வெளியிடப்பட்ட நேரம்: 19:54 (21/06/2017)

கடைசி தொடர்பு:19:54 (21/06/2017)

சனி தோஷம் நீக்கும், சகல வளங்களும் அருளும் கூர்ம ஜயந்தி!

னைத்து ஜீவராசிகளிலும் ஒன்றேயான இறைவன் நிறைந்திருக்கிறான். இந்தப் பேருண்மையை நமக்கெல்லாம் உணர்த்துவதுபோலவே மகா விஷ்ணுவின் அவதாரங்கள் அமைந்திருக்கின்றன. அதிலும் திருமாலின் பத்து அவதாரங்கள் பரிணாம வளர்ச்சியை மட்டுமின்றி, சகல ஜீவராசிகளின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்கூறுகின்றன. நீரில் வாழும் மீனாக மச்ச அவதாரம் எடுத்த திருமால், அடுத்து நீரிலும் நிலத்திலும் வாழும் `கூர்மம்’ எனப்படும் ஆமையின் திருவுருவம் எடுத்தார், தேவர்களைக் காத்தார். ஆமை என்றாலே சகுன விதிகளின்படி தீயது என்று நம்பும் வழக்கம் நம்மவர்களுக்கு உண்டு. ஆனால், ஆமை என்பது புலன்களை அடக்கக் காட்டப்படும் ஓர் உதாரணம். `ஆமையைப்போல ஒடுங்கு, அல்லது அடங்கு’ என்று கூறப்பட்டதாலேயே அது தீய சகுனம் என நம்பப்பட்டுவருகிறது. உண்மையில், அது உயர்ந்த பிராணி என்பதால்தான் ஸ்ரீமன் நாராயணனே அந்த வடிவம் தாங்கி பூவுலகைக் காத்தார். அத்தகைய கூர்ம அவதாரம் தோன்றிய கூர்ம ஜயந்தி தினம்தான் இன்று. ஆனி மாத கிருஷ்ண பட்சத்தில், அதாவது தேய்பிறை துவாதசி திதியில் திருமால் கூர்ம அவதாரம் எடுத்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. அதன்படி இன்றைய தினம், `கூர்ம ஜயந்தி’ என்று கொண்டாடப்படுகிறது.

கூர்ம ஜெயந்தி

அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் சதாகாலமும் நடைபெற்ற யுத்தங்களில் தேவர்களுக்கு அழிவு ஏற்பட்டது. அதன் காரணமாக துன்புற்ற தேவர்கள், தாங்கள் அழியாதிருக்கும் வழியைத் தேடி மகா விஷ்ணுவிடம் சென்றனர். மகா விஷ்ணு கூறியபடி பாற்கடலைக் கடைந்து அமிர்தம் பெற முடிவு செய்யப்பட்டது. பாற்கடலின் நாயகரான பரந்தாமனே முன்னின்று அந்தச் செயலைத் தொடங்கினார். தேவர்கள் ஒருபுறமும், அசுரர்கள் மற்றொரு புறமும் பிடித்துக்கொள்ள மந்தர மலையை மத்தாகவும், வாசுகி பாம்பைக் கயிறாகவும் கொண்டு பாற்கடல் கடையப்பட்டது. பருமன் தாங்காமல், அடிக்கடி புரண்டு விழுந்து கடலில் மூழ்கியது மந்தர மலை. மலை வீழ்ந்து போவதும், வாசுகி தவித்துப் போவதும் தொடர்ந்து நடக்கவே, தேவர்களும் அசுரர்களும் சோர்ந்து போயினர். இது நடக்காத காரியம், வீண் முயற்சி என்றும் பேசத் தொடங்கினர்.

கூர்ம அவதாரம்

கடலைக் கடையாமல் அமிர்தம் மட்டுமல்ல, எண்ணற்ற பொக்கிஷங்களும் கிடைக்காது என்று உணர்ந்த தேவேந்திரன் உள்ளிட்ட தேவர்கள் திருமாலைச் சரண் அடைந்தனர். பக்தர்களைக் காக்கும் பரந்தாமன், தேவர்களையும் காக்கத் திருவுள்ளம் கொண்டார். மலையைத் தாங்குவதற்காக மிகப்பெரிய கூர்ம அவதாரம் எடுத்தார். ஆம், பார்ப்பவர் வியக்க பிரமாண்ட கூர்ம வடிவம் கொண்ட திருமால், பாற்கடலில் இறங்கி மிதந்தவாறே மலையை தாங்கிக்கொண்டார். இதனால், மலை நேராக நிமிர்ந்தது, வாசுகியால் கடையப்பட்டது. அமிர்தம் மட்டுமின்றி காமதேனு, கற்பக விருக்ஷம், உச்சைசிரவஸ் எனும் வெண்குதிரை, அப்சர கன்னிகள், வாருணி தேவி, பஞ்ச தருக்கள், கௌஸ்துப மாலை, சந்திரன், ஸ்யமந்தகமணி, மது, சுரா தேவி, ஜேஷ்டா தேவி, அவரின் தங்கையான திருமகள் என வரிசையாகப் பல அற்புதங்கள் தோன்றிய பின்னர், இறுதியாக தேவலோக சஞ்சீவினியான அமிர்தத்தை ஏந்தியவாறு தன்வந்திரியும் தோன்றினார். இப்படி தாங்கொணாத வலியை, தான் ஏற்றுக்கொண்டு தேவர்களும், பூவுலகும் நன்மை பெற செல்வங்களை அளித்தவர் கூர்ம மூர்த்தியான திருமால்.

கூர்ம ஜெயந்தி

உருவு கண்டு இகழாமல், அதன் பெருமை கண்டு போற்ற வேண்டும் என்பதே கூர்ம அவதாரத்தின் நோக்கம். பணிவுகொண்டு மலை சுமந்த கூர்ம மூர்த்தி எல்லாவற்றையும் மீட்டுக்கொடுத்தார். `கூர்ம ஜயந்தி’ எனும் இந்தத் திருநாளில் அவரை வணங்கி பூஜிப்பது மட்டுமின்றி பெரியவர்களிடம் பணிவு எனும் உயரிய விஷயத்தையும் கவனத்தில்கொள்வது நல்லது. குடும்ப பாரத்தைச் சுமக்கும் தாய், தந்தையரை இந்த நாளில் வணங்குவது விசேஷம். சனி பகவானின் பிடியில் சிக்கித் தவிப்பவர்கள் கூர்ம மூர்த்தியை இந்த நாளில் வணங்கினால் நிவர்த்தி பெறலாம். திருவரங்கம், அழகர் கோயில் ஆகிய தலங்களில் உள்ள கூர்ம பெருமாளை வணங்கியும் ஆசி பெறலாம். பக்தர்களுக்காக பாரம் சுமந்து பாதுகாத்த கூர்ம பகவானை இந்த கூர்ம ஜயந்தி தினத்தில் வணங்கி வளம் பெறுவோம்.

'ஓம் தராதராய வித்மஹே

பாசஹஸ்தாய தீமஹி

தன்னோ கூர்ம ப்ரசோதயாத்'

எனும் கூர்ம காயத்ரி மந்திரத்தைப் பலமுறை ஓதி வணங்குவோம்.


டிரெண்டிங் @ விகடன்