வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (21/06/2017)

கடைசி தொடர்பு:07:30 (21/06/2017)

அரண்மனையைச் சத்திரமாக மாற்றிய துறவி! - ஜென் கதை #ZenStory

வ்வொரு நாளும் இந்த உலகத்தில் நம்மைச் சுற்றியிருக்கும், நாமே அறிந்திருக்காத நுட்பமான ஒரு விஷயத்தை, ஞானத்தை நமக்கு உணர்த்துவதுதான் ஜென் தத்துவம். `நீங்கள் எங்கே இருந்தாலும், அங்கே முழுமையாக இருங்கள்!’ என்பது ஒரு புகழ்பெற்ற வாசகம். இதன்படி வாழ்பவர்கள் வாழ்க்கையை நிறைவாக வாழ்கிறார்கள்; திருப்தி அடைகிறார்கள்; முழுமை பெறுகிறார்கள். இதை விளக்குகிற ஒரு ஜென் கதை இங்கே...

ஜென் 

அவர் ஒரு துறவி. அந்தப் பகுதி மக்களால் நன்கு அறியப்பட்டவர். அவர் ஒருநாள் நகரத்துக்கு வந்தார். நடை என்றால் அப்படி ஒரு வேக நடை. விடுவிடுவென எட்டு வைத்து அவர் நடந்து போக, சாலையின் இருபுறமும் இருந்த நகர மக்கள் அவரை வணங்கினார்கள்.

துறவி யாரையும் பார்க்கவில்லை; நகரச் சந்தடிகூட அவருக்கு உறைக்காததுபோல நடந்தார். அவர் கவனம் முழுக்க அரண்மனையை நோக்கியே இருந்தது. அரண்மனை வாயிலில் இருந்த காவலர்கள் அவரை அறிவார்கள். அவரை யாரும் தடுக்கவில்லை. வணங்கி வழிவிட்டார்கள்.

துறவி நேராக உள்ளே போனார். அந்த மாட மாளிகைக்குள் அவர் இதற்கு முன்னர் வந்ததில்லை. இருந்தாலும், அந்த இடம் நன்கு பழக்கப்பட்டதுபோல தாழ்வாரங்களையும் பெரிய பெரிய அறைகளையும் கடந்து உள்ளே போனார். அரண்மனை தாதிகள், பணியாளர்கள், காவலர்கள், அதிகாரிகள் யாரையும் அவர் சட்டை செய்யவில்லை. துறவி, அரசனின் பிரமாண்ட அறையை அடைந்தார். அரசனுக்கு முன்னே போய் நின்றார். அரசன் கல்வி, கேள்விகளில் சிறந்தவன். தரும சிந்தனை உள்ளவன். நல்லாட்சி வழங்குபவன் என மக்களிடம் பெயர் பெற்றவன். அவன் எழுந்து நின்று துறவியை வணங்கினான். பிறகு, கேள்விக்குறியோடு துறவியைப் பார்த்தான்.

ஜென்

``குருவே... வருக, வருக! முதலில் அமருங்கள். உங்கள் வருகையால் என் அரண்மனை புனிதம் அடைந்தது’’ என வரவேற்றான். பிறகு, ``என்ன வேண்டும் குருவே... ஆணையிடுங்கள்!’’ என்று கேட்டான்.

``ஒன்றும் இல்லை. இந்த விடுதியில் எனக்குத் தூங்கக் கொஞ்சம் இடம் வேண்டும்.’’

இந்தப் பதில் அரசனைத் துணுக்குற வைத்தது. பரம்பரை பரம்பரையாக வாழும் அரண்மனை. இவ்வளவு பிரமாண்ட மாளிகையைப் பார்த்து இந்தத் துறவி `விடுதி’ என்கிறாரே என்ற கோபமும் அவனுக்கு வந்தது. ஆனாலும் கோபத்தை அடக்கிக்கொண்டான். ``குருவே... இது விடுதி அல்ல. என் அரண்மனை!’’ என்றான் கடுகடுத்த குரலில்.

``சரி நான் உன்னை ஒரு கேள்வி கேட்கலாமா?’’

``கேளுங்கள் குருதேவா.’’

``இந்த அரண்மனை இதற்கு முன்னால் யாருக்குச் சொந்தமாக இருந்தது?’’

``என் தந்தைக்குச் சொந்தமாக இருந்தது.’’

``அவர் எங்கே?’’

``அவர் இறந்துவிட்டார்.’’

``அவருக்கும் முன்னால் இது யாருக்கு சொந்தமாக இருந்தது?’’

``என் பாட்டனாருக்கு.’’

``சரி. அவர் இப்போது எங்கே?’’

``அவரும் இறந்துவிட்டார்.’’

``ஆக, உன் தந்தை, பாட்டனார் இருவரும் இங்கே சில காலம் வந்து தங்கியிருக்கிறார்கள். வந்த வேலை முடிந்ததும் கிளம்பிப் போய்விட்டார்கள். அப்படியென்றால் இது விடுதிதானே! நீ என்னடாவென்றால் இதை அரண்மனை என்கிறாய்.’’

ஜென் நிலை 

அரசன் துறவியின் பதிலைக் கேட்டுத் திகைத்துப் போய்விட்டான். `துறவி கூறியது உண்மைதானே! இருக்கும் சின்ன வாழ்க்கையை வாழ மனிதன் வந்து தங்கிச் செல்லும் இடம்தானே இந்த பூமி. அதில் இருக்கும் இந்த அரண்மனை எனக்கும் என் அப்பாவுக்கும் என் தாத்தாவுக்குமேகூட விடுதி என்பதை மறுக்க முடியுமா? எவ்வளவு பெரிய தத்துவத்தை, இவ்வளவு எளிமையாக துறவி விளக்கிவிட்டாரே!’ என வியந்துபோனான். `என் அரண்மனை’ என்கிற வார்த்தையைச் சொன்னதற்காக வெட்கப்பட்டான். துறவியிடம் மன்னிப்புக் கோரினான். `நீங்கள் எங்கே இருந்தாலும், அங்கே முழுமையாக இருங்கள்’ என்கிற வாசகம் அந்த அரசனுக்கும் பொருந்தும். அரசன் முழுமை பெற்றவனாக இருந்திருந்தால், துறவி கேட்டவுடனேயே உண்மையை உணர்ந்திருந்திருப்பான். முழுமையான, நிஜமான நிறைவை நோக்கி மனிதனை நகர்த்துவதே ஜென் தத்துவம். அது அரசனுக்குப் புரிபட்டபோது துறவி அங்கே இல்லை. அவர் தன் வழியில் போய்க்கொண்டிருந்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்