ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்த இரவு 'லைலத்துல் கத்ர்'! ரம்ஜான் சிறப்புக் கட்டுரை- 6 | Laylat al-Qadr is better than a thousand months - Ramjan special article-6

வெளியிடப்பட்ட நேரம்: 07:12 (22/06/2017)

கடைசி தொடர்பு:07:12 (22/06/2017)

ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்த இரவு 'லைலத்துல் கத்ர்'! ரம்ஜான் சிறப்புக் கட்டுரை- 6

``உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியப் பெருமக்களால் ரமலான் நோன்பு தீவிரமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்படும் 30 நாள்களில், கடைசிப் பத்து நாள்களின் ஒற்றைப் படை இரவுகளில் 'லைலத்துல் கத்ரை'த் தேடுங்கள்.
அதாவது 21, 23, 25, 27, 29 ஆகிய ஒற்றைப்படை இரவுகளில் ஏதேனும் ஓர் இரவுதான் ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்த மாட்சிமைமிக்க இரவு. அதனால்தான் ரமலானில் இறுதிப் பத்து நாள்களில் முஸ்லிம்கள் இரவெல்லாம் நின்று வணங்குவார்கள். ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்த இரவு 'லைலத்துல் கத்ர்'  என்கிறார் வி.எஸ்.முகம்மத் அமீன். அவரது விளக்கக் கட்டுரை இதோ...

அதிசயங்களை ஒன்றுதிரட்டி ஒரே நேரத்தில் பார்க்கவேண்டுமா? அதற்காக நீங்கள் எங்குமே செல்லவேண்டாம். உங்களை நீங்களே பாருங்கள்...! மனிதனுக்குள் எத்தனை அதிசயங்கள் ஒளிந்துகிடக்கின்றன.

மைக்ரோ வினாடியில் எதிரே இருக்கும் பிம்பத்தைப் படம்பிடித்து, வண்ணம் பிரித்து, தரம்பிரித்துக் காட்டுகின்ற உங்கள் கண்களைவிட அதிசயம் என்ன வேண்டியிருக்கிறது. ஐம்பது கிராம்கூடத் தேறாத நாக்கு நொடிக்கும் குறைவான நேரத்தில் சுவை சுட்டுகிறதே எப்படி?அந்த நாவை மேலும் கீழும் அசைக்கிறோம். அது எத்தனை வகையான மொழிகளாக உருப்பெருகின்றன? நீங்கள் செலுத்துகின்ற இந்திரியத்துளியை என்றாவது சிந்தித்துப் பார்க்கின்றீர்களா..? அதெப்படி கைகால் முளைத்து மனிதானாகப் பிறப்பெடுக்கிறது?

சிறந்த இரவு

 

இத்தனை நுட்பமாக மனிதன் படைக்கப்பட்டிருக்கின்றான். அவன் சுவாசிப்பதற்காக காற்று மண்டலம் ஓய்வில்லாமல் இயங்கிக்கொண்டிருக்கிறது. அவனுக்கான உணவு மண் பிளந்து வெளிவருகிறது. அவன் மீது நேசம்கொள்ள உறவுகளின் இதயங்கள் துடிக்கின்றன. இத்தனை அருட்கொடைகளிலும் உச்சமாக அவனுக்கு வழிகாட்ட வான்மறையும், வாழ்ந்துகாட்ட தூதர்களும் அனுப்பப்பட்டிருக்கின்றார்கள்.அமீன்

இவ்வளவு அருட்கொடைகளுக்கும்  நன்றி செலுத்துவதற்காகத்தான் இறைவனை மனிதன் வணங்கி வழிபடவேண்டும். அதிபதி கொடுத்தான். அடிமை நன்றி செலுத்துகிறான். சரிக்குச் சரி! ஆனால், இறைவன் மனிதனுக்கு மிகச்சிறந்த நிலையான சுவனத்தைக் (சொர்க்கம்) கூலியாகத் தருகின்றான்.
தன்னை அடிபணிந்து வாழ்பவர்களுக்கு அள்ளி அள்ளித் தருகின்றான்.

இந்த ரமலான் மாதத்தில் நன்மைகளைப் பல மடங்காக்கித் தருகின்றான். அந்த நன்மைகளில் ஒரு பம்பர் பரிசையும் இறைவன் அறிவிக்கின்றான்.

''திண்ணமாக நாம் இதனை (குர்ஆனை) மாட்சிமை மிக்க இரவில் இறக்கி வைத்தோம். மாட்சிமை மிக்க இரவு என்னவென்று உமக்குத் தெரியுமா என்ன? மாட்சிமை மிக்க இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்ததாகும்”  -        திருக்குர் ஆன் 97:1-

ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்த ‘லைலத்துல் கத்ர்’ என்னும் அந்த இரவு புதைந்துள்ள புண்ணிய மாதம்தான் ரமலான் மாதம். இந்த மாதத்தில் 30 நாள்களில் எந்த இரவு மாட்சிமை நிறைந்தது? என்ற வினாவுக்கு நபி (ஸல்) அவர்கள் பதிலளிக்கின்றார்கள்.

''ரமலான் மாதத்தில் கடைசிப் பத்து நாள்களின் ஒற்றைப் படை இரவுகளில் 'லைலத்துல் கத்ரை'த் தேடுங்கள்''
அதாவது 21, 23, 25, 27, 29 ஆகிய ஒற்றைப்படை இரவுகளில் ஏதேனும் ஓர் இரவுதான் ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்த மாட்சிமை மிக்க இரவு. அதனால்தான் ரமலானில் இறுதிப் பத்து நாள்களில் முஸ்லிம்கள் இரவெல்லாம் நின்று வணங்குவார்கள்.

சகோதரத்துவம்

''ரமலானில் இறுதிப் பத்து நாள்கள் வந்துவிட்டால், நபி (ஸல்) அவர்கள் (வணக்கங்களால்) இரவை உயிரோட்டமுள்ளதாக ஆக்குவார்கள். தமது குடும்பத்தாரை (தொழுகைக்காக) எழுப்புவார்கள்''.

அந்த இரவில், இறைவனை எவ்வாறு துதிக்கவேண்டும்?

இறைவனின் தூதரே! 'லைலத்துல் கத்ர்' இரவில் நான் என்ன கூறவேண்டும்?’என்று நபிகளாரின் மனைவி ஆயிஷா(ரலி) கேட்டபோது ‘யா அல்லாஹ்! நிச்சயமாக நீயே மன்னிப்பவன். மன்னிப்பை விரும்புகிறாய். ஆகவே, என்னை மன்னிப்பாயாக!’ என்று பிரார்த்திக்குமாறு நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்