வெளியிடப்பட்ட நேரம்: 17:55 (25/06/2017)

கடைசி தொடர்பு:17:55 (25/06/2017)

பெருநாள் தரும் மகத்தான பாடங்கள்! - ரம்ஜான் சிறப்பு கட்டுரை-7

“இஸ்லாம் கட்டுப்பாடான மார்க்கம். அங்கு மகிழ்வுக்கு இடமில்லை.பெண்களுக்கு உரிமையில்லை. இவ்வுலக வாழ்வில் ஈடுபாடு இல்லை போன்ற அவதூறுகள் இப்பெருநாள் நிகழ்வுகளுக்கு முன் காணமற்போய்விடட்டும்'' என்பதோடு, “இறைவன் அருளிய பெருநாள், இன்பம் நல்கும் திருநாள்’’ என்கிறார் வி.எஸ்.முஹம்மத் அமீன். ரமலான் நோன்பை எப்படி அனுசரிக்க வேண்டும் என்பதையும் விளக்கிக் கூறுகிறார்.

பெருநாள்

நோன்புக்கான அறிவிப்பை ஏந்தி ரமலான் பிறை வந்தது. தினமும் மெள்ள வளர்ந்தது. நிறைந்தது. பின் தினமும் மெல்லத் தேயத் தொடங்கும். தேய்ந்து மறையும். பின் மீண்டும் ஷவ்வாலின் பிறை கருமேகத்தில் சின்னதாகப் புன்முறுவலித்து எட்டிப்பார்க்கும். பிறை தென்பட்டதும், ‘இறைவன் மிகப்பெரியவன்’ என்னும் புகழ்மொழி நன்றிப்பெருக்கோடு ‘அல்லாஹு அக்பர்’ என்று விண்தொட்டு நிற்கும்.அமீன்

பெருநாள் பிறை தென்பட்டதும், உள்ளத்தில் ஊற்றெடுக்கும் உற்சாகம் பெருவெள்ளமாகப் பெருகி மகிழ்ச்சி நதி வீதியோடும். பசித்திருந்த வயிறுகளில் பால்சுரக்கும். விழித்திருந்த விழிகளில் ஒளி பிறக்கும். 'ஸதக்கதுல் பித்ர்' என்னும் பெருநாள் தர்மத்தை முஸ்லிம்கள் வழங்கத் தொடங்குவர்.

அதிகாலைத் துயிலெழுந்து வழக்கம்போல் 'ஃபஜ்ர்' என்னும் வைகறைத் தொழுகையைத் தொழுவார்கள். நேரத்துடன் குளித்து, புத்தாடையணிந்து, வண்ணப் பூக்களாக மக்கள்தோட்டம் மலரத் தொடங்கும். ஒரு மாதம் நோன்பிருந்தனர். இன்று பெருநாளல்லவா உணவருந்துவர்.

நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்காகச் செல்லும்போது உணவருந்தாமல் செல்வார்கள். ஆனால், நோன்புப் பெருநாள் தொழுகைக்காகச் செல்லும் முன் உணவருந்துவார்கள். பேரீச்சைப் பழங்களை ஒற்றைப்படையில் உண்பது அவர்கள் வழக்கம். பழங்களைச் சாப்பிட்டுவிட்டு, தொழுகைக்காக திடலேகுவார்கள்.
வழக்கமாகத் தொழுகை யாவும் பள்ளிவாசல்களில்தான் நடைபெறும். ஆனால், பெருநாள் தொழுகையை நபி(ஸல்) அவர்கள் மைதானத்திலே சென்று தொழுதார்கள். ஒவ்வொரு தொழுகைக்கும் 'பாங்கு' எனப்படும் 'தொழுகை அழைப்பு' விடுக்கப்படும்.ஆனால், பெருநாள் தொழுகைக்கு 'அழைப்பு' எதுவும் இல்லை.

குளித்துமுடித்து, புத்தாடையணிந்து காலையிலேயே மக்கள் சாரை சாரையாகத் திடலுக்கு வரத் தொடங்கிவிடுவார்கள். நபி(ஸல்) அவர்கள் திடலுக்குச் செல்லும்போதும், தொழுகை முடித்து திடலிலிருந்து திரும்பும்போதும் வெவ்வேறு பாதைகளைப் பயன்படுத்துவார்கள். ஏனென்றால், போகும்போது ஒருவழியாகச் சென்றால், அப்பகுதி மக்களைச் சந்திப்பார்கள். திரும்பும்போது மறுவழியில் இன்னும் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பிருக்கும் அல்லவா..?

தொழுகை

வெள்ளிக்கிழமைகளில் 'ஜும் - ஆ' எனும் சிறப்புத்தொழுகை பள்ளிவாசல்களில் நடைபெறும். அப்போது முதலில் சிறப்புச் சொற்பொழிவு இருக்கும். அதன் பின்னரே தொழுகை நடைபெறும். ஆனால், பெருநாள்களின்போது முதலில் தொழுகை நடைபெறும். பின்னர் மக்களுக்குத் தேவையான உபதேசங்களை வழங்குவதற்காகச் சொற்பொழிவு நடைபெறும்.

நபி(ஸல்) அவர்கள் திடலுக்குச் சென்றதும் தொழுகை நடத்துவார்கள். பின்னர் சொற்பொழிவு நிகழ்த்துவார்கள். அதன்பிறகு தோழர் பிலாலை அழைத்துக்கொண்டு பெண்கள் பகுதிக்குச் சென்று தர்மம் செய்வதை வலியுறுத்தி உரை நிகழ்த்துவார்கள். பெண்கள் தர்மம் செய்வார்கள். பின்னர் அவர்கள் இல்லம் திரும்புவார்கள்.

தொழுகை முடிந்ததும் ஆனந்தப்பேருவகையால்  ஒருவரையொருவர் ஆரத்தழுவி அன்பையும் வாழ்த்துகளையும் பரிமாறிக்கொள்வார்கள். பெருநாள் என்பது அவ்வளவுதான்! ஆனால், அந்தப் பெரு நாள்கள் தரும் மகத்தான பாடமும் செய்தியும் என்ன தெரியுமா..?

இஸ்லாம் கூறும் இரு பெருநாள்களும் வெறும் கொண்டாட்டத்துக்கான நாள்களல்ல. வாணவேடிக்கை, வேட்டு, ஆடல், பாடல் என எந்த ஆரவாரமும் இல்லாத சாந்திமிக்க அமைதித் திருநாள்களே இப்பெருநாள்கள். வருடப் பிறப்பு வந்தால்கூட கோடிக்கணக்கில் குடித்துக் கும்மாளமிடும் சூழலுக்கிடையே கண்ணியம் மிளிரும் புண்ணிய நாள்களே பெருநாள்கள். இந்தத் திருநாள்களின்போது ‘இறைவன் மிகப்பெரியவன்’ எனும் புகழ்மொழியான ‘அல்லாஹு அக்பர்’ என்று அதிகமதிகம் இறைவனைப் புகழ வேண்டும்.

மனிதர்கள் அனைவரும் ஒரே சமுதாயம். உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இல்லை. நிறம், குலம் என்ற வேறுபாடுயில்லை. எவ்வளவுதான் பணம் படைத்தவனாயினும் இறைவன் திருமுன் அவனும் அடிமையே! `இறைவா..! நாங்கள் அடிமைகளே.. நீயே மிகப்பெரியவன்’ என்று உரத்துச் சொல்ல வேண்டும். 

ச்கோதரத்துவம்

‘இறைவா.. நீயே மிகப்பெரியவன்’ என்று கோடீஸ்வரனும் சொல்வான். இறைவன் பெரியவன். அவன் மட்டுமே பெரியவன். மற்றவர்கள் அடிமைகள். ஆதத்தின் பிள்ளைகள் அனைவரும் சமம். என்னதான் பளிங்குக் கற்களாலான மாட மாளிகை இருந்தாலும், கோடீஸ்வரனும் பெருநாள் தொழுகைக்குத் திடலுக்கு வர வேண்டும்.தோளோடு தோள் சேர்ந்து நிற்க வேண்டும். இறைவன் திருமுன் சிரம்பணிய வேண்டும். 

பசியறியும் பயிற்சி, தியாகத்தின் பாடம் என்ற இரு பெரும் பேருண்மைகளைப் புரியவைத்து அதற்கு நன்றிசெலுத்தும் தருணங்களாகவே 'பெருநாள்கள்' கொண்டாடப்படுகின்றன. பெருநாள் என்பது இறைவனை வணங்குவது, அவன் புகழ்பாடுவது, அவனுக்கு நன்றி செலுத்துவது என்ற அம்சங்கள்தான். இப்பெருநாளின்போது நபி(ஸல்) அவர்கள் உரை நிகழ்த்துவார்கள். இறைவனைப் புகழ்ந்தவண்ணம் இறை அச்சத்தை அடிப்படையாகக்கொண்ட அந்த உரையில் மனிதனிடம் களையப்படவேண்டிய தீமைகளைச் சுட்டிக்காட்டி, அவற்றைக் கண்டித்தும் நன்மைகளை அடையாளப்படுத்தி அவற்றை ஊக்கப்படுத்தவும் செய்வார்கள்.

ஒன்று கூடினோம்; தொழுதோம்; கலைந்தோம் என்றில்லாமல், இன்றையச் சூழலில் மனிதனிடம் மிகுந்துவரும் தீமைகளை எச்சரித்தும், நன்மைகளை மேலாங்கச் செய்ய வலியுறுத்தியும் பெருநாள் தொழுகையின்போது உரை நிகழ்த்தப்படும்.

ஈரம் கனிந்த வீரம்

அதிகாலைத் துயிலெழுந்து, ஃபஜ்ர் என்னும் தொழுகை முடிந்து, குளித்து புத்தாடையணிந்து, உணவருந்திவிட்டு திடல் சென்று தொழுது, உரைகேட்டு, வீடு திரும்புவதுடன் பெருநாளின் கடமை முடிந்துவிடுகிறது. இவை தவிர அந்த நாளில் வழக்கமான ஐந்து வேளைத் தொழுகையைத் தொழ வேண்டும்.

'இறைவன் மிகப்பெரியவன்' என்பதே பெருநாளின் தாரக மந்திரம் எனவே, அந்த நாளில் இறைவனின் பேரருளை நினைந்து அவனை அதிகமதிகம் நினைவுகூர வேண்டும்

ஹஜ்ஜுப் பெருநாளாக இருந்தால், அன்று தொழுகை முடிந்து வந்ததும் ஆடு, மாடு, ஒட்டகம் இவற்றில் ஏதேனும் ஒரு பிராணியை இறைவனுக்காக அறுத்துப் பலியிடவேண்டும். இவ்வாறு அறுப்பது இறைவனுக்குப் படையல் செய்வதற்காக அல்ல. 

ஏழைகளுக்கும் உறவினர்களுக்கும் இறைச்சியைப் பங்கிட்டுக் கொடுக்கவேண்டும். நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் தியாக வாழ்வை நினைவுகூரும் பொருட்டு இக்காரியங்கள் நடைபெற்றாலும், அனைத்துக்கும் அடிநாதமாக இருப்பது இறை அச்சம்தான். 
இறைக் கட்டளை எதுவாயினும், கீழ்ப்படிவோம் என்பதை உரத்துச் சொல்லத்தான் இந்த ஏற்பாடு. 'இறைவழியில் எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயார்' என்று அடியான் இறைவன் முன் உறுதியாகச் சொல்லும் வழிபாடு இது!

நபி (ஸல்) அவர்களின் பெருநாள் தினத்திலிருந்து ஓர் அழகிய காட்சி

பெருநாளன்று நபி(ஸல்) அவர்களுக்கு அருகில் இரண்டு சிறுமிகள் 'புஆஸ்' எனும் போர் குறித்த ஓர் விழிப்புஉணர்வுப் பாடலை பாடினார்கள். 'தஃப்' எனும் கொட்டடித்து சிறுமிகள் மகிழ்வோடு பாடிக்கொண்டிருக்க... அதனைக் கண்ட அபூபக்கர் என்ற நபித்தோழர் ‘என்ன இது இறைவனின் தூதர் முன்னால் சைத்தானின் இசைக்கருவிகளை வாசிக்கின்றீர்களா..?’ எனச் சிறுமிகளை அதட்டுகிறார்.
உடனே நபி(ஸல்) அவர்கள் ‘அபூபக்கரே... அவர்கள் பாடட்டும்! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் பெருநாள்கள் உண்டு. இன்று நமது 'சமுதாயத்தின் பெருநாள்’ என்று சொல்கிறார்கள்.

ஆன்மிகத்தலைவராக, ஆட்சியாளராக இருந்தபோதும், நபி(ஸல்) அவர்கள் அருகில் பயமற்று சிறுமிகள்கூட பாடி மகிழ முடிகிறதென்றால், நபிகளார் எவ்வளவு எளிமையாக மக்களோடு வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

மனதை மயக்குகின்ற சலனங்களை விதைக்கின்ற தீயப் பாடல்களையும் இசையையும் இஸ்லாம் கண்டிக்கின்ற வேளையில், மகிழ்வின் வெளிப்பாடாக நல்ல வார்த்தைகளை மெல்லிய இசையால் பாடுவதைத் தடைசெய்யவுமில்லை.

மற்றொரு காட்சி

ஒரு பெருநாளின்போது, சூடான் நாட்டவர்கள் வீர விளையாட்டுக்களை விளையாடிக்கொண்டிருந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது மனைவி ஆயிஷா(ரலி) அவர்களிடம் ‘இந்த விளையாட்டை  நீ பார்க்க ஆசைப்படுகிறாயா?’ எனக் கேட்டார்கள். `ஆம்’, என்றார் அன்பு மனைவி..! உடனே அவர்கள் தன் மனைவி ஆயிஷாவை தனக்குப் பின்புறமாக தன் கன்னம் அவர்கள் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தார்கள். 

பிறகு வீரர்களை நோக்கி,  ‘அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்’ என்று கூறினார்கள். ஆயிஷா(ரலி) அவர்கள் போதுமென்று சொல்லும் வரை விளையாட்டை ரசித்தார்கள்.

பெருநாள் ஈரம் மட்டுமல்ல, வீரமும் விரவி நிற்கும் நாள். விளையாட்டை ரசிக்கவேண்டுமென்றால், விளையாட்டில் ஈடுபாடும், ஆர்வமும் இருக்கவேண்டும் அல்லவா..!

இறைத்தூதர் நபி(ஸல்) வீரமிக்கவர்களாகவும் திகழ்ந்ததற்கான அடையாளமிது! வெளிஉலகில் எத்தனை நல்லவிதமாக நடந்துகொண்டாலும், வீட்டில் சிலர் நடந்துகொள்ளும் முறை சகிக்க இயலாது. அண்ணலார் தம் இல்லத்தரசியையும் விளையாட்டைப் பார்க்க அனுமதித்து, அவர்கள் சிறந்த குடும்பத்தலைவர் என்பதையும் நிருபித்துள்ளார். இஸ்லாம் கட்டுப்பட்டியான மார்க்கம். அங்கு மகிழ்வுக்கு இடமில்லை. பெண்களுக்கு உரிமையில்லை. இவ்வுலக வாழ்வில் ஈடுபாடு இல்லை போன்ற அவதூறுகள் இப்பெருநாள் நிகழ்வுகளுக்கு முன் காணமற்போய்விடுகின்றன.

அனைவருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துகள்!

முந்தைய பாகத்தைப் படிக்க இங்கே க்கிள் செய்யவும்..

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்