" என்று கூற, அர்ஜூனனும் அப்படியே செய்தான்.

இருந்தாலும் பரமாத்மாவிடம், "கிருஷ்ணா, இந்த வெறும் இரண்டு வராகன்களால் மட்டும் அவனுக்கு என்ன நன்மை நடந்துவிடப்போகிறது. இதற்கு நான் அவனுக்கு உதவி செய்யாமலேயே இருந்திருக்கலாமே..." என்று கூறினான்.

பகவானோ  "பொறுமையாக இரு, இப்போது வா, நாம் இருவரும் அந்த முதியவரின் பின்னால் சென்று என்ன நடக்கிறது என்பதைக் கவனிப்போம்" என்று அழைத்துச் சென்றார்.

கிருஷ்ணரும், அர்ஜுனனும் முதியவரைப் பின்தொடர்ந்து சென்றுகொண்டிருந்தனர்.

முதியவரின் வீட்டுக்குச் செல்லும் வழியில் மீனவன் ஒருவன் மீன் விற்றுக்கொண்டிருந்தான். முதியவரைக் கண்டதும் "இரண்டு மீனையும் வாங்கிக்கொள்ளுங்கள் முதியவரே, வெறும் இரண்டு வராகன்கள்தான்" என்றான்.

முதியவரும், `இந்த இரண்டு வராகன்களை வைத்து நம் குடும்பத்தின் ஒரு வேளை பசியைக்கூட போக்கமுடியாது. இன்னும் உயிரோடு இருக்கும் இந்த இரண்டு மீன்களை வாங்கி ஆற்றுக்குள்விட்டு அவற்றின் உயிரையாவது காப்பாற்றலாம்’ என்று முடிவுசெய்து, இரண்டு மீன்களையும் வாங்கினார்.

ஒன்றை ஆற்றுக்குள்விட்டார். மற்றொன்றை எடுத்து ஆற்றுக்குள்விடும் சமயத்தில், அதன் தொண்டையில் ஏதோ சிக்கி, அது மூச்சுவிடத் திணறுவதைக் கண்டார்.

கையைவிட்டு, அதையெடுத்து அதன் உயிரைக் காப்பாற்றிவிட நினைத்தார். கையைவிட்டு தொண்டைக்குள் சிக்கிய பொருளை எடுத்தார்.

அந்தப் பொருளைப் பார்த்ததும் மகிழ்ச்சிக் கடலின் எல்லைக்கே சென்றார். ஆம், அவரின் மனைவி ஆற்றுக்குள் தொலைத்த அதே நவரத்தினக் கல் அவருக்கு மீண்டும் கிடைத்துவிட்டது.

மகிழ்ச்சியில், "ஆ! சிக்கிவிட்டது, சிக்கிவிட்டது என் பொருள் சிக்கிவிட்டது" என்று கத்தவும், முதியவரிடம் தங்கக் காசுகளை திருடிச் சென்ற கள்வன் அவ்வழியே வரவும் சரியாக இருந்தது. அந்தக் கள்வனோ தன்னைத்தான் சொல்கிறார் என்று நினைத்து, வேறு பாதையில் ஓட ஆரம்பித்தான். இதைக் கவனித்துக் கொண்டிருந்த அர்ஜூனனும் கிருஷ்ணனும் அவனைப் பிடித்து விசாரிக்க, அவன், ``நான், இவருடைய தங்கக் காசுகளை திருடியவன். நான் வேண்டுமானால் அதைவிட அதிகமாகவே தருகிறேன். என்னை மன்னித்துவிடுங்கள். தண்டித்து விடாதீர்கள்" என்று கெஞ்சினான். அவன் முதியவரிடம் திருடிய 1,000 தங்கக்காசுகளை மட்டும் எடுத்து அவரிடம் கொடுத்துவிட்டு, ``மற்ற பொருள்களை எல்லாம் நீ யாரிடம் திருடினாயோ அவர்களிடமே கொடுத்துவிடு’’ என்று சொல்லி அனுப்பிவைத்தனர் கிருஷ்ண பரமாத்மாவும் அர்ஜூனனும்.

பகவான்

அர்ஜூனனுக்கு நடப்பது அனைத்தும் ஆச்சர்யமாக இருக்கவே, "என்ன நடக்கிறது கிருஷ்ணா, எனக்கு ஒன்றுமே புரியவில்லையே" என்றான்.

பகவான் கிருஷ்ணர், "அர்ஜூனா, முதலில் நீ இவருக்கு 1,000 தங்கக்காசுகள் கொடுத்தாய். அதை, தானும் தன் குடும்பத்தாருக்கும் மட்டும் வைத்துக்கொள்ளலாம் என்று நினைத்தார். அதன் பின்னர் நீ கொடுத்த நவரத்தினக் கல்லை தானும் அனுபவிக்காமல், தன் குடும்பமும் அனுபவிக்காமல் ஒளித்துவைத்தார். அதனால்தான் அந்த இரண்டு பொருள்களும் இவரிடம் தங்கவில்லை. ஆனால், நீ கடைசியாகக் கொடுத்த இரண்டு வராகன்களும் அளவில் குறைவாக இருந்தபோதும், தனக்கு உதவாவிட்டாலும் இன்னொரு உயிரைக் காப்பாற்றட்டுமே என்று சொல்லி தன்னலமில்லாமல் செயல்பட்டார் . இந்தத் தன்னலமில்லாத உயர்ந்த எண்ணமே அவர் தொலைத்த பொருள்களை எல்லாம் அவருக்கு மீட்டுத் தந்தது. இதில் ஆச்சர்யப்பட ஏதும் இல்லை. என்னுடைய செயல் இதில் ஏதுமில்லை. தன்னலமில்லாமல் செய்யப்படும் உதவிக்குக் கிடைக்கும் பலனானது அளவிட முடியாதது' என்று கூறவே அர்ஜூனனும் "ஆம், கிருஷ்ணா ! உண்மைதான்" என்று ஒப்புக்கொண்டான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!